விளையாட்டு

இந்திய அணியின் ஓப்பனராக ஆதிக்கம் செலுத்துவாரா சுப்மன் கில் - அச்சாரம் போட்ட அரைசதம்! #IndvAus

இந்திய அணியின் ஓப்பனராக களமிறங்கிய சுப்மன் கில், ஆஸ்திரேலிய மண்ணில் தனது டெஸ்ட் கெரியரின் முதல் அரைசதத்தை அடித்து ஆட்டமிழந்திருக்கிறார்.

இந்திய அணியின் ஓப்பனராக ஆதிக்கம் செலுத்துவாரா சுப்மன் கில் - அச்சாரம் போட்ட அரைசதம்! #IndvAus
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களில் ஆல் அவுட்டாகிவிட, இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருக்கிறது. இந்திய அணியின் ஓப்பனராக களமிறங்கிய சுப்மன் கில், ஆஸ்திரேலிய மண்ணில் தனது டெஸ்ட் கெரியரின் முதல் அரைசதத்தை அடித்து ஆட்டமிழந்திருக்கிறார். இளம் வீரராக ஆஸி மண்ணில் ஓப்பனராக அறிமுகமாகி, ஆஸியின் வேகப்புயல்களை சமாளித்து அசத்துவது என்பது அவ்வளவு லேசான காரியமில்லை. அதற்கு பெரும் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். இன்று சுப்மன் கில் சந்தித்த 101 பந்துகளிலுமே அப்படி ஒரு பெரும் தன்னம்பிக்கை வெளிப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியை தொடரை வெல்ல வேண்டுமாயின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் வலுவாக இருந்தே ஆக வேண்டும். ஆனால், இந்த சீரிஸில் இந்திய அணிக்கு ஏற்பட்ட முதல் பிரச்சனையே ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் குறித்ததுதான். பிரித்வி ஷா அவுட் ஆஃப் பார்மில் இருக்கிறார் என்று தெரிந்தே, அவருக்கு முதல் டெஸ்ட்டில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் எதிர்பார்த்தது போலவே கடுமையாக சொதப்பிவிட்டு சென்றார். மயங்க் அகர்வாலும் சொல்லும்படியான ஃபார்மில் இல்லை. யார் முதலில் டக் அவுட் ஆகிறார்கள் என்கிற போட்டிதான் இந்திய அணியின் ஓப்பனர்களுக்கு இடையே நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இந்நிலையில்தான் கடந்த போட்டியில் வேறு வழியின்றி சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தன்னுடைய தேர்வு மிகச்சரியானது என்பதை அந்தப் போட்டியிலேயே அனைவருக்கும் நிரூபித்துவிட்டார் கில். கடைசி செஷனின் கடைசி சில ஓவர்களை பேட்ஸ்மேன்கள் எப்போதுமே பொறுமையாக ஆடி முடித்துவிட்டு அடுத்த நாள் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், கில் அன்றைக்கே ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் என எல்லாரையும் கவுன்ட்டர் அட்டாக் செய்து மிரட்டியிருப்பார்.

'நம்மகிட்ட ரோஹித் இல்ல... கோலி இல்ல; அங்க ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் என ஒரு படையே இருக்கு. ஷார்ட் பிட்ச்சா போட்டு இந்திய அணியை கவுத்துருவாங்க' என அனத்திக் கொண்டிருந்த கூட்டம் வாய் பிளக்கும் அளவுக்கு புல் ஷாட் ஆடி மிரட்டியிருப்பார். ஆஸி பௌலர்கள் எதாவது ஒரு டெலிவரியை கொஞ்சம் அச்சுறுத்தும் வகையில் வீசி தடுமாற வைத்துவிட்டால், அதற்கு அடுத்த பந்தே துணிச்சலாக பவுண்டரிக்கு ஷாட் ஆடி, பதிலடி கொடுத்து கடந்த போட்டியிலேயே தனது தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் நிரூபித்தார்.

இந்திய அணியின் ஓப்பனராக ஆதிக்கம் செலுத்துவாரா சுப்மன் கில் - அச்சாரம் போட்ட அரைசதம்! #IndvAus

இன்று அவர் சந்தித்த 101 பந்துகளுக்குமே கூட அந்த தன்னம்பிக்கையும் தைரியமும்தான் அடிப்படை மூலதனமாக இருந்தது.' எதிரில் நிற்பவர் யாராக இருந்தால் என்ன... எனக்கு என் திறன் மீது முழுநம்பிக்கை இருக்கிறது, அதுபோதும்' என்கிற மனநிலையில்தான் சுப்மன் கில் ஆடிக்கொண்டிருந்தார். அதனாலேயே, ஆஸி பௌலர்களால் ஷாவுக்கும் மயங்குக்கும் கொடுக்க முடிந்த பதற்றத்தை கில்லுக்கு எந்த நொடியிலும் கொடுக்கவே முடியவில்லை. பேட்டில் பட்டு ஸ்டம்பை தகர்க்க சென்ற பந்தை கில் செம கூலாக காலை வைத்து தட்டிய அந்தவிதமே அவரின் தன்னம்பிக்கையையும் பதற்றமில்லா மனநிலையையும் படம் போட்டுக்காட்டியது.

பிட்ச்சில் பெரிதாக மூவ்மென்ட் இல்லை என்பதால், ஷாட் பிட்ச்சாக வீசி ரோஹித்தையும் சுப்மன் கில்லையும் தடுமாற வைக்க வேண்டும் என ஒரு ப்ளானை கொண்டு வந்தனர் ஆஸி பௌலர்கள். ஆனால், அவர்கள் வீசிய அத்தனை ஷாட் பால்களையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டது இந்த கூட்டணி. குறிப்பாக, சுப்மன் கில். பந்தை அத்தனை துல்லியமாக கணித்து க்ளீன் ஹிட்டாக புல் ஷாட் ஆடியிருந்தார். ரோஹித் க்ரீஸில் இருக்கும்போது இன்னிங்ஸின் முதல் புல் ஷாட்டே சுப்மன் கில்லிடம் இருந்துதான் வந்தது. தரமான டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு எந்த பந்தை லீவ் செய்ய வேண்டும், எதை ஆட வேண்டும் என்பது தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். கில், ஷார்ட் டெலிவரிகள் வந்தாலே புல் ஷாட்டுக்கு பேட்டை சுற்றாமல் விட வேண்டிய பந்துகளை சிறப்பாக லீவும் செய்து அசத்தினார்.

கில் அவுட் ஆவதற்கு கொஞ்சம் நேரம் முன்பு வரை 41 டெலிவரிக்களை ஷார்ட்டாக வீசியிருந்தனர் ஆஸி பௌலர்கள். இதில் 40 ரன்களை இந்திய அணி சேர்த்திருந்தது. இந்தியாவில் புல் ஷாட் ஆட ரோஹித்தை தவிர ஆளே இல்லை என வருத்தப்பட்டு கொண்டிருந்த ரசிகர்களுக்கு கில்லின் புல் ஷாட்டுகள் அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். புல் ஷாட் மட்டுமில்லை, பேக் ஃபுட்டை ஊன்றி ஆஃப் சைடில் இவர் ஆடிய ஷாட்களும் ஸ்ருதி சுத்தமாக இருந்தது. மொத்தம் 8 பவுண்டரிகளை அடித்திருக்கிறார். எந்த இடத்திலுமே பௌலர்களை முழுமையாக ஆதிக்கம் செலுத்தவிடாமல் கவுன்டடர் அட்டாக் செய்துகொண்டே இருந்தார். 100 பந்துகளில் அரைசதம் கடந்த கில்தான், இளம் வயதில் ஆஸியில் அரைசதம் அடித்த வீரர்.

'சுப்மன் கில் பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் 400 ரன்கள் அடித்தபோது கவனம் முழுவதும் அவர் மீது குவிந்தது. காரணம், அவர் மும்பையில் ஆடிக்கொண்டிருந்தார். அதேநேரத்தில், சண்டிகரில் சத்தமே இல்லாமல் கில் சதமடித்துக் கொண்டிருந்தார்' என ஹர்ஷா போக்ளே கமென்ட்ரியில் பேசியிருந்தார். முதல்தர போட்டிகளில் சிறப்பான ஆட்டம், U19 உலகக்கோப்பையில் அதிகபட்ச ரன்களை எடுத்தவர், ஐ.பி.எல் தொடரில் கவனம் பெறும் அளவுக்கு ஆடியவர் என சுப்மன் கில்லுக்கு அத்தனை அடையாளங்கள் இருந்தாலும், இந்திய அணியிக்கான வாய்ப்பு அவருக்கு கொஞ்சம் தாமதமாகவே கிடைத்திருக்கிறது. இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்கா, வங்கதேச தொடர்களிலுமே ஸ்குவாடில் இடம் கிடைத்திருந்தாலும் ஆஸியில்தான் அவருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்திருக்கிறது.

பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பிறகும் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், உலகத்துக்கே அவுட் ஆஃப் பார்மில் இருக்கிறார் என தெரிந்த ப்ரித்வி ஷாவுக்கு முதல் டெஸ்ட்டில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும். இரண்டாவது டெஸ்ட்டில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்த போதும், 'சுப்மன் கில் ஓப்பனிங் இறங்குவதை விட மிடில் ஆர்டரில் இறங்கினால்தான் சிறப்பாக இருக்கும்' என பல முன்னாள் வீரர்களும், விமர்சகர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைக்கு ஆஸி பௌலர்களை எதிர்த்து அட்டாக் செய்து, இந்தியாவுக்கு பாசிட்டிவ் ஓப்பனிங் கொடுத்து அனைவரின் கருத்தையும் பொய்யாக்கியிருக்கிறார்.

'கடந்த பத்தாண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு 10-20 புதிய சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் அறிமுகமாகிவிட்டனர். ஒவ்வொரு அணியிலும் ஒரு 2-3 ஆகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், கடந்த பத்தாண்டில் மிகச்சிறப்பாக செயல்பட்ட ஓப்பமிங் பேட்ஸ்மேன்கள் என்று யாரை சொல்வீர்கள்? குக், வார்னர் போன்ற ஒன்றிரண்டு பெயர்கள் மட்டும்தான் நம் நினைவுக்கு வரும்' என கடந்த பாக்சிங் டே போட்டியின்போது பாக்ஸில் ஹர்ஷா போக்ளே பேசியிருப்பார்.

சுப்மன் கில்லின் இந்த ஆட்டத்தைப் பார்க்கும்போது அடுத்த பத்தாண்டுக்கு உலகளவில் ஓப்பனராக ஆதிக்கம் செலுத்தப்போகும் வீரராக கில் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கில் சந்தித்த இந்த 101 பந்துகளில் வெளிப்பட்ட தன்னம்பிக்கை, அவர் அடுத்தடுத்து ஆடப்போகும் போட்டிகளிலும் வெளிப்பட்டால் அது நிச்சயம் நடக்கும்!

banner

Related Stories

Related Stories