விளையாட்டு

T20 உலகக் கோப்பை: 55 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்...பழி தீர்த்த இங்கிலாந்து!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

T20 உலகக் கோப்பை: 55 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்...பழி தீர்த்த இங்கிலாந்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் இரண்டாவது போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியிருந்தது. இதில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 55 ரன்களில் ஆல் அவுட் ஆன சம்பவம் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக அமைந்திருந்தது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தார். சில பேட்ஸ்மேன்களின் நிலையில்லா தன்மையாலும் பிக் ஹிட்டர்கள் நிரம்பிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மோதுவதாலும் இங்கிலாந்து அணி தங்களது பேட்டிங்கை பலப்படுத்தியிருந்தது. மொத்தமே 3 மெயின் பௌலர்களை மட்டுமே வைத்திருந்தது. அடில் ரஷீத், மில்ஸ், ஜோர்டன் இந்த மெயின் பௌலர்களோடு க்றிஸ் வோக்ஸ், மொயீன் அலி ஆகிய ஆல்ரவுண்டர்களை வைத்துக் கொண்டு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனோடு இங்கிலாந்து களமிறங்கியிருந்தது.

வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ள பேட்டிங்கை பலப்படுத்திக் கொண்டு இங்கிலாந்து வந்திருந்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அதற்கெல்லாம் இடமே கொடுக்கவில்லை. வெறும் 55 ரன்களில் ஆல் அவுட் ஆகி சொதப்பியிருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் வழக்கமான மனநிலையே இந்த போட்டியில் அவர்களுக்கு வில்லங்கமாக மாறியது. அதிகமாக சிக்சர்கள், பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என்றே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரும்புவர். ஆனால், இந்த மனநிலைதான் இந்த போட்டியில் அவர்களுக்கு எதிராக மாறியது. 14.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்த 55 ரன்களில் 22 ரன்களை மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் ஓடி எடுத்திருந்தனர்.

அதிலும் முதல் 10 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே ஓடி எடுத்திருந்தனர். அடித்தால் பவுண்டரி அல்லது சிக்சர் அடிப்பேன் அல்லது டாட் ஆடி ஸ்கோர் போர்ட் அழுத்தத்தை ஏற்றி பெரிய ஷாட் ஆடி மிஸ் டைம் ஆகி அவுட் ஆவேன் என்பதை போன்றே அனைவரும் ஆடினர். ரஸல் போல்டாகியிருந்தார். பூரன் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆகி அவுட் ஆகியிருந்தார். இவர்களை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாருமே பெரிய ஷாட் ஆட முற்பட்டு சரியாக அடிக்காமல் அவுட் ஆகியிருந்தனர். கெய்ல் மட்டுமே இரட்டை இலக்கத்தில் 13 ரன்களை அடித்திருந்தார். மற்ற எல்லா பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட்டிலேயே அவுட் ஆகியிருந்தனர்.

T20 உலகக் கோப்பை: 55 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்...பழி தீர்த்த இங்கிலாந்து!

டி20 என்றால் பெரிய ஷாட் தான் ஆட வேண்டும். ஆனால் அதற்கென்று அடுத்தடுத்து விக்கெட் விழும்போதும் ஒரு பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க நினைக்காமல் டார்கெட் செட் செய்ய நினைக்காமல் ஏனோதானோவென அவுட் ஆகி வெளியேறியது ஏமாற்றமழிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது.

இங்கிலாந்து சார்பில் அடில் ரஷீத் 2.2 ஓவர்களை மட்டுமே வீசி 2 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முக்கிய விக்கெட்டுகளான பொல்லார்ட் மற்றும் ரஸலின் விக்கெட்டை இவரே வீழ்த்தியிருந்தார். இன்னொரு ஸ்பின்னரான மொயீன் அலி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இங்கிலாந்து அணிக்கு 56 ரன்கள் மட்டுமே டார்கெட். ஆனால், இந்த 56 ரன்களையும் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 24 ரன்களை அடித்து நாட் அவுட்டாக இருந்தார்.

டி20 உலகக்கோப்பை போட்டிகளில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியை இங்கிலாந்து வீழ்த்தியிருக்கிறது. கடைசியாக 2016 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளும் மோதியிருந்தன. அந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் ப்ராத்வேட் 4 சிக்சர்களை பறக்கவிட்டு வெஸ்ட் இண்டீஸை சாம்பியனாக்கியிருப்பார். 5 வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்திற்காக மறக்கவே முடியாத வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இங்கிலாந்து பழி தீர்த்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories