அரசியல்

மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!

மதுரை கோவையை விட குறைவான மக்கள் தொகை கொண்ட வட மாநில நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதல் எதுவும் தரப்படவில்லையா? என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மதுரை கோவையை விட குறைவான மக்கள் தொகை கொண்ட வட மாநில நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதல் எதுவும் தரப்படவில்லையா? தரப்பட்டிருந்தால் எந்த அளவுகோல்களின் அடிப்படையில்? என்ற கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் ஸ்ரீ தோக்கன் சாகு பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :-

இன்று நாடாளுமன்றத்தில் நான் உள்ளிட்ட தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்காதது பற்றிய கேள்வியை (எண் 1992 - டிசம்பர் 11, 2025) எழுப்பி இருந்தோம்.

=> கேள்வி :

மதுரை கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் அந்நகரங்களில் 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டதா? ஆக்ரா போபால் இந்தூர் மற்றும் நாக்பூர் போன்ற ஒப்பிடத்தக்க நகரங்களில் அல்லது குறிப்பிட்ட வரையறைகளை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட வட மாநில நகரங்களில் மெட்ரோ திட்டங்களை அங்கீகரிப்பதற்கான அளவுகோல்கள் எவை? 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே இப்போதும் முடிவெடுக்கப்படுகிறதா?

தற்போதைய மக்கள் தொகை உயர்வு கணக்கில் கொள்ளப்படுவது இல்லையா? பயணிகளின் எண்ணிக்கை குறித்த கணிப்புகள் சுய மதிப்பீடா அல்லது மூன்றாம் தரப்பு மதிப்பீடா? திட்டங்கள் நிராகரிக்கப்படுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா? 50:50 என்ற விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிதி திட்டங்கள் ஏற்கப்படவில்லையா? பிற பகுதிகளிலும் இதே அணுகுமுறை கையாளப்பட்டுள்ளதா? இல்லையெனில் இது புது அணுகுமுறையா? மக்கள் மத்தியில் மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்படாமல் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிற பின்னணியில் அரசின் முடிவு மறு பரிசீலனை செய்யப்படுமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!

=> இதற்கு பதில் அளித்துள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சர் ஸ்ரீ தோக்கன் சாகு அவரது பதிலில்,

நகர்ப்புற வளர்ச்சி மாநிலங்களின் அதிகார பட்டியலில் வருவதால் அவர்களே திட்டங்களை உருவாக்கி தருகிறார்கள். அந்த முன்மொழிவுகளை ஆராய்ந்த பிறகு முடிவெடுக்கப்படுகிறது. ஒரே ஒரு அளவுகோலின் அடிப்படையில் மட்டும் முடிவுகள் அமைய வேண்டியதில்லை. திட்ட அமலாக்கத்திற்கான சாத்திய கூறுகள், வளங்களை திரட்டும் வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுகிறது. திட்டங்களை அங்கீகரிப்பதற்கு எந்த நிலையான காலக்கெடுவையும் நிர்ணயம் செய்ய முடியாது.

தமிழ்நாடு அரசு மதுரைக்காக சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் மதுரை மக்கள் தொகை 15 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இது 10.84 லட்சம்தான்.

கோவையை பொருத்தவரையில் பயணத்தின் குறைந்த சராசரி தூரங்கள் (low average trip lengths) மற்றும் சாலைகளில் உள்ள தற்போதைய சராசரி வேகங்களைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ அமைப்புக்கு மாறுவதால் ஏற்படும் போக்குவரத்து மாற்றம் (modal shift) மிகக் குறைவான நேர சேமிப்பை மட்டுமே அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சி (CMC) பகுதி மற்றும் உள்ளூர் திட்டமிடல் பகுதி (LPA) ஆகியவற்றின் மக்கள் தொகை, முன்மொழியப்பட்ட மெட்ரோ அமைப்பால் சேவை செய்ய கடினமாக உள்ளது.

மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!

ஏனெனில், உள்ளூர் திட்டமிடல் பகுதியில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை, முன்மொழியப்பட்ட மெட்ரோ அமைப்புக்கு சேவை செய்யப்பட உள்ள CMC பகுதியை விட 5 மடங்கு பெரியதாகும். கோயம்புத்தூரில் 34 கி.மீ.க்கான முன்மொழியப்பட்ட வலைப் பின்னலில் ஒரு நாளைக்கான பயணிகளின் எண்ணிக்கை 5.9 இலட்சமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டத்தின் (Phase-1) 54.10 கி.மீ. செயல்பாட்டு வலைப் பின்னலில் ஒரு நாளைக்கு 4 இலட்சமாக உள்ள தற்போதைய பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் ஒரு பெரிய மக்கள்தொகைக்குச் சேவை செய்கிறது. எனவே, விரிவான திட்ட அறிக்கையில் திட்டமிடப்பட்டுள்ள பயணிகளின் எண்ணிக்கை யதார்த்தமானதாக இல்லை. பல இடங்களில், போதுமான நிலம் (Right of Way - RoW) கிடைக்காததால் கட்டுமான நிலையங்களை (construct station) அமைக்கச் சாத்தியமில்லை.

மெட்ரோ ரயில் திட்டங்களைத் தவிர, மத்திய அரசு ரூ. 20,000 கோடி செலவில் 10,000 குளிரூட்டப்பட்ட இ-பேருந்துகளை இயக்குவதற்கான e-Bus Sewa திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் பங்கேற்றன. இருப்பினும், தமிழ்நாடு மற்றும் கேரளா இந்தத் திட்டத்தில் பங்கேற்கவில்லை." என்று தெரிவித்துள்ளார்.

மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!

=> கேள்விக்கு பதில் எங்கே?

ஒன்றிய அமைச்சர் எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் அளிக்கவில்லை. அளவுகோல்கள் என்றிருந்தால் அவை பொதுவானதாக இருக்க வேண்டும்.

நாங்கள் கேள்வியில் நான்கு நகரங்களை குறிப்பிட்டு கேட்டிருக்கிறோம். ஆக்ரா, போபால், இந்தூர், நாக்பூர் போன்ற ஒப்பிடத்தக்க நகரங்களில் நீங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை அணுகியதற்கும் மதுரை, கோவைக்கும் என்ன வேறுபாடு? மதுரை கோவையை விட குறைவான மக்கள் தொகை கொண்ட வட மாநில நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதல் எதுவும் தரப்படவில்லையா? தரப்பட்டிருந்தால் எந்த அளவுகோல்களின் அடிப்படையில்? மதுரைக்கும், கோவைக்கும் நீங்கள் சொல்லுகிற காரணங்கள் ஏற்கனவே நீங்கள் ஒப்புதல் அளித்துள்ள மெட்ரோ ரயில் திட்டங்களில் இல்லையா? 50:50 என்ற நிதி திட்டம் அடிப்படையில் திட்டங்களுக்கு ஒப்புதல் தருவது மீதான அணுகுமுறை பாரபட்சம் இன்றி பிற பகுதிகளிலும் சீராக அமலாக்கப்படுகிறதா? இந்தக் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலில் எந்த விளக்கமும் இல்லை.

2011 மக்கள் தொகை அடிப்படையில் தான் முடிவெடுப்பீர்களா? நீங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாததற்காக அதற்குப் பின்னர் 14 ஆண்டுகள் உயர்வை கண்டுள்ள மக்கள் தொகையை கணக்கில் எடுக்க மாட்டீர்களா? என்ற கேள்விக்கும் நேரடி பதிலில்லை. இந்த அரசாங்கம் எப்போதுமே தனக்கு விருப்பமில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பதும், நழுவுவதும், திசை திருப்புவதும் வாடிக்கையாக உள்ளது. திட்டங்களுக்கு ஒப்புதல் தருவதற்கெல்லாம் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று அராஜகமாக பதில் தரப்பட்டுள்ளது. எங்கள் கேள்வியே தமிழ்நாட்டிற்கு என்று அறிவிக்கப்படும் திட்டங்கள் மட்டும் எந்த கால வரையறையும் இன்றி தாமதமாவது ஏன் என்பதுதான். மதுரை "எய்ம்ஸ்" ஒன்றிய அரசின் பாரபட்சத்தால் தாமதமாவது போல தற்போது மதுரை மெட்ரோவும் நிராகரிக்கப்படுகிறது ஏன் என்பதுதான்.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வது போல, பி.எம் இ சேவா குளிர் ஊட்டப்பட்ட பேருந்து திட்டம் பற்றி பதிலில் குறிப்பிட்டுள்ளார். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கேட்காத கேள்விக்கு பதில் சொல்வதும் இவர்களின் வாடிக்கைதான். எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் கோபம் அதிருப்தியை கருத்தில் கொண்டு உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்வீர்களா என்ற கேள்விக்கும் பதில் இல்லை. அமைச்சர் அவர்களே! நீங்கள் பதிலை தயாரித்த உடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்பாக மேலே எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கும் எங்கள் தருகிற பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று பாருங்கள். அது குறைந்தபட்ச நாடாளுமன்ற நெறிமுறை.

மதுரை மெட்ரோவை புறக்கணிப்பதற்காகத்தான் மக்கள் கவனத்தை திசை திருப்ப நீங்கள் மதுரையில் நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மதுரை மக்கள் விழிப்புணர்வு கொண்டவர்கள். நீங்கள் அவர்களை நாடி செல்லும் போது நாடாளுமன்றத்தில் பதிலளிக்காத கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டி இருக்கும்"

banner

Related Stories

Related Stories