விளையாட்டு

“களத்திலும் சரி, களத்திற்கு வெளியேவும் சரி, சிறந்த கேப்டனாக செயல்பட்டார் விராட்” : டிராவிட் பாராட்டு!

"களத்திலும் சரி, களத்திற்கு வெளியேவும் சரி, ஒரு சிறந்த கேப்டனாக, சிறந்த தலைவனாக செயல்பட்டார் விராட் என்று இந்திய கேப்டன் கோலியை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டியிருக்கிறார்.

“களத்திலும் சரி, களத்திற்கு வெளியேவும் சரி, சிறந்த கேப்டனாக  செயல்பட்டார் விராட்” :  டிராவிட் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மிகவும் கடினமான சூழ்நிலையில் தன் பணியை மிகச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார் என்று இந்திய கேப்டன் கோலியை பாராட்டியிருக்கிறார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. தற்போது நடந்துவரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன், கேப்டன் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. கங்குலியின் பேட்டிக்கு நேர்மறையான கருத்துகளை கோலி முன்வைக்க, விமர்சனங்கள் எழுந்தது.

கடந்த இரண்டு மாதங்களாக கோலியின் கேப்டன்சியே இந்திய கிரிக்கெட்டின் பேசுபொருளாக இருக்கும் நிலையில், அணியை சிறப்பாக வழிநடத்தினார் விராட். அவரின் பங்களிப்பை பயிற்சியாளர் டிராவிட் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.

"வெளியே பலவிதமான கருத்துகள் உலாவிக்கொண்டிருந்தது என்பதை நான் அறிவேன். இந்தப் போட்டிக்கு முன்பும் இருந்தது. ஆனால், உண்மையில் வீரர்களின் மனநிலையை சிறப்பாக வைத்திருப்பதில் எந்த சிரமும் இருக்கவில்லை. ஏனெனில், கோலி அவர்களை முன்நின்று சிறப்பாக வழிநடத்தினார். ஒரு பயிற்சியாளராக, போட்டி ஆரம்பித்த பிறகு எதையும் பெரிதாக மாற்றிவிட முடியாது.

போட்டியின் முடிவிலும் பெரிய தாக்கம் ஏற்படுத்திவிட முடியாது. ஆனால், ஒரு பயிற்சியாளராக அணியை சிறப்பான முறையில் தயார் செய்ய முடியும். அதை விராட் கோலி மிகச் சிறப்பாக செய்தார். ஒரு தலைவனாக மிகச் சிறந்த முறையில் அணியை வழிநடத்தினார். அவரைப் பற்றியோ, அவர் போட்டிக்குத் தயாராகும் முறை பற்றியோ இதைவிடவும் பெருமையாக என்னால் கூறிவிட முடியாது. கடந்த இரண்டு வாரங்களாக அவர் தயாராகும் முறை, பயிற்சிகள், அணியோடு அவர் இணைந்திருந்த விதம் அவ்வளவு சிறப்பாக இருந்தது" என்று கூறியிருக்கிறார் டிராவிட்.

"களத்திலும் சரி, களத்திற்கு வெளியேவும் சரி, ஒரு சிறந்த கேப்டனாக, சிறந்த தலைவனாக செயல்பட்டார் அவர். ஒரு நல்ல சூழல் அமைவதற்கு அது காரணமாக அமைந்தது. விராட் போன்ற ஒரு தலைவரோடு பணியாற்றுவது மிகவும் சிறப்பான அனுபவமாக இருக்கிறது" என்றும் அவர் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்பைப் போல் ரன் குவிக்கத் தடுமாறும் கோலி விரைவில் ரன் குவிக்கத் தொடங்குவார் என்றும் கூறினார் டிராவிட். "நல்ல தொடக்கத்தைப் பயன்படுத்தி பெரிய ஸ்கோர் எடுக்காமல் போயிருந்தாலும் சிறப்பாகவே விளையாடினார். நிச்சயம் அவரிடமிருந்து மிகப்பெரிய ஸ்கோர்கள் வரத் தொடங்கும். அணியினரோடு இருக்கும்போது மிகவும் ரிலாக்சாக, அமைதியாக இருக்கிறார். அதைப் பார்க்கும்போது, அவர் எப்படித் தயாராகிறார் என்பதைப் பார்க்கும்போது அடுத்த போட்டியிலிருந்தே அந்த மாற்றம் தொடங்கலாம். அது அடுத்த போட்டியிலேயே நிகழும் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்றும் கூறியிருக்கிறார் ராகுல் டிராவிட்.

banner

Related Stories

Related Stories