விளையாட்டு

விட்டதைப் பிடிக்குமா இந்தியா? - நாளை தொடங்குகிறது #INDvsNZ T20 கிரிக்கெட்!

கோலி தலைமையிலான இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகளை சிதறவிட்டு வரும் ரிஷப் பண்ட்டுக்கு இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விட்டதைப் பிடிக்குமா இந்தியா? - நாளை தொடங்குகிறது #INDvsNZ T20 கிரிக்கெட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் T20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெறுகிறது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 T20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக விராட் கோலி தலைமையிலான அனுபவமும், இளமையும் ஒருங்கே கூடிய இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுடனான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஆகையால், நியூசிலாந்து அணியுடனான தொடரிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் T20 போட்டி ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டியை இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விட்டதைப் பிடிக்குமா இந்தியா? - நாளை தொடங்குகிறது #INDvsNZ T20 கிரிக்கெட்!

கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டு துறையிலும் சமபலத்துடன் விளையாடி வருகிறது. ரோஹித், கோலி, கே.எல்.ராகுல் என பேட்டிங் பட்டாளமும், ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் என பந்துவீச்சு பட்டாளமும் எதிரணியை மிரட்ட காத்திருக்கிறது.

தொடர்ந்து வாய்ப்புகளை சிதறவிட்டு வரும் ரிஷப் பண்ட்டுக்கு இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காயம் காரணமாக விலகியுள்ள தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு நாளைய போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை அந்த அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாக உள்ளது என்றே சொல்லலாம். சொந்த மண்ணில் சீதோஷ்ண நிலையையும், ஆடுகளத்தின் தன்மையையும் நன்கு உணர்ந்திருக்கும் நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்திய அணி கடைசியாக விளையாடிய ஐந்து 20 ஓவர் தொடர்களில் 4 தொடரை கைப்பற்றியுள்ளது. மேற்கிந்திய அணிக்கு எதிராக இரண்டு முறையும், வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறையும் வென்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா உடனான தொடரை சமன் செய்தது.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-3 என்ற கணக்கில் சொந்த மண்ணில் இழந்தது. ஆகையால், இந்தியாவுடனான இந்தத் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

20 ஓவர் போட்டியில் சிறப்பாக ஆடக்கூடிய நியூசிலாந்தை வீழ்த்த எல்லா வகையிலும் போராடும் இந்திய அணி விளையாடும் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கலாம். ஆண்டிறுதியில் நடைபெறவுள்ள T20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக இந்த T20 தொடர் பார்க்கப்படுவதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

banner

Related Stories

Related Stories