விளையாட்டு

ரோசமான தயான்சந்த் பரம்பரையின் வெறித்தனமான ஆட்டம்.. வெண்கலம் வென்று வரலாறு படைத்தது இந்தியா!

41 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்திருக்கிறது இந்திய அணி

ரோசமான தயான்சந்த் பரம்பரையின் வெறித்தனமான ஆட்டம்.. வெண்கலம் வென்று வரலாறு படைத்தது இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்த தலைமுறை கண்டிராத மிகப்பெரிய வரலாற்று வெற்றியை இந்திய ஹாக்கி அணி பெற்றிருக்கிறது. ஒலிம்பிக்கில் கடைசியாக 1980 லேயே இந்தியா பதக்கம் வென்றிருந்தது. கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்திருக்கிறது இந்திய அணி.

பெல்ஜியமுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்றிருந்தது. இதனால் ஜெர்மனிக்கு எதிரான வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா ஆட வேண்டிய சூழல் உருவானது.

வெண்கல பதக்கத்திற்கான இந்த போட்டி இன்று காலை தொடங்கியது. இத்தனை ஆண்டுகால பதக்க ஏக்கத்தை தீர்க்கும் முனைப்போடு இந்திய அணி களமிறங்கியது. ஆனால், தொடக்கம் இந்திய அணிக்கு அவ்வளவு சாதகமாக இல்லை. ஆரம்பத்திலேயே ஜெர்மனி அணியின் டிமுர் ஓருஸ் ஒரு கோலை அடித்து லீட் எடுத்தார். ஐந்தாவது நிமிடத்தில் இந்தியாவிற்கு ஒரு பெனால்டி கார்னர் கிடைத்தது. ஆனால், ஜெர்மனி அதை அழகாக தடுத்தது. அடுத்தடுத்து ஜெர்மனிக்கும் பெனால்டி கார்னர்கள் கிடைத்தது. அதை இந்திய டிஃபண்டர்கள் சிறப்பாக தடுத்தனர்.

17 வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் இந்தியாவிற்கான முதல் கோலை அடித்தார். 1-1 என ஆட்டம் சமநிலையில் இருந்த போது 24,25 நிமிடங்களில் தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து ஜெர்மனி 3-1 என பெரிய லீட் எடுத்தது. இந்திய ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால், இரண்டாம் பாதியின் கடைசி நொடிகளில் இந்திய அணி அசூரத்தனமாக ஆடியது. கடைசி நான்கு நிமிடங்களில் மட்டுமே 2 கோல்களை போட்டு 3-3 என ஆட்டத்தை சமமாக்கியது இந்தியா. தொடர்ந்து இரண்டு பெனால்டி கார்னர்களில் இந்த கோல்கள் வந்தன. ஹர்மன்ப்ரீத்தின் ட்ராக் ஃபிளிக்கை ஹர்திக் சிங் அற்புதமாக தட்டி விட்டு கோலாக ஃபினிஷ் செய்திருப்பார். இன்னொரு பெனால்டியில் ஹர்மன்ப்ரீத்தே கோல் அடித்தார்.

ரோசமான தயான்சந்த் பரம்பரையின் வெறித்தனமான ஆட்டம்.. வெண்கலம் வென்று வரலாறு படைத்தது இந்தியா!

இரண்டாம் பாதியின் முடிவில் உற்சாகமாக இடைவேளைக்கு சென்ற இந்திய அணி, அதே முனைப்போடும் வேகத்தோடும் மூன்றாம் பாதிக்கு உள்ளே வந்தது. வந்த வேக்த்திலேயே சில நிமிடங்களில் இரண்டு கோலை அடித்து 5-3 என அட்டகாசமாக லீட் எடுத்தது இந்தியா.

ஒரு பெனால்டி ஸ்ட்ரோக்கை ஏமாற்றாமல் எதிர்பார்த்தபடியே கோல் ஆக்கினார் ரூபிந்தர். அடுத்த சில நிமிடங்களிலேயே சுமித் பாஸ் செய்து கொடுத்த ஒரு பந்தை சிம்ரன்ஜித் சிறப்பாக கோலாக்கினார். இந்த போட்டியில் சிம்ரன்ஜித் அடித்த இரண்டாவது கோல் இது.

2 கோல் லீடோடு இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. மூன்றாவது பாதியின் கடைசியில் மூன்று பெனால்டி வாய்ப்புகளை பெற்றது ஜெர்மனி. ஆனால், எதையும் அவர்களால் கோலாக மாற்ற முடியவில்லை.

நான்காவது மற்றும் கடைசி பாதியின் தொடக்கத்தில் ஜெர்மனிக்கு மேலும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க இந்த முறை வெற்றிகரமாக கோலாக்கியது ஜெர்மனி. 4-5 என போட்டி நெருக்கமானது.

ஜெர்மனி ஒரு கோல் மட்டுமே பின்னிலையில் இருந்ததால் கடைசி ஏழெட்டு நிமிடங்கள் பயங்கர பரபரப்பாக இருந்தது. ஜெர்மனிக்கு வேறு அடிக்கடி பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்தியாவின் கோல் கீப்பராஹ ஸ்ரீஜேஸ் அட்டகாசமாக அவற்றை தடுத்தார்.

கடைசி நிமிடங்களில் இந்திய வீரர்களுக்கும் ஜெர்மனி வீரர்களுக்கும் இடையே காரசாரமான மோதல்களும் அரங்கேறியது. எல்லா தடைகளையும் தாண்டி இந்தியாவுக்கான வரலாறு எழுதப்பட்டது.

வாழ்ந்து கெட்ட குடும்பமாக இருந்த இந்திய அணி மீண்டும் தாங்கள் இழந்த பெருமைகளை மீட்டெடுத்தது. 41 வருடங்கள் கழித்து ஒலிம்பிக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்றது.

தயான்சந்த், பல்பீர் சிங் காலத்திற்கு நவயுக தலைமுறை ரசிகர்களை இந்த வெற்றி கொண்டு சென்றிருக்கிறது. இந்த வெற்றி இந்தியாவில் மீண்டும் ஹாக்கி உயிர்த்தெழுவதற்கான ஆதாரமாக அமையும்.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories