விளையாட்டு

வொய்ட் வாஷை தவிர்க்குமா இந்திய அணி? : மூன்றாவது ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் தேவை? #IndvAus

ஒயிட் வாஷை தவிர்க்க பலமிக்க ஆஸி அணியை வீழ்த்தி, ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி?

வொய்ட் வாஷை தவிர்க்குமா இந்திய அணி? : மூன்றாவது ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் தேவை? #IndvAus
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை தோற்றதன் மூலம் ஆஸியிடம் தொடரை இழந்திருக்கிறது இந்திய அணி. நாளை நடைபெறும் போட்டியிலும் தோல்வியை தழுவினால், ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆக வேண்டியிருக்கும். ஒயிட் வாஷை தவிர்க்க பலமிக்க ஆஸி அணியை வீழ்த்தி, ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி?

முதல் இரண்டு போட்டிகளும் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. நாளை நடைபெறவிருக்கும் மூன்றாவது போட்டி கான்பெராவில் நடைபெற இருக்கிறது. இரண்டு மைதானங்களுக்கும் பெரிய அளவில் வேறுபாடு கிடையாது. இந்த மைதானமும் பேட்டிங்குக்கு சாதகமாகவே இருக்கும், என்றாலும் பௌலர்கள் மொத்தமாக நம்பிக்கையிழக்காத வகையில், அவர்களுக்கும் கொஞ்சம் ஆதரவு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முதல் இரண்டு போட்டிகளை தோற்றதில் இந்திய அணியின் மோசமான பெர்ஃபார்மென்ஸுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே அளவு பங்கு டாஸுக்கும் இருக்கிறது. இரண்டு போட்டிகளிலும் ஆஸி கேப்டன் ஃபின்ச்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். பௌலர்களுக்கு சப்போர்ட்டே இல்லாத பிட்ச்சில் இந்திய பௌலர்களை வெளுத்தெடுத்து 375, 390 என இமாலய ஸ்கோரை இந்திய அணிக்கு டார்கெட்டாக வைத்தது. ஒருவேளை டாஸை கோலி வென்று இந்தியா முதல் பேட்டிங் செய்திருந்தாலும் நிச்சயம் பெரிய ஸ்கோரை எட்டியிருக்க முடியும். அப்படி நடந்திருந்தால் போட்டியின் முடிவுகளும் வேறு மாதிரியாக இருந்திருக்கலாம். டாஸ் கோலியின் கையில் இல்லை என்றாலும் டாஸ் முடிவுகள் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை. நாளை கோலி டாஸை வெல்ல வேண்டும், முதல் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். இதுவே இந்திய அணிக்கு மிகப்பெரிய பாசிட்டிவ்வாக அமையும்.

கடைசி இரண்டு போட்டிகளின் முடிவை வைத்து அணியில் பெரிய மாற்றம் செய்ய வேண்டியதில்லை என்றாலும் ஒரு சில மாற்றங்களை முயன்று பார்க்கலாம். சாம்சனை பெஞ்சிலேயே வைத்து அனுப்பிவிடாமல் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைத்தால் மயங்க் அகர்வாலை நீக்கிவிட்டு, ராகுலை ஓப்பனிங் இறக்கி சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டரில் இறக்கலாம். அதேமாதிரி, பௌலிங்கில் சைனி இரண்டு போட்டிகளிலும் ரன்னை வாரி வழங்கியிருக்கிறார். அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூரையோ, நடராஜனையோ அணிக்குள் கொண்டு வரலாம். ஷர்துல் தாகூரை விட நடராஜனை உள்ளே கொண்டு வருவது சிறப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறது. பிட்ச்சில் பௌலர்களுக்கு ஒத்துழைக்க ஒன்றுமே இல்லாவிட்டாலும் இவரின் யார்க்கர்கள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும், நடராஜனின் பௌலிங் ஸ்டைல் முழுவதுமாக டி20–க்குதான் செட் ஆகும் என்கிற பார்வையும் இருக்கிறது. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. பத்து ஓவர்களை வீசும்போது அவரின் பௌலிங் எப்படியிருக்கிறது என்பதை சோதித்து பார்க்க வேண்டும். அடுத்த இரண்டு மூன்று வருடங்கள் இந்திய அணியின் தேர்வுக்குழுவின் பார்வையில் நடராஜன் இருக்கப்போகிறார் எனில் இது ரொம்பவே முக்கியம். இந்த தொடரை இழந்தாயிற்று, அடுத்து டி20 தொடர் இருக்கிறது. அங்கே இவரை நேரடியாக ஆஸியின் பெருந்தலைகளுக்கு எதிராக இறக்கிவிடுவதை விட, இந்த போட்டியை ஒரு வார்ம்-அப் போட்டி போன்று கொடுத்தால், ஆஸி சூழலுக்கேற்ப அவரும் தன்னை தயார்படுத்திக்கொள்வார். ஹர்திக்கிடம் இருந்து கடந்த போட்டி போன்றே சிறப்பான இரண்டு மூன்று ஓவர்கள் வர வேண்டியது ரொம்பவே முக்கியம்.

வொய்ட் வாஷை தவிர்க்குமா இந்திய அணி? : மூன்றாவது ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் தேவை? #IndvAus

ஆஸ்திரேலிய அணியில் முதல் போட்டியில் ஸ்டாய்னிஸ் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், கடந்த போட்டியில் வார்னர் காயம்பட்டு வெளியேறியிருக்கிறார். இது நிச்சயம் ஆஸிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். ராகுல் சொன்னதைப் போல வார்னரின் காயம் குணமடைய தாமதம் ஆனால், அது இந்தியாவுக்கு நல்லதே. ஆனால், ஃபின்ச்சிடம் வேறு ஆப்ஷன்கள் இருக்கவே செய்கிறது. மேத்யூ வேடை அணிக்குள் கொண்டு வந்து ஓப்பனிங் இறக்குவது அல்லது அலெக்ஸ் கேரி, லபுஷேன் இருவரில் ஒருவரை ஓப்பனிங் இறக்குவது என தனக்கு மூன்று ஆப்சன்கள் இருப்பதாக ஃபின்ச் தெரிவித்துள்ளார்.

கான்பெரா மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டிகளில் ஆஸி இதுவரை தோற்றதில்லை. கடந்த இரண்டு போட்டிகளில் ஆஸி பேட்ஸ்மேன்கள் கொடுத்த பெர்ஃபார்மென்ஸை அப்படியே தொடர்ந்தால் போதும். நாளை நடைபெறும் போட்டியையும் கைப்பற்றிவிடலாம். ஆனால், முதலில் சொன்னதைப் போல டாஸில் இந்தியா வென்று முதல் பேட்டிங்கை செய்தால் ஆஸிக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கலாம்.

இந்த பக்கம் பும்ரா, அந்த பக்கம் ஸ்டார்க் என இரு அணிகளின் மெயின் பௌலர்களுமே அடிபட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். பேட்ஸ்மேன்களோடு சேர்ந்து பௌலர்களும் ஃபார்முக்கு வரும்பட்சத்தில் இந்தப் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.

banner

Related Stories

Related Stories