விளையாட்டு

BCCI-ன் வியாபார போதையால் கொரோனா தொற்றுக்கு ஆளான வீரர்கள்; சொந்த ஊருக்கு பறந்த IPL வீரர்கள்!

கொரோனா பாதிப்பால் ஐ.பி.எல் போட்டிகளும் முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அணிகளின் மட்டத்தில் என்ன நடக்கிறது? பிசிசிஐ என்ன முடிவெடுக்கப் போகிறது.

BCCI-ன் வியாபார போதையால் கொரோனா தொற்றுக்கு ஆளான  வீரர்கள்; சொந்த ஊருக்கு பறந்த IPL வீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் இருந்ததால், கடந்த சீசன் அரபு நாடுகளில் வைத்து நடைபெற்றது. பயோ பபிள் முறையில் வீரர்கள் பாதுகாக்கப்பட்டு அந்த சீசன் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவிலேயே வைத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, அஹமதாபாத் நகரங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, சென்னை மற்றும் மும்பையில் வைத்து முதல் கட்டமாக சில போட்டிகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், இதன்பிறகு கொரோனா பரவல் இந்தியாவில் கடுமையாக அதிகரித்தது. இதனால் அச்சமுற்ற வெளிநாட்டு வீரர்கள் சிலர் தங்கள் நாடுகளுக்கு திரும்ப தொடங்கினர். ஆண்ட்ரு டை, ஆடம் ஷம்பா போன்றோரெல்லாம் ஐ.பி.எல் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துவிட்டே விமானம் ஏறினர்.

இந்நிலையில்தான் அதிக பாதுகாப்புமிக்க ஐ.பி.எல்-ன் பயோ பபுளுக்குள்ளும் கொரோனா புகுந்திருக்கிறது. கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் காரணமாக நேற்று நடைபெறவிருந்த கொல்கத்தா, பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பிறகு வந்த தகவல்கள் மேலும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி நாளை ஆடவிருந்த போட்டியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

BCCI-ன் வியாபார போதையால் கொரோனா தொற்றுக்கு ஆளான  வீரர்கள்; சொந்த ஊருக்கு பறந்த IPL வீரர்கள்!

சென்னை அணியும் கொல்கத்தா அணியும் ஒருவார கால கடுமையான குவாரண்டைனுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். டெல்லி அணியும் குவாரண்டைனில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. மும்பை அணியும் சன்ரைசர்ஸ் அணியும் தங்கள் பயிற்சிகளை ரத்து செய்துள்ளனர். கொரோனாவால் ஐ.பி.எல் அணிகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் தொடருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பல ஆயிரம் கோடிகளில் வியாபாரம் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளை ரத்து செய்ய நினைப்பார்கள் என நினைப்பது மூடத்தனமே. பிசிசிஐ தன்னால் இயன்ற வரை இந்த தொடரை நடத்திவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது.

கொல்கத்தா, பெங்களூரு, அஹமதாபாத்தில், டெல்லி போன்ற நகரங்களில் நடைபெறும் போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு மும்பையிலேயே முழுத்தொடரையும் நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறது பிசிசிஐ. மும்பையில் வான்கடேவை தவிர மேலும் இரண்டு மைதானங்கள் போட்டியை நடத்த தயாராக இருப்பதால், 8 அணிகளும் தங்குவதற்கான ஹோட்டல்களை புக் செய்யும் வேலைகளில் பிசிசிஐ இறங்கிவிட்டது. மே7 முதல் போட்டிகள் அனைத்தும் மும்பைக்கு மாற்றப்படும் என தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கொரோனாவால் மக்கள் துவண்டு போயிருக்கும் போது ஐ.பி.எல் கொண்டாட்டங்கள் தேவைதானா என்கிற விமர்சனம் பல தரப்பினராலும் கடுமையாக முன்வைக்கப்பட்டது. அதையெல்லாம் பிசிசிஐ ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. இப்போது பயோ பபுளுக்குள்ளேயே கொரோனா புகுந்திருக்கிறது. இப்போதும் போட்டியை நடத்துவதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய் ஷாதான் பிசிசிஐயின் செயலாளர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற்றன. பாதி தொடர் முடிந்திருந்த போதே சில அணிகளின் வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உடனேயே அந்த தொடர் எந்தவித தாமதமுமின்றி முழுமையாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா பரவல் வேகம் முடிந்த பிறகு மீண்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடங்கப்பட்டு எஞ்சிய போட்டிகள் நடைபெறும். வியாபரத்தை ஒதுக்கித்தள்ளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

இந்த நிலையில், வீரர்கள் கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து தற்காலிகமாக ஐபிஎல் போட்டிகள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்த தற்காலிக ரத்து ஒரு வாரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories