விளையாட்டு

வரலாற்றில் முதல் முறை... ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெருமையாகத் திகழும் தமிழ்நாட்டு வீராங்கனைகள்!

டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெருமையாக தமிழக வீராங்கனைகள் சேர்க்க உள்ளனர்.

வரலாற்றில் முதல் முறை... ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெருமையாகத் திகழும் தமிழ்நாட்டு வீராங்கனைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எந்த ஒரு துறையிலுமே முதல் ஆளாக ஜெயிப்பதென்பது கடினமான விஷயமாக இருக்கும். ஏனெனில், நமக்கென்று ஒரு முன்னோடி கூட இருக்கமாட்டார்கள். அது திக்குத்திசை தெரியாத காட்டில் தனித்து விடப்பட்டதை போன்ற உணர்வை கொடுக்கும். ஆனால், அந்த தடைகளை தாண்டி வென்று முன்னேறுபவர்களே வரலாறாக மாறுகின்றனர். தமிழக வீராங்கனைகளான பவானி தேவி மற்றும் நேத்ரா குமணனை போல!

பவானி தேவி:

திரையில் சண்டை போட்ட எம்.ஜி.ஆர் க்கு வாளை வீசி ஸ்கீரினை கிழித்த பரம்பரையில் வந்த நம்மில் பலருக்கும், ஒலிம்பிக்கில் வாள் வீச்சு என ஒரு விளையாட்டு இருக்கிறதென்றே தெரியாது.

அந்த அளவிலேயே இருக்கும் வாள் வீச்சில், தமிழக வீராங்கனையான பவானி தேவி அசத்தி வருகிறார். இவர், வடசென்னையில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். பள்ளியில் வாள் வீச்சு போட்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது அதில் முதல் ஆளாக இணைந்திருக்கிறார். ஆர்வத்தோடு இணைந்திருந்தாலும் வாள்வீச்சுக்கு மிகப்பெரிய பொருளாதார பின்னணி தேவை என்பது அதன்பிறகே புரிந்தது. வாள் மற்றும் கவச உடைகளே சில லட்சங்களில் அதுவும் வெளிநாடுகளில்தான் கிடைக்கும்.

வரலாற்றில் முதல் முறை... ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெருமையாகத் திகழும் தமிழ்நாட்டு வீராங்கனைகள்!

பல நேரங்களில் வெறும் மூங்கில் குச்சிகளை மட்டுமே வைத்து பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பவானியின் பெற்றோரும் அவரின் கனவிற்கு தங்களால் முடிந்தளவு கஷ்டப்பட்டு பொருளாதார உதவிகளை செய்தனர். வாள் வீச்சில் பவானி தேவி சில வெற்றிகளை குவித்தவுடன் அவருக்கு சில அமைப்புகள் உதவ முன்வந்தன. அப்படி பலரின் உதவியோடு கடினப்பட்டே வாள்வீச்சில் முன்னேறினார் பவானி தேவி.

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் வாள் வீச்சிற்கு இதுவரை யாரும் தகுதிபெற்றதே இல்லை. முதல் முறையாக சப்ரே பிரிவில் வாள்வீச்சுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆட தேர்வாகியிருக்கிறார் பவானி தேவி. இது வரலாற்று தேர்வு. வெற்றி தோல்விகளை தாண்டி இவரது ஒலிம்பிக் தேர்ச்சியே கொண்டாடப்பட வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவின் வாள்வீச்சு முகமாக மாறியிருக்கிறார் இந்த வடசென்னை வீராங்கனை.

நேத்ரா குமணன்:

ஒலிம்பிக்கின் பாரம்பரியமான போட்டிகளில் படகு போட்டியும் ஒன்று. ஏதென்ஸின் முதல் ஒலிம்பிக்ஸிலிருந்தே இந்த போட்டி முக்கியப் பங்காக இருக்கிறது. இப்படிப்பட்ட நூற்றாண்டுப் பெருமைமிக்க ஒலிம்பிக் படகுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கும் முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் தமிழக வீராங்கனையான நேத்ரா குமணன்.

வரலாற்றில் முதல் முறை... ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெருமையாகத் திகழும் தமிழ்நாட்டு வீராங்கனைகள்!

சென்னையைச் சேர்ந்த இவரை பள்ளியின் கோடை விடுமுறைகளில் எதாவது ஒரு திறன் வளர்ப்பு முகாம்களில் இவரது பெற்றோர்கள் சேர்த்து விடுவார்கள். அப்படி ஒரு கோடை விடுமுறையில் படகு பயிற்சி முகாமில் சேர்த்து விட்டிருக்கின்றனர். அதிலிருந்தே படகுகளின் மீது பேரார்வம் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நேத்ரா.

Sailing இல் laser radial class event பிரிவில் தன்னுடைய திறனை மெருகேற்றிக் கொண்டவர் ஆசிய போட்டிகள், காமென்வெல்த் போட்டிகளிலும் பாங்கேற்றிருக்கிறார். கடந்த 2020 இல் நடைபெற்ற உலகக்கோப்பை படகோட்டும் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார். இந்தியா சார்பில் உலகளவிலான படகோட்டும் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றார்.

ஆசிய ஒலிம்பிக் சுற்றில் தகுதி பெற்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்றிருக்கிறார். படகோட்டத்தில் நேரடியாக ஒரு தகுதிச்சுற்றில் வென்று ஒலிம்பிக்கிற்கு சென்றிருக்கும் முதல் இந்தியர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

நூற்றாண்டு பெருமைமிக்க படகோட்டப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் பெண், ஒலிம்பிக் வரலாற்றிலேயே வாள்வீச்சில் போட்டி போட இருக்கும் முதல் இந்தியர் என நேத்ரா குமணனும் பவானி தேவியும் ஏற்கனவே வரலாற்றில் இடம்பிடித்துவிட்டனர். அவர்கள் பதக்கத்தை வெல்லும்பட்சத்தில் தமிழகத்திற்கு மேலும் பெருமை சேரும்.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories