விளையாட்டு

எண்ணி 6-வது பந்தில் அவுட் - சொல்லி வைத்தது போல் வார்னரை காலி செய்த சிராஜ்!

Ind v Aus 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரிலேயே வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார் சிராஜ். சிராஜிடம் வார்னர் வீழ்வது இது 2-வது முறை

எண்ணி 6-வது பந்தில் அவுட் - சொல்லி வைத்தது போல் வார்னரை காலி செய்த சிராஜ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்த ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் தொடரில் வார்னரை இரண்டாவது முறையாக வீழ்த்தி அசத்தியிருக்கிறார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். இன்று அதிகாலை தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில், முதல் ஓவரிலேயே அவரை வெளியேற்றினார் சிராஜ்.

பும்ரா போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில், இன்று இந்திய அணிக்குப் பந்துவீச்சைத் தொடங்கினார் சிராஜ். முதல் பந்தை அவர் ஃபுல் லென்த்தில் வீச, அதில் சிங்கிள் எடுத்தார் வார்னர். அடுத்து நான்காவது பந்தில் பேட் செய்ய வந்தவருக்கு மீண்டும் அதே லென்த்திலேயே வீசினார் சிராஜ். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்றதால் விட்டுவிட்டார் வார்னர். அடுத்த பால், லென்த்தில் பிட்சாகி ஆஃப் ஸ்டம்ப் நோக்கி வந்தது. டாட். அதுவரை வீசப்பட்ட 3 பந்துகளும் ஒன்று ஸ்டம்ப் லைனிலோ அல்லது ஃபுல் லென்த்திலேயோதான் வீசப்பட்டது. அடுத்த பந்து, இரண்டுக்கும் நேரெதிராக, நல்ல லென்த்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியெ செல்லும் வகையில் வீசினார் சிராஜ். அதைச் சரியாகக் கணிக்காத வார்னர், எட்ஜாகி ஸ்லிப்பில் நின்ற ரொஹித்திடம் கேட்சானார்.

எண்ணி 6-வது பந்தில் அவுட் - சொல்லி வைத்தது போல் வார்னரை காலி செய்த சிராஜ்!

சிட்னி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் கிட்டத்தட்ட அதேதான் நடந்தது. சிராஜ் பந்துவீச்சில் தான் சந்தித்த ஆறாவது பந்திலேயே ஸ்லிப்பில் நின்ற புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் வார்னர். இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் 12 பந்துகள் தாக்குப்பிடித்து, அஷ்வினிடம் அவுட்டானார். இந்தத் தொடரில் சிராஜ் வீசிய 22 பந்துகளில் இரண்டு முறை வீழ்ந்திருக்கிறார் வார்னர். அதில் 8 ரன்கள் அடித்திருக்கிறார்.

இப்போது மட்டுமல்ல, இந்த dual ஐ.பி.எல் வரை நீள்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்.சி.பி மோதிய எலிமினேட்டர் போட்டியில் சிராஜ் பந்துவீச்சில்தான் அவுட்டானார் வார்னர். சிராஜ் வீசிய 6 பந்துகளில் 8 ரன் எடுத்தவர், கீப்பர் டி வில்லியர்ஸிடம் கேட்சானார். ஆக, கடைசியாக வார்னருக்கு வீசிய 28 பந்துகளில் அவரை 3 முறை அவுட்டாக்கியிருக்கிறார் சிராஜ். அவரது பந்துவீச்சு எவ்வளவு விமர்சனுத்துக்குள்ளானாலும், ஒரு உலகத்தர பேட்ஸ்மேனை திணறவைக்கிறார் என்பதே அவர் திறனுக்கு சான்று.

என்ன, இன்று முதல் ஓவரிலேயே சிராஜ் வார்னரை வெளியேற்றது ஒரு அட்டகாச காட்சியைப் பார்க்க முடியாமல் செய்துவிட்டது. இன்று இரண்டாவது ஓவரை வீசினார் நடராஜன். அவரது பந்துவீச்சை வார்னர் சந்தித்திருப்பார். அது நடைபெறவில்லை. நடராஜன் இந்த ஐ.பி.எல் தொடரில் அதிக வாய்ப்புகள் பெற்றதற்கு சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஒரு முக்கியக் காரணம். நடராஜன் இந்திய அணிக்கு அறிமுகம் ஆனது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பதிவு செய்திருந்தார் வார்னர்.

ஆனால், இந்த இந்திய சுற்றுப் பயணத்தில் எந்த ஃபார்மட்டிலும் அவர் நடராஜனின் பந்துவீச்சை சந்திக்கவில்லை. முதலில் நடந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில்தான் நடராஜன் அறிமுகம் ஆனார். ஆனால், இரண்டாவது போட்டியின்போதே காயமடைந்து வெளியேறினார் வார்னர். அதன்பின் டி-20 தொடரிலும் விளையாடவில்லை. நடராஜன் அறிமுகமான இந்த டெஸ்ட் போட்டியிலும், அவரை முதல் ஓவரிலேயே காலி செய்துவிட்டார் முகமது சிராஜ். நடராஜன் vs வார்னர் போட்டியை இரண்டாவது இன்னிங்ஸிலாவது பார்க்க முடியுமா, இல்லை அதற்கும் சிராஜ் முற்றுப்புள்ளி வைப்பாரா பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories