விளையாட்டு

சதமடித்து காப்பாற்றிய பண்ட் ; தென்னாப்பிரிக்காவிற்கு 212 டார்கெட்.. தொடரை வெல்லுமா இந்தியா ?

212 ரன்கள் டார்கெட்டை நோக்கி தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்துக் கொண்டிருக்கிறது. இந்திய பௌலர்கள் அசத்துவார்களா? தொடரை வென்று இந்தியா சாதனை படைக்குமா?

சதமடித்து காப்பாற்றிய பண்ட் ; தென்னாப்பிரிக்காவிற்கு 212 டார்கெட்.. தொடரை வெல்லுமா இந்தியா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இரண்டு அணிகளும் 1-1 என சமநிலையில் இருப்பதால் இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும். தொடரின் முடிவை தீர்மானிக்கப்போகும் இந்த போட்டி இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 13 ரன்கள் முன்னிலையை பெற்றிருந்தது. இந்திய அணியின் கேப்டனான கோலி சிறப்பாக ஆடி 79 ரன்களை எடுத்திருந்தார். பந்துவீச்சில் பும்ரா நன்றாக வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இரண்டாம் நாளான நேற்றே இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருந்தது. ஓப்பனர்களான கே.எல்.ராகுலும் மயங்க் அகர்வாலும் சீக்கிரமே அவுட் ஆகி ஏமாற்றியிருந்தனர். விராட் கோலியும் புஜாராவும் கூட்டணி அமைத்ததோடு இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்திருந்தது.

இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று கோலியும் புஜாராவும் ஆட்டத்தை தொடர்ந்திருந்தனர். மார்கோ யான்சன் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே புஜாரா லெக் கல்லியில் கேட கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். 33 பந்துகளில் 9 ரன்களை புஜாரா எடுத்திருந்தார். அடுத்ததாக உள்ளே வந்த ரஹானேவும் 9 பந்துகளில் 1 ரன்னை மட்டும் எடுத்து ரபாடாவின் பந்தில் எதிர்பாராத பவுன்ஸில் எட்ஜ் ஆகி வீழ்ந்தார்.

சதமடித்து காப்பாற்றிய பண்ட் ; தென்னாப்பிரிக்காவிற்கு 212 டார்கெட்.. தொடரை வெல்லுமா இந்தியா ?

இதன்பிறகு, கேப்டன் விராட் கோலியும் ரிஷப் பண்ட்டும் இணைந்தனர். விராட் கோலி கடந்த இன்னிங்ஸிலிருந்தே அவரின் வழக்கத்தை மீறிய ஒரு பொறுமையை வெளிக்காட்டி வருகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கு பேட்டை விடுவதை தவிர்த்து லீவ் செய்து கொண்டே இருந்தார். இதனால் வழக்கத்தை விட அதிகமான பந்துகளை எதிர்கொண்டு குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஸ்கோர் செய்து கொண்டிருந்தார். முதல் இன்னிங்ஸிலேயே 79 ரன்களை இப்படித்தான் அடித்திருந்தார்.

இந்த இரண்டாவது இன்னிங்ஸிலும் இதையே கடைபிடித்தார். ரொம்பவே பொறுமையாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அதீத ஜாக்கிரதையோடு லீவ் செய்தே ஆடிக்கொண்டிருந்தார். ஒரு முனையில் விராட் கோலி இப்படி நிதானமாக ஆடியதால் இன்னொரு முனையில் ரிஷப் பண்ட் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார். 80+ ஸ்ட்ரைக் ரேட்டில் பவுண்டரிக்களை அடித்து வேகமாக ஸ்கோர் செய்து கொண்டிருந்தார்.

ஆனால், வழக்கத்தை விட கூடுதல் கட்டுப்பாட்டோடு இந்த இன்னிங்ஸை தொடங்கியிருந்தார். பயங்கர ரிஸ்க் எடுக்காமல் கொஞ்சம் பார்த்தே ஆடியிருந்தார். தென்னாப்பிரிக்க பௌலர்களும் விராட் கோலியின் விக்கெட் மீது கூடுதல் கவனத்தோடு இருந்ததால் ரிஷப் பண்ட் ஒரு ஓரமாக வேக வேகமாக ரன்களை சேர்த்துவிட்டார்.

சதமடித்து காப்பாற்றிய பண்ட் ; தென்னாப்பிரிக்காவிற்கு 212 டார்கெட்.. தொடரை வெல்லுமா இந்தியா ?

மிகவும் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த கோலி உணவு இடைவேளைக்கு பிறகு, இங்கிடியின் பந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பேட்டை விட்டு கவர் ட்ரைவ் ஆட முற்பட்டு எட்ஜ் ஆகி அவுட் ஆனார். 143 பந்துகளஒ எதிர்கொண்டிருந்த கோலி 29 ரன்களை அடித்திருந்தார். அத்தனை பொறுமையாக லீவ் செய்துவிட்டு கடைசியில் ட்ரைவ் ஆட முற்பட்டே எட்ஜ் ஆனது ஏமாற்றமே. கோலி அவுட் ஆன பிறகும் ரிஷப் பண்ட் ஓயவில்லை. டெய்ல் எண்டர்களோடு கூட்டணி போட்டு சதத்தை நிறைவு செய்துவிட்டார். 139 பந்துகளில் 100 ரன்களை அடித்திருந்த பண்ட் 6 பவுண்டரிக்களையும் 4 சிக்சர்களையும் அடித்திருந்தார். இந்திய அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பண்ட் நாட் அவுட்டாக இருந்தார்.

ரிஷப் பண்ட் மட்டும் சதமடிக்கவில்லையெனில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்திருக்கும். சதமடித்ததன் மூலம் பண்ட் இந்திய அணி காப்பாற்றியிருக்கிறார். இந்திய அணி வெற்றிக்காக போராடுவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். 212 ரன்கள் டார்கெட்டை நோக்கி தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்துக் கொண்டிருக்கிறது. இந்திய பௌலர்கள் அசத்துவார்களா? தொடரை வென்று இந்தியா சாதனை படைக்குமா?

banner

Related Stories

Related Stories