விளையாட்டு

நாளைய நாளை பதக்கத்தோடு தொடங்குமா இந்தியா..? : ‘சர்ப்ரைஸ்’ கொடுக்கக் காத்திருக்கும் அதிதி அசோக்!

Golf போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்போடு கடைசி நாள் ஆட்டத்தை ஆடவிருக்கிறார். இந்த போட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

நாளைய நாளை பதக்கத்தோடு தொடங்குமா இந்தியா..? : ‘சர்ப்ரைஸ்’ கொடுக்கக் காத்திருக்கும் அதிதி அசோக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்த ஒலிம்பிக்கின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் இந்திய வீராங்கனை அதிதி அசோக்!

Golf போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்போடு கடைசி நாள் ஆட்டத்தை ஆடவிருக்கிறார். இந்தப் போட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

இந்திய வீராங்கனை பதக்கம் வெல்லப்போகிறார். ஆனால், நமக்கு கோல்ஃப் பற்றி ஒன்றுமே தெரியாதே என சிலர் வருந்தக்கூடும். அவர்களுக்காக மேலோட்டமாக கோல்ஃப் பற்றி புரிந்து கொள்ளும் வகையில் இந்த பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

ஒலிம்பிக்கில் கோல்ஃப் விளையாட்டில் 60 பெண்கள் பங்கேற்பார்கள். இந்தியா சார்பில் இருவர் பங்கேற்றிருந்தனர். அதில் அதிதி அசோக் அசத்தி வருகிறார்.

மொத்தம் 4 நாட்கள் போட்டி நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீராங்கனையும் 18 குழிகளில் பந்தை விழ செய்ய வேண்டும். நான்கு நாட்களுக்கு மொத்தம் 72 குழிகள். ஒவ்வொரு குழியின் தூரத்தையும் கோணத்தையும் இடையூறுகளையும் பொறுத்து, அந்த குழியில் பந்தை சேர்க்க குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாய்ப்புகள் வழங்கப்படும். (பந்தை ஒரு முறை அடிப்பது ஒரு வாய்ப்பு என புரிந்து கொள்ளலாம்) ஒரு குழிக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் சரியாக அடித்துவிட்டீர்கள் எனில் அது Par எனப்படும்.

அதாவது, ஒரு குறிப்பிட்ட குழியில் பந்தை சேர்க்க 4 வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் சரியாக 4 வாய்ப்புகளில் பந்தை குழிக்குள் அடித்துவிட்டால் அது Par எனப்படும். ஒருவேளை மூன்றே வாய்ப்புகளில் அடித்துவிட்டீர்கள் எனில் அது Birdie என்றும், இரண்டே வாய்ப்புகளில் அடித்துவிட்டால் அது Eagle என்றும் அழைக்கப்படும். கொடுக்கப்பட்ட வாய்ப்புக்கு அதிகமாக அதவாது நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு நீங்கள் அடிக்க முடியாமல் 5 வாய்ப்புகள் எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் அது Bogey என்றும், 6 வாய்ப்புகள் எடுத்துக்கொண்டால் அது double Bogey என்றும் அழைக்கப்படும். (ஒரு வீரர் மோசமாக ஆடும்பட்சத்திலேயே Bogey பெறுவார்) ஒரு நாளில் 18 குழிகளில் பந்தை சேர்க்க 71 வாய்ப்புகள் மொத்தமாக வழங்கப்பட்டிருக்கும்.

அந்த 71 வாய்ப்புகளில் நாம் எவ்வளவு குறைவான வாய்ப்பில் பந்தை குழிக்குள் அடிக்கிறோமோ அவ்வளவு நாம் சிறப்பாக ஆடியிருக்கிறோம் என்று அர்த்தம். ஒரு வீரர் 68 வாய்ப்புகளிலும் இன்னொருவர் 66 வாய்ப்புகளிலும் முடித்திருந்தால், இங்கே 66 வாய்ப்புகளில் முடித்தவர்தான் பெரிய ஆள். வெற்றியாளர். அவர் 5 வாய்ப்புகளை மீதப்படுத்தியிருக்கிறார். அதனால் 5 Under என புள்ளிப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும். இன்னொருவர் மூன்று வாய்ப்புகளை மட்டுமே மிச்சப்படுத்தியிருக்கிறார். 3 Under. இப்போது அதிதி அசோக்கிற்கு வருவோம். அவர் மூன்று நாட்களில் எடுத்துக்கொண்ட வாய்ப்புகளின் முறையே 67, 66, 68 வாய்ப்புகளில் முடித்திருந்தார்.

இரண்டாம் நாளில்தான் அவருடைய பெஸ்ட் வெளிப்பட்டுள்ளது. மொத்தமாக மூன்று நாட்களுக்கும் வழங்கப்பட்ட வாய்ப்புகள் (71×3) = 213 அதில் அதிதி 67+66+68 = 201 வாய்ப்புகளை குழியில் பந்தை அடிக்க பயன்படுத்தியிருக்கிறார். இப்போது, 213 - 201 = 12 வருகிறது. அதாவது 12 வாய்ப்புகளை மிச்சப்படுத்தியிருக்கிறார். அப்படியெனில் இவரின் புள்ளிக்கணக்கு 12 Under. இப்போதைக்கு இரண்டாம் இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் அமெரிக்க வீராங்கனை இருக்கிறார். அவரின் ஸ்கோர் 15 Under. அதாவது 198 வாய்ப்புகளிலேயே பந்தை குழியில் தள்ளி 15 வாய்ப்புகளை மிச்சப்படுத்தியிருக்கிறார். அதிதியை விட இவரே சிறப்பாக சிக்கனமாக ஆடியிருக்கிறார். அதனாலயே முதலிடத்தில் இருக்கிறார். (அதிதியை விட அமெரிக்க வீராங்கனை அதிக பேர்டிக்களை அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

அதிதிக்கு பின்னால் 10 Under எடுத்து மூன்றாம் இடத்தில் நான்கு வீராங்கனைகள் இருக்கிறார்கள். நாளை நடைபெறும் போட்டிக்கு பிறகு வீராங்கனைகள் எடுத்திருக்கும் மொத்த ஸ்கோர்களை கணக்கிட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இரண்டாம் நாளில் வெளிப்பட்ட அதிதியின் பெஸ்ட் நாளையும் வெளிப்படும்பட்சத்தில் பதக்கம் உறுதி.

மழை பெய்து போட்டி தடைப்பட்டால் இப்போதைய நிலைப்படியே வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அப்படி பார்த்தாலும் அதிதிக்கு வெள்ளி உறுதி. ஆக, நாளை அதிகாலை அலாரம் வைத்துவிடுங்கள்!

- உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories