விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்... நடராஜனின் முன் காத்திருக்கும் சவால்கள்

நடராஜனை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் என்பது பரிசோதிக்கப்படாத களம். எனவே, நிச்சயமாக நடராஜன் தன்னை பெரிதாக தகவமைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்... நடராஜனின் முன் காத்திருக்கும் சவால்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

தமிழக வீரரான நடராஜனுக்கு மீண்டும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. உமேஷ் யாதவ் காயம் காரணமாக ஆஸி தொடரிலிருந்து வெளியேறியிருப்பதால் அவருக்கு பதிலாக மீதமிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடராஜனுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? ஒயிட்பாலில் சாதித்ததை போல ரெட் பாலிலும் அவரால் சாதிக்க முடியுமா எனப் பல கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.

சைனி, ஷர்துல் தாகூர், நடராஜன் ஆகிய மூன்று பேரில் ஒருவரைத்தான் ரஹானேவால் தேர்ந்தெடுக்க முடியும். நடராஜன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஒருவேளை நடராஜனே தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரால் எந்தளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்கம் செலுத்த முடியும்?

நடராஜனின் பௌலிங் ஸ்டைல் ஷாட்டர் ஃபார்மட் கேம்களுக்கே உரித்தானது. அதிகமாக யார்க்கர்களை மட்டுமே வீசுகிறார். விளையாடிய ஒரேயொரு ODI போட்டியிலும் சில கட்டர்களையும் ஷார்ட் பிட்ச் டெலிவரிகளையும் வீசினார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு இது மட்டுமே போதாது. புதிய-பழைய இரண்டு பந்துகளிலுமே ஸ்விங் செய்ய வேண்டும். பேட்ஸ்மேன் எந்த லைனில் திணறுகிறார் என்பதை கண்டுபிடித்து அதே லைன் & லெந்த்தில் தொடர்ந்து விக்கெட் விழும் வரை வீசிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் நடராஜனால் செய்ய முடியுமா என தெரியவில்லை. ஏனெனில், அவர் அதிகபட்சமாக ரெட் பால் கிரிக்கெட் மட்டுமே ஆடியுள்ளார். அவரை பொறுத்தவரைக்கும் டெஸ்ட் கிரிக்கெட் என்பது பரிசோதிக்கப்படாத களம். எனவே, நிச்சயமாக நடராஜன் தன்னை பெரிதாக தகவமைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் திவாகர் வாசு Indian Express நாளிதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

'நடராஜன் டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அவர் உடனடியாக எல்லா ஃபார்மட்டிலும் சாதித்துவிடுவார் என்று என்னால் சொல்ல முடியாது. அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். நடராஜன் கடினமான உழைப்பாளி மற்றும் கற்றுக்கொள்வதில் ஆர்வம்மிக்கவர். இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணுடன் அவர் கைகோர்க்கும்போது, சீக்கிரமே பல விஷயங்களையும் கற்றுக்கொள்வார். டெஸ்ட் கிரிக்கெட் எளிமையான விஷயம் கிடையாது. நடராஜனின் கையில் இப்போது இருக்கும் யார்க்கர்களும் ஸ்லோயர் ஒன்களும் மட்டுமே போதாது. அவர் ஸ்விங் செய்ய வேண்டும்... ஒரே லைனில் வீச வேண்டும்... பாலை கட் செய்ய வேண்டும். நடராஜனிடம் வேகமும் இல்லை ஸ்விங்கும் இல்லை என்பதால் அவரை ஒரு ஸ்ட்ரைக் பௌலராக இந்தியா நினைக்காது. எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் வந்து திடீர் விக்கெட்டுகளை எடுத்து கொடுக்கும் பௌலராகத்தான் அவர் கருதப்படுவார். அவருடைய ஆங்கிளிலும் ஸ்விங்கிலும் இன்னும் அதிக உழைப்பைக் கொட்டி கற்றுக்கொண்டால் டெஸ்ட் கிரிக்கெட்டும் அவருக்கு சிறப்பாக அமையும்' என பேசியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்... நடராஜனின் முன் காத்திருக்கும் சவால்கள்

தமிழக அணியின் கேப்டன் பாபா அப்ராஜித், நடராஜன் குறித்து பேசும்போது, 'நடராஜனுடன் நான்கு ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். அவர் எப்போதும் எளிதில் சோர்வடைந்து விடமாட்டார். அவரால் லாங் ஸ்பெல்களையும் வீச முடியும். கொஞ்சம் இடைவேளை விட்டு வந்தாலும் பழைய வேகத்தில் மீண்டும் வீசமுடியும். அவர் மிகத்துல்லியமாக வீசுவார் என்பதால் எப்போதெல்லாம் விக்கெட் தேவைப்படுமோ அப்போதெல்லாம் அவரைத்தான் அழைப்பேன்' என பேசியுள்ளார்.

மூன்றாவது போட்டி நடைபெறும் சிட்னி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நடராஜனுக்கு கூடுதல் சவால்கள் காத்திருக்கிறது.

நடராஜனின் பௌலிங் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள் எல்லாம் புறந்தள்ள முடியாதவை. எத்தனையோ தடைகளை தாண்டி வந்தவர். இதையும் தாண்டி வந்து ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டராகவும் ஜொலிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.

banner

Related Stories

Related Stories