விளையாட்டு

மீண்டும் மோசமாக தோற்ற சன்ரைசர்ஸ்...ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கும் கொல்கத்தா!

சன்ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்றது.

மீண்டும் மோசமாக தோற்ற சன்ரைசர்ஸ்...ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கும் கொல்கத்தா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்ட சன்ரைசர்ஸ் அணியும் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பிற்காக போராடிக் கொண்டிருக்கும் கொல்கத்தா அணியும் நேற்று மோதியிருந்தன. இந்த போட்டியில் எதிர்பாரத்தபடியே கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணியே முதலில் பேட் செய்திருந்தது. வழக்கம்போல ரொம்பவே சுமாராகத்தான் பேட் செய்திருந்தது. முதல் ஓவரை டிம் சவுத்தி வீசியிருந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே விருத்திமான் சஹா lbw ஆகி டக் அவுட் ஆகியிருந்தார். இதன்பிறகு, அப்படியே வரிசையாக சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. ஜேசன் ராய் 10 ரன்னில் சிவம் மவியின் ஓவரில் டாட் பால் ஆடிய விரக்தியில் ஷாட் ஆடி மிட் ஆனில் கேட்ச் ஆகியிருந்தார்.

கேப்டன் கேன் வில்லியம்சன் 26 ரன்களில் ஒரு சிங்கிளுக்கு ஆசைப்பட்டு ஷகிப்-அல்-ஹசனால் ரன் அவுட் செய்யப்பட்டார். ஜேசன் ராய், கேன் வில்லியம்சன் என இரண்டு முக்கிய வீரர்கள் அவுட் ஆன பிறகு சன்ரைசர்ஸ் அணியால் மீண்டும் எழவே முடியவில்லை. இதன்பிறகு, இளம் வீரர்களான பிரியம் கர்க், அப்துல் சமத் ஆகியோர் 21, 25 என கணிசமான பங்களிப்பை அளித்தனர். இதனால் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 100 ஐ தாண்டியது. கடைசி பந்தில் சித்தார்த் கவுல் ஒரு பவுண்டரி அடித்து முடித்து வைக்க அணியின் ஸ்கோர் 115 ஆக உயர்ந்தது.

கொல்கத்தாவுக்கு 116 ரன்களே டார்கெட். எளிமையாக வெல்ல வேண்டிய போட்டி ஆனால், வென்றே ஆக வேண்டிய கட்டாயம் இருந்ததால் ரொம்பவே ஜாக்கிரதையாக சேஸை அணுகினர். பவர்ப்ளேயில் 36 ரன்களே வந்திருந்தது. அதிரடியாக ஆடக்கூடிய வெங்கடேஷ் ஐயர் ஹோல்டரின் பந்தில் எட்டே ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறினார். ரஷீத்கானின் பந்தில் இன்னொரு அதிரடி வீரரான திரிபாதியும் 7 ரன்னில் வெளியேறினார்.

மீண்டும் மோசமாக தோற்ற சன்ரைசர்ஸ்...ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கும் கொல்கத்தா!

போட்டி கொஞ்சம் சுவாரஸ்யமாவது போல் தெரிந்தது. ஆனால், சுப்மன் கில் நீண்ட நேரம் நின்று பொறுமையாக ஆடி சூழலை உணர்ந்து ரன் கணக்கை உயர்த்தினார். 51 பந்துகளில் 57 ரன்களை எடுத்து ஏறக்குறைய போட்டியை முடித்துவிட்டு சுப்மன் கில் அவுட் ஆனார். ஆனாலும், கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்தே 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி போட்டியை வென்றது.

இந்த வெற்றி மூலம் 13 போட்டிகளில் ஆடியிருக்கும் கொல்கத்தா அணி 6 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தானும் மும்பை இந்தியன்ஸுமே அந்த அணி ப்ளே ஆஃப்ஸ் செல்வதற்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். ஆனால், ரன்ரேட் கொஞ்சம் நன்றாக இருப்பதால் கொல்கத்தா நம்பிக்கையுடன் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் இந்த போட்டியை தோற்றிருந்தாலும் அந்த அணியில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் ஒரு அறிமுக வீரர் ஆடியிருந்தார். 21 வயதாகும் உம்ரான் மாலிக் காஷ்மீரை சேர்ந்தவர். நடராஜனுக்கு பதிலாக ரீப்ளேஸ்மெண்ட்டாக சன்ரைசர்ஸ் அணிக்குள் வேகப்பந்து வீச்சாளராக வந்திருந்தார்.

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் பந்து வீசியிருந்தார். 4 ஓவர்களை வீசிய இவர் பெரும்பாலான பந்துகளை 140+ கி.மீ வேகத்தில் வீசியிருந்தார். சில பந்துகளை 150 கி.மீக்கு மேலும் வீசியிருந்தார். சமீபத்தில் இந்திய பௌலர்கள் யாரும் இவ்வளவு வேகமாக வீசியதில்லை என்பதால் உம்ரான் மாலிக்கை பல முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories