விளையாட்டு

ப்ரித்வி ஷாவுக்கு இன்னொரு வாய்ப்பு... கோலியின் திட்டம் என்ன? - நாளை தொடங்குகிறது முதல் டெஸ்ட்! #INDvAUS

இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலுவாக இருப்பதால், ப்ரித்வி ஷாவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கிப் பார்க்கலாம் என, அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கலாம்.

ப்ரித்வி ஷாவுக்கு இன்னொரு வாய்ப்பு... கோலியின் திட்டம் என்ன? - நாளை தொடங்குகிறது முதல் டெஸ்ட்! #INDvAUS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நாளை தொடங்கவுள்ளது. பிங்க் பந்தில் பகல் இரவாக நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக பயிற்சிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது ப்ரித்வி ஷாவுக்கே தொடர்ந்து இடம் கிடைக்குமா, அஷ்வின் இடம்பெறுவாரா, விக்கெட் கீப்பரில் பன்ட், சஹா இருவரில் யார் பெயர் டிக் அடிக்கப்படும் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

எல்லோரும் நினைத்தபடி, மீண்டும் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான ஆப்ஷன் என அஷ்வின் பெயர் டிக் அடிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பன்ட்டை விட சஹா நல்ல சாய்ஸ் என கோலி நினைத்திருக்கிறார்.

ஆக, சுப்மான் கில் டெஸ்ட் ஜெர்ஸி அணிய இன்னும் காத்திருக்க வேண்டும். பயிற்சிப் போட்டியில் அவர் நன்றாக பெர்ஃபார்ம் செய்திருப்பதைப் பார்த்து, அவர்தான் மயாங்க் அகர்வால் உடன் ஓபனிங் இறங்குவார் என எதிர்பார்த்தனர். ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், ஆலன் பார்டர் இருவருமே, சுப்மான் கில்லை தேர்வு செய்ய வேண்டும் என்றுதான் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், கோலி ஹேட் அதர் ஐடியாஸ்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூஸிலாந்து சென்றிருந்த இந்திய அணி இரண்டு டெஸ்ட்டில் விளையாடியது. கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ப்ரித்வி ஷா, ஓபனிங் இறங்கி 64 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார். அதைத் தவிர்த்து மற்ற மூன்று இன்னிங்ஸ்களில் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இருந்தாலும், அவரையே ஓபனிங் இறக்கி வாய்ப்பு கொடுக்கலாம், டே-நைட் டெஸ்ட்டில் புதிதாக ஒருவரை இறக்கி பரீட்சார்த்த முயற்சியில் இறங்கவேண்டாம் என இந்திய அணி நினைத்திருக்கலாம்.

சிட்னியில் நடந்த இரண்டு பயிற்சி போட்டிகளிலும் 0, 19, 40, 3 என சுமாரான பெர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்தியது ஒரு பக்கம் இருந்தாலும், முதல் போட்டியில் ஃபுட்வொர்க் என்பது சுத்தமாக இல்லை, ஷாட் செலக்ஷனில் தவறு செய்கிறார் என, ப்ரித்வி ஷா மீது கவாஸ்கர், பார்டர் உள்பட எல்லோருமே குறை சொல்லியிருந்தனர். அப்படியிருந்தும் அவருக்கு முதல் டெஸ்ட்டில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால் ஆச்சர்யம்தான். தவிர, இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலுவாக இருப்பதால், ப்ரித்வி ஷாவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கிப் பார்க்கலாம் என, அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கலாம்.

அதேபோல, ரவீந்திர ஜடேஜா concussion பிரச்னையில் இருந்து இன்னும் மீளாததால், ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின் உடன் களமிறங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. கடைசியாக, 2014–15 ஆஸி சுற்றுப் பயணத்தின்போது, முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வினுக்குப் பதிலாக கரண் ஷர்மாவை தேர்வு செய்தது, இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், அந்தப் போட்டியில் அஷ்வினுக்குப் பதிலாக களமிறங்கிய கரண் ஷர்மாவுக்கு போதிய அனுபவம் இல்லாதது ஒருபக்கம், அதே பிட்ச்சில் ஆஸி ஸ்பின்னர் நாதன் லயன் கேம் சேஞ்ராக உருவெடுத்தார். அதனால், இந்தமுறை முதல் டெஸ்ட்டில் சேஃப் ஆப்ஷனாக அஷ்வினை டிக் அடித்துள்ளனர்.

விக்கெட் கீப்பர் பக்கம் வந்தால், ஆசியாவுக்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டிகளில், சமீபகாலமாக ரித்திமான் சஹாவுக்குப் பதிலாக, ரிஷப் பன்ட்டே களமிறங்கி வந்தார். ஆனால், அடிலெய்ட் டெஸ்ட்டில் பன்ட்டுக்கு பதிலா சஹா பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். ஏனெனில், பயிற்சிப் போட்டியில் சதம் அடித்து, நல்ல ஃபார்மில் இருந்தார் பன்ட். ஆனால், அணி நிர்வாகம் சஹாவை டிக் அடிக்கக் காரணம், அவரது விக்கெட் கீப்பிங் திறமை. பிங்க் பந்தின் தாக்கம் வேறு மாதிரி இருக்கும் என்பதால், அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் வேண்டும் என சஹாவை தேர்வுசெய்துள்ளனர். அதனால், நியூஸிலாந்து சுற்றுப் பயணத்துக்குப் பின், பன்ட் இன்னும் ஒரு சர்வதேசப் போட்டியில் கூட பங்கேற்காத நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.

முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா பிரதான பெளலர்கள் எனில் மூன்றாவது பெளலர் யார் என்ற கேள்வி எழுந்தது. இஷாந்த் ஷர்மா இல்லாததால், உமேஷ் யாதவ் அந்த இடத்தை நிரப்பியுள்ளார். இதற்கு முன், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இடம்பெற்றிருந்தது மட்டுமல்லாது, பயிற்சிப் போட்டிகளில் 48 ரன்கள் கொடுத்து 3 விக்கெட், 14 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டு எடுத்து இம்ப்ரெஸ் செய்துள்ளார் உமேஷ்.

இந்திய அணி: மயாங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.

banner

Related Stories

Related Stories