விளையாட்டு

போராடி தோற்ற இந்தியா.. பெனால்டி ஷாட்களால் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்! Olympics 2020

ஒலிம்பிக்: ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி தோல்வி!

போராடி தோற்ற இந்தியா.. பெனால்டி ஷாட்களால் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்! Olympics 2020
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டோக்கியோ ஒலிம்பிக்கில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கிடையேயான அரையிறுதிப்போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. இரண்டு அணிகளும் வரிந்து கட்ட ஒரு பரபரப்பான போட்டியாக அமைந்தது இது.

பெல்ஜியம் அணி ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்தது. கடைசியாக உலகக் கோப்பையையும் வென்றிருந்தது. இதனால் இந்தியாவை விட பலமிக்க அணியாகவே பார்க்கப்பட்டது. அதேபோன்றே தொடக்கத்திலேயே பெல்ஜியம் அணி ஆதிக்கம் செலுத்தியது.

போட்டி ஆரம்பித்த இரண்டாம் நிமிடத்திலேயே ஒரு பெனால்டி வாய்ப்பில் பெல்ஜியம் கோல் அடித்தது. ஆரம்பத்திலேயே லீட் எடுத்துவிட்டதால் பெல்ஜியமின் கை ஓங்கியது. ஆனால், இதன்பிறகு பெல்ஜியமின் அணுகுமுறை அவ்வளவு சிறப்பாக இல்லை. அதிகமாக டிஃபன்ஸ் செய்து நேரத்தை கடத்தும் வகையில் பாஸ்களில் ஈடுபட்டனர். இதை இந்தியா அற்புதமாக பயன்படுத்திக் கொண்டது.

முதல் கால் பகுதியின் பாதியில் கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பை ஹர்மன்ப்ரீத் அட்டகாசமாக கோலாக்கினார். போட்டி 1-1 என லெவலானது. இந்தியா விட்டுவிடவில்லை. அடுத்த நிமிடத்திலேயே மந்தீப் சிங் ஒரு ஃபீல்ட் கோலை அடித்தார். 2-1 என போட்டியில் இந்தியாவின் கை ஓங்கியது. இப்படியாக முதல் கால்பகுதி முடிவுக்கு வந்தது.

போராடி தோற்ற இந்தியா.. பெனால்டி ஷாட்களால் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்! Olympics 2020

இரண்டாம் கால்பகுதியில் சுதாரித்துக் கொண்ட பெல்ஜியம் இறங்கி அட்டாக் செய்ய ஆரம்பித்தது. தொடர்ச்சியாக பெனால்டி வாய்ப்புகள் அந்த அணிக்கு கிடைத்தது. மூன்று பெனால்டி வாய்ப்புகளை அந்த அணி கோலாக மாற்ற முடியாமல் தடுமாறினர். ஆனால், நான்காவது வாய்ப்பில் கோலாக்கி போட்டியை 2-2 என சமமாக்கினர். இதன்பிறகு, இரண்டு அணியினருமே லீட் எடுப்பதற்காக உத்வேகத்தோடு அட்டாக்கில் இறங்கினர். மேலும் சில பெனால்டி வாய்ப்புகள் இரு அணிகளுக்குமே கிடைத்த போதும் இரண்டு அணிகளுமே அதை கோலாக மாற்றியிருக்கவில்லை.

மூன்றாம் பாதியிலும் இரு அணிகளும் மூர்க்கமாக அட்டாக் செய்தாலும் டிஃபன்ஸிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தனர். இதனால் மூன்றாவது பாதியும் மேற்கொண்டு கோல்கள் இல்லாமல் போனது. இந்தியாவிற்கு ரிவியூவை தொடர்ந்து நீண்ட ஆய்வுக்கு பிறகு ஒரு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதையும் இந்திய வீரர்கள் சரியாக ஃபிளிக் செய்யாமல் விட்டிருந்தனர்.

2-2 என்ற சமநிலையுடனேயே கடைசி பாதி ஆட்டம் தொடங்கியது. இறுதிப்போட்டிக்கு செல்ல இரண்டு அணியும் கோல் அடித்தே ஆக வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்த பாதியின் தொடக்கத்திலேயே 3 பெனால்டி வாய்ப்புகள் பெல்ஜியமிற்கு கிடைத்தது. அதில் இரண்டு வாய்ப்புகளை இந்தியா போராடி தடுக்க, மூன்றாவது வாய்ப்பில் பெல்ஜியத்தை சேர்ந்த அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் அட்டாகசமாக கோலாக்கினார். இந்த போட்டியில் பெனால்டி மூலம் அலெக்சாண்டர் அடித்த இரண்டாவது கோல் இது. இப்போது போட்டி 3-2 என பெல்ஜியம் பக்கம் சென்றது. தொடர்ந்து பெல்ஜியம் மூர்க்கமாக அட்டாக் செய்தது.

கடைசி பாதியில் இந்தியாவை விட பெல்ஜியம் பக்கமே பந்து அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் பெல்ஜியமிற்கு ஒரு பெனால்டி ஸ்ட்ரோக்கும் கிடைத்தது. இதை அந்த அணியின் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் கோலாக்கி 4-2 என அந்த அணியை முன்னேறினார். கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு கோலை அடித்தது பெல்ஜியம். 5-2 என பெல்ஜியத்தின் கை ஓங்கியது.

இந்திய அணி எவ்வளவோ போராடியும் இதற்கு மேல் இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. பெல்ஜியம் அணி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரைநூற்றாண்டுக்கு பிறகு அரையிறுதிக்கு சென்ற இந்திய அணி தோற்றது வருத்தமளித்தாலும் பெருமைப்படும் வகையில் போராடியே தோற்றிருக்கின்றனர். மேலும், வெண்கல பதக்கத்திற்கான போட்டியிலும் இந்தியா ஆடவிருக்கிறது.

banner

Related Stories

Related Stories