விளையாட்டு

ஸ்பின்னர்களிடம் சுருண்ட நியுசிலாந்து.. தொடரை வென்றது இந்தியா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 375 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

ஸ்பின்னர்களிடம் சுருண்ட நியுசிலாந்து.. தொடரை வென்றது இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இதில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. மேலும், இந்த வெற்றி மூலம் 1-0 என தொடரையும் வென்றுள்ளது.

நியுசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் முன்னிலையை பெற்றிருந்தது. பெரிய முன்னிலையை பெற்ற போதும் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் நீண்ட நேரம் பேட்டிங் செய்தது. 276-7 என இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்கோர் செய்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 150 ரன்களை எடுத்திருந்த மயங்க் அகர்வால் இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். இந்திய அணி 539 ரன்கள் முன்னிலையை பெற்றது. நியுசிலாந்து அணிக்கு 540 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டரை நாட்கள் மீதம் இருந்தாலும் ஸ்பின் டிராக்கில் நியுசிலாந்து அணியால் இவ்வளவு பெரிய ஸ்கோரை நிச்சயமாக அடிக்க முடியாது என்றே கணிக்கப்பட்டது. எதிர்பார்த்ததை போன்றே நியுசிலாந்து அணி மோசமாக ஆடி சொதப்பி எளிதில் வீழ்ந்துள்ளது.

ஸ்பின்னர்களிடம் சுருண்ட நியுசிலாந்து.. தொடரை வென்றது இந்தியா!

நேற்றே 140-5 என்ற நிலையிலேயே நியுசிலாந்து அணி இருந்தது. இன்று முடிந்தவரை தாக்குப்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் 1 மணி நேரத்திலேயே எஞ்சியிருந்த விக்கெட்டுகளையும் இழந்து நியுசிலாந்து ஆல் அவுட் ஆகியிருக்கிறது.

நிக்கோல்ஸும் ரச்சின் ரவீந்திராவுமே இன்றைய ஆட்டத்தை தொடங்கியிருந்தனர். இவர்கள் இருவரும் மட்டுமே கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தனர். இந்த கூட்டணியை ஜெயந்த் யாதவ் பிரித்த பிறகு, மற்ற விக்கெட்டுகள் அடுத்தடுத்து வேகமாக வீழ்ந்தன. நிக்கோல்ஸின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியிருந்தார். மற்ற அத்தனை விக்கெட்டுகளையும் ஜெயந்த் யாதவே வீழ்த்தினார்.

167 ரன்களுக்கு நியுசிலாந்து ஆல் அவுட் ஆனது. இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் போட்டியிலும் இந்தியா ஏறக்குறைய வெற்றியை அடைந்துவிட்டது. ஆனால், கடைசிக்கட்டத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி டிராவில் முடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியை இந்தியா வென்றதன் மூலம் 1-0 என தொடரையும் வென்றுள்ளது.

இந்த ஆண்டு முழுவதுமே அவே/ஹோம் இரண்டு விதமான சீரிஸ்களிலுமே இந்தியா பட்டையை கிளப்பியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியுசிலாந்துக்கு எதிரான தோல்வியை தவிர்த்துவிட்டு பார்த்தால் உலகளவில் டெஸ்ட் அரங்கில் அதிக ஆதிக்கம் செலுத்திய அணியாக இந்தியாவே இருக்கிறது.

இந்தத் தொடரின் வெற்றி மூலம் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது இந்திய அணி. மேலும், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய அணிகளின் பட்டியலில் 14 வெற்றிகளுடன் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

சொந்த மண்ணில் இந்திய அணி கடைசியாக கடந்த 2012 - 2013 காலத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தொடரை இழந்தது. அதன்பிறகு விளையாடிய 14 டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி வெற்றியை மட்டுமே கண்டுள்ளது.

banner

Related Stories

Related Stories