
ஒன்றிய பா.ஜ.க அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மறைமுக கூட்டுறவால் பீகாரில் கடும் விமர்சனத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் குளறுபடிகளுக்கு வித்திடும் வகையிலும் அமைந்துள்ளது.
அதற்கான தகுந்த சான்றை தற்போது தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது. SIR படிவத்தில் “01.07.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட பீகாரின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதி” என குறிப்பிட்டு பீகார் மக்களை தமிழ்நாட்டில் வாக்களிக்க வழி வகுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதனை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
“தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக ஒருங்கிணைந்து செயல்படுவதால் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணியில் சேர தயாராக இல்லை. இந்நிலையில் தேர்தல் ஆணையம் தொடங்கியிருக்கிற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கிற வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் தேர்தலில் சிறப்பு தீவிர திருத்தத்தின் காரணமாக 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு பா.ஜ.க. தீவிரமான உத்திகளை மேற்கொண்டு வருகிறது.
பீகார் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கலாம் என்ற தேர்தல் ஆணைய அறிவிப்பை பயன்படுத்தி 41 தொகுதிகளை பா.ஜ.க. குறிவைத்து செயல்படுகிறது.
அதன் ஒருபகுதியாகத் தான் சென்னை எழும்பூர், ராயபுரம், துறைமுகம், அம்பத்தூர், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், பூந்தமல்லி ஆகிய 12 தொகுதிகளில் வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பன்மடங்கு கூடுதலாக அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் அதிகமுள்ள 29 தொகுதிகளை தேர்வு செய்து அதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாக்காளர்களை நீக்கவும், தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் டீக்கடை முதல் தொழிற்சாலைகள் வரை தற்காலிக முகாம்களை அமைத்து அங்கே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் என இந்திய குடிமகன் என நிரூபிக்க எந்த ஆவணமும் இல்லாத நிலையில், நிரந்தர வீடு இல்லாமல் வணிக நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறவர்களை பா.ஜ.க.வினர் அணுகி அவர்களை வாக்காளர்களாக ஒட்டுமொத்தமாக சேர்ப்பதற்கு உதவுகிற வகையில் தேர்தல் ஆணையம் புதிய விதியை அறிமுகம் செய்திருக்கிறது.
இதன்படி, இந்திய குடிமகன் என நிரூபித்து வாக்காளராக சேர்க்க 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்ட வேண்டுமென்று ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது 13-வது ஆவணமாக 1.7.2025 தகுதியேற்பு நாளாக கொண்டு பீகாரில் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் பிரதியில் வடமாநில தொழிலாளர்களின் பெயர் இடம் பெற்றிருந்தால் தமிழ்நாட்டில் நடக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அந்த ஆவணத்தை சமர்ப்பித்து வாக்காளர்களாக சேர்த்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதித்திருக்கிறது.
பீகாரில் தற்போது தான் தேர்தல் முடிந்துள்ளது. அதில் வாக்களித்தவர்கள் தற்போது தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக 6 மாதத்தில் இருமாநில தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவொரு அப்பட்டமான முறைகேடு மட்டுமல்ல, தமிழ்நாடு விரோத நடவடிக்கையாகும்.
தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் விருப்புரிமையை சீர்குலைக்கின்ற வகையில் வடமாநில தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வெற்றி பெற சதித் திட்டத்தை மேற்கொண்டு வரும் பா.ஜ.க.வின் முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்றாலும் இந்த 41 தொகுதிகளில் அதிதீவிர திருத்தம் மேற்கொண்டு பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பிற்கு அடித்தளம் அமைக்கும் திரைமறைவு முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
எனவே வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்திருப்பவர்களை வாக்காளர்களாக இணைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த விரைவில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க இருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் இதனை அனுமதிக்க முடியாது என்கிற வகையில் தீவிர முயற்சிகளை தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.”




