விளையாட்டு

கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய BCCI... காரணம் என்ன?

கோலிக்கு பதில் இனி ரோஹித் சர்மாவே ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்படுவார் என அறிவித்தது பிசிசிஐ.

கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய BCCI... காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

பிசிசிஐ நேற்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதாவது, கோலிக்கு பதில் இனி ரோஹித் சர்மாவே ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்படுவார் என அறிவித்தது. மேலும், டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டனாக இருந்த ரஹானேவிடமிருந்து மாற்றி ரோஹித்திற்கு அந்தப் பொறுப்பை வழங்கியுள்ளார்கள்.

ரசிகர்களை இந்த அறிவிப்பு அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும் இது சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான். பணிச்சுமையின் காரணமாக டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார். கோலி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாக ஒரு ஆங்கில நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

அதாவது, லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கு கோலியை நீக்கிவிட்டு ரோஹித்தை கேப்டன் ஆக்கிவிடும் முடிவில் பிசிசிஐ இருப்பதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தி வெளியான ஒரே வாரத்தில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்தார். ஆனால், அவர் டி20 போட்டிகளில் இருந்து மட்டுமே விலகுவதாக அறிவித்தார். பிசிசிஐ-யோ கோலியை ODI போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் விலக்க நினைத்திருந்தது.

கோலியின் அரைகுறையான விலகல் பிசிசிஐக்கு தர்மசங்கடத்தை கொடுத்திருந்தாலும், அவரை ஓடிஐ போட்டிகளின் கேப்டன் பதவிகளிலிருந்து நீக்கும் முடிவில் பிசிசிஐ பின் வாங்குவதாக இல்லை. டி20 உலகக்கோப்பையை வென்றால் 2023 ODI உலகக்கோப்பை வரை கோலியை கேப்டனாக வைத்திருக்கலாம். இல்லையேல், ஏற்கனவே திட்டமிட்டபடி கோலியை கேப்டன் பதவியிலிருந்து விலக்கிவிட வேண்டும் என்பதே பிசிசிஐயின் எண்ணமாக இருந்தது. டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் இந்தியா மிக மோசமாக தோற்றிருந்தது. எனவே பிசிசிஐ நினைத்தபடியே கோலியை கேப்டன் பதவியிலிருந்து விலக்க நினைத்தது. அதை தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருக்கிறது.

கோலியின் தலைமையில் ஐ.சி.சி தொடர்களில் ஏற்பட்ட ஏமாற்றமே பிசிசிஐயின் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்தது. 2017 சாம்பியன்ஸ் டிராஃபி, 2019 உலகக்கோப்பை, 2021-இல் டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக்கோப்பை என கோலியின் தலைமையில் ஆடிய ஐ.சி.சி தொடர்கள் அத்தனையையும் இந்தியா இழந்துள்ளது. அடுத்தடுத்து வருடத்திற்கு ஒரு ஐ.சி.சி தொடர் இருப்பதால் பிசிசிஐ இதற்கு மேலும் கோலியை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதனாலயே கோலிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ரோஹித்திற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக 5 முறை கோப்பையை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளின் துணை கேப்டனாக இருந்த ரஹானேவிடமிருந்து அந்த பதவி பறிக்கப்பட்டு ரோஹித்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவின் சமீபத்திய ஃபார்ம் ரொம்பவே மோசமாக இருக்கிறது. கடைசியாக கடந்த ஆஸ்திரேலியாவிற்கு மெல்பர்னில் ஒரு சதம் அடித்திருந்தார். அதன்பிறகு நடந்த எந்த தொடரிலும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆடவே இல்லை.

சமீபத்தில் நியுசிலாந்து தொடரில் இரண்டாவது காயத்தை காரணம் கூறி அவரை பென்ச்சில் அமரவைத்துவிட்டார்கள். ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி போன்ற வீரர்கள் மிடில் ஆர்டரில் ஆடுவதற்கு தயாராக இருப்பதால் இனிமேல் ரஹானேவுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைப்பதே கடினம்தான். ப்ளேயிங் லெவனிலேயே சந்தேகமாக இருக்கும் வீரர் துணை கேப்டனாக எப்படி இருக்க முடியும்? அதனாலயே ரோஹித்திற்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories