விளையாட்டு

IPL2021 : தோனியாக மாறும் ஹிட் மேன்; கிரிக்கெட் 'டீம் கேம்' என நிரூபித்த இஷன் - ரோஹித் இணை!

ஃபார்ம் அவுட்டில் இருக்கும் போது ஒரு வீரர் எதிர்பார்ப்பது இந்த ஆதரவையும் நம்பிக்கையையும்தான். இதை ராஜஸ்தான், பஞ்சாப் மாதிரியான அணிகளின் கேப்டன்களிடம் எதிர்பார்க்கவே முடியாது.

IPL2021 : தோனியாக மாறும் ஹிட் மேன்; கிரிக்கெட் 'டீம் கேம்' என நிரூபித்த இஷன் - ரோஹித் இணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இஷன் கிஷன் எப்படி ஃபார்முக்கு வந்தார்?

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் இஷன் கிஷன். அந்த சீசனில் 516 ரன்களை அடித்திருந்தார்.

ஆனால், இந்த சீசனில் கடுமையாக சொதப்பியிருந்தார். 8 போட்டிகளில் வெறும் 101 ரன்களை மட்டும்தான் எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 100 க்கும் கீழே இருந்தது. மும்பை அணியின் மோசமான தோல்விகளுக்கு இஷன் கிஷனின் அவுட் ஆஃப் ஃபார்மும் மிக முக்கிய காரணமாக இருந்தது.

அணியிலிருந்து ட்ராப் செய்யப்பட்டார். இரண்டு போட்டிகள் பென்ச்சில் உட்கார்ந்த பிறகு, நேற்று மும்பைக்கு do or die சூழலில் ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கினார். 25 பந்துகளில் 50 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 200. மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்!

எட்டு போட்டிகளாக சொதப்பியவர் மீண்டும் எப்படி தன்னுடைய வழக்கமான பாதைக்கு திரும்பினார்??

மீண்டும் இஷன் கிஷன் ஃபார்முக்கு திரும்பியதற்கு மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பெரிய க்ரெடிட் கொடுக்க வேண்டும்.

இரண்டு போட்டிகளுக்கு முன்பாக பஞ்சாபுக்கு எதிராகத்தான் இஷன் கிஷனை முதன்முதலாக ரோஹித் ட்ராப் செய்திருந்தார். அந்த போட்டியில் மும்பை வென்றிருந்தது. போட்டிக்கு பிறகான பரிசளிப்பு விழாவில் ரோஹித் யாரை பற்றி பேசியிருக்க வேண்டும்?

அந்த போட்டியை பற்றி அந்த போட்டியில் ஜொலித்த வீரரை பற்றி பேசியிருக்க வேண்டும். ஆனால், ரோஹித் முதலில் அணியிலேயே இல்லாத ட்ராப் செய்யப்பட்ட இஷன் கிஷனை பற்றித்தான் பேசியிருந்தார். 'இஷன் கிஷன் திறமைமிக்க இளம் வீரர். அவரை நான் மட்டுமில்லை ஒட்டு மொத்த அணியுமே நம்புகிறோம். அவருடன் நிற்கிறோம். இப்போது அவருக்கு ஒரு சிறு ஓய்வு தேவைப்படுகிறது. அதை கொடுத்திருக்கிறோம். அவர் மீண்டும் கம்பேக் கொடுக்கும்போது சிறப்பான இன்னிங்ஸை ஆடுவார்'

ஃபார்ம் அவுட்டில் இருக்கும் போது ஒரு வீரர் எதிர்பார்ப்பது இந்த ஆதரவையும் நம்பிக்கையையும்தான். இதை ராஜஸ்தான், பஞ்சாப் மாதிரியான அணிகளின் கேப்டன்களிடம் எதிர்பார்க்கவே முடியாது. வீரர்கள் மீது இப்படியான நம்பிக்கையை வைப்பதில் தோனியும் ரோஹித்துமே முதலானவர்கள்.

ரோஹித் வெறுமென வார்த்தைகளில் மட்டும் நம்பிக்கையை கொடுக்கவில்லை. சொன்னபடியே சிறு ஓய்வாக இரண்டு போட்டிகளில் இஷனை ட்ராப் செய்துவிட்டு நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணிக்குள் சேர்த்துவிட்டார். அதுவும் டீகாக்கை பென்ச்சில் வைத்து தன்னுடன் ஓப்பனராக இறங்குமாறு செய்தார்.

ஒரு கேப்டனாக தன்னுடைய பணியை ரோஹித் செவ்வனே செய்துவிட்டார்.

அடுத்து ஒரு பேட்டிங் பார்ட்னராக இஷன் கிஷனுக்கு ரோஹித் எப்படி உதவினார்?

மும்பை அணிக்கு நேற்று டார்கெட் 91 தான். ஆனால், இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாத நிலை. ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பில் நிலைத்திருக்க ரன்ரேட்டுக்காக போட்டியை 8-10 ஓவருக்குள் முடிக்க வேண்டும். ஓவருக்கு 10 ரன்கள் அடித்தே ஆக வேண்டும் என்ற அழுத்தத்தில்தான் மும்பை களமிறங்கியது.

ரோஹித்தும் இஷன் கிஷனும் ஓப்பனர்கள்.

இஷன் கிஷன் ஃபார்ம் அவுட் ஆகி, ட்ராப் ஆகி மீண்டும் வந்திருக்கிறார். அவரிடம் ரன்ரேட் அழுத்தத்தை திணித்து மேலும் நெருக்கடி கொடுத்தால் இந்த போட்டியிலும் சொதப்பவே செய்வார்.

அதனால் அவர் எப்படி ஆடுகிறாரோ அப்படி ஆடிக்கொள்ளட்டும். நாம் முழுமையாக பவுண்டரியை மட்டும் குறிவைத்து அதிகமாக ரிஸ்க் எடுக்கலாம் என ரோஹித் முடிவெடுக்கிறார். அப்படியேத்தான் செய்தார். தொடக்கத்தில் முதல் 3 ஓவர்களில் இஷன் கிஷன் மீது அழுத்தம் விழாமல் ரோஹித்தை பவுண்டரி சிக்சர்களை அடித்தார்.

இதை, போட்டிக்கு பிறகான பரிசளிப்பு விழாவிலும் ரோஹித் குறிப்பிட்டு பேசியிருந்தார். 'இஷன் கிஷன் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்ற விரும்பவில்லை. அவர் அவருக்கான நேரத்தை எடுத்துக் கொள்ள நினைத்தேன். அதற்காக நான் ரிஸ்க் எடுத்து ஆட தயாராக இருந்தேன்' என கூறியிருப்பார். 'Partnership is all about complementing each other' என்பதற்கான சரியான சாட்சி இது.

சரி, இஷன் கிஷன் ஃபார்முக்கு வந்ததற்கு இஷன் கிஷன் காரணமே இல்லையா?

இஷன் கிஷன் ஃபார்முக்கு வந்ததற்கு இஷன் கிஷன் திட்டமிட்ட இன்னிங்ஸ் கட்டமைப்பும் ஒரு முக்கிய காரணம்.

இத்தனை போட்டிகளாக க்ரீஸுக்குள் வந்த உடனேயே மிஸ் டைம் ஷாட் ஆடி சீக்கிரமே இஷன் அவுட் ஆகியிருந்தார். அதனால், இந்த போட்டியில் முதலில் கொஞ்ச நேரம் க்ரீஸில் நின்றுவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

முதல் ஓவர் முழுக்க ரோஹித் ஆடி விட, இரண்டாவது ஓவரில்தான் இஷனுக்கு ஸ்ட்ரைக் கிடைத்தது.

இரண்டாவது ஓவரின் 6 பந்துகளையும் டாட் ஆடியிருப்பார். அந்த ஓவரே மெய்டன் ஆனது. சேத்தன் சர்க்காரியா அந்த ஓவரில் பெரிதாக அபாயகரமான பந்துகள் எதையும் வீசவில்லை. இஷன் கிஷனும் ஒரு பந்தில் கூட பீட்டன் ஆகவில்லை. எல்லா பந்துகளையும் டிஃபன்ஸ்தான் செய்திருந்தார். முடிந்தால் ஒன்றிரண்டு சிங்கிள் எடுக்கலாம் என்பது மட்டும்தான் அவருடைய எண்ணமாக இருந்தது. அது வாய்க்கவில்லை என்றாலும் பெரிய ஷாட்டுக்கு எதற்கும் முயற்சிக்கவே இல்லை.

ஒரு ஆறு பந்துகளை ரொம்பவே சௌகரியமாக சந்தித்து ஒரு நல்ல பாசிட்டிவ்வான மனநிலைக்கு முதலில் இஷன் வந்து சேர்ந்தார்.

9 பந்துகளில் 8 ரன் என இருந்தார். செட்டாகியாயிற்று. இப்போது அட்டாக் செய்ய வேண்டும். யாரை அட்டாக் செய்ய வேண்டும் என்பதில் இஷன் கிஷனுக்கு ஒரு திட்டம் இருந்தது.

அனுபவமிக்கவர்களை அட்டாக் செய்யாமல், நேற்றுதான் ஐ.பி.எல் இல் தனது முதல் போட்டியை ஆடும் குல்தீப் யாதவ் எனும் இடக்கை வேகப்பந்து வீச்சாளரைத்தான் முதலில் அட்டாக் செய்தார். முதல் போட்டியில் ஆடும் வீரரின் பதற்றத்தையும் அனுபவமின்மையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

குல்தீப் யாதவ் தனது முதல் போட்டியில் வீசிய முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளையுமே ஸ்கொயரில் பவுண்டரியாக்கினார். இங்கிருந்துதான் இஷன் கிஷனின் ஆட்டமே தொடங்கியது.

முதலில் பொறுமையாக நின்று செட் ஆனார். Debutant ஐ அடித்து டச்சுக்கு வந்தார். இதற்கு மேல் சரவெடிதான்.

முதலில் மெய்டன் ஆடிய சர்க்காரியாவின் ஓவரில் இப்போது 19 ரன்களை வெளுக்கிறார். 2 சிக்ஸ், 1 பவுண்டரி. முஷ்டபிஷுர் ரஹ்மானின் ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து மேட்ச்சை 9 வது ஓவரிலேயே முடித்து வைத்தார்.

முதல் 9 பந்துகளில் 8 ரன்களை அடித்தவர் கடைசியில் 25 பந்துகளில் 50 ரன்கள். நாட் அவுட். மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்!

இஷன் கிஷனுக்கு மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டும் என்ற வெறியிருந்தது அதற்கான திட்டமிடல் இருந்தது தோளோடு தோள் நிற்க அணியின் கேப்டனும் சக வீரர்களும் இருந்தனர். மீண்டும் மாஸாக வந்து நிற்கிறார்!

ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. அது, Cricket is a team Game!

banner

Related Stories

Related Stories