
சி.பி.ஐ அமைப்பை இன்று மங்கள் நம்புவதில்லை. சி. பி.ஐ தனது தனித்தன்மையை இழந்து நிற்பதாக உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் தற்கொலை புகார் வழக்கு ஒன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, பிரஷாந்த் குமார் மிஸ்ரா ஆகியோரின் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றவாளி ஒத்துழைக்கவில்லை என்று சி.பி.ஐ என்கிற வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்து, சிபிஐ வழக்கை விசாரித்த முறை குறித்து கடுமையாக விமர்சனங்களை நீதிபதிகள் முன்வைத்தனர்.
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சிபிஐ வெளிப்படையாகத் தோல்வியடைந்துள்ளது என்றும், சாதாரண மாவட்ட போலீஸ் கூட இதைவிடச் சிறப்பாக விசாரணை நடத்தியிருப்பார் என்றும் விமர்சித்தனர். மேலும் உங்கள் அதிகாரிகள் எவ்வளவு தகுதியற்றவர்கள் என்பதை உத்தரவில் பதிவிடுவோம் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி முற்றிலும் தகுதியற்றவர் என்றும் அவருக்கு மீண்டும் பணிகள் ஒதுக்க கூடாது என்று நீதிபதிகள் கடுமையாக தெரிவித்தனர்.
அதோடு சிலருக்கு பிடித்தமான முறையில் விசாரணை நடத்துவது, அரசியல் செய்வது மிகுந்த அவமானம் என்றும், ஓய்வு பெறும் போது வாலை சுருட்டிக் கொண்டு ஓய்வு பெறப்போகிறீர்களா? என்ன மாதிரியான அதிகாரிகள் நமக்கு கிடைத்துள்ளனர் என்றும் விமர்சித்தனர். இது போன்ற அதிகாரிகளால் சி.பி.ஐ எவ்வளவு கீழ்நிலைக்கு வந்துவிட்டது. சி.பி.ஐ அமைப்பை யாரும் இப்போது நம்புவதில்லை என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.
மேலும், முன்பு சி. பி.ஐ எப்படி பணியாற்றியது என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறிய நீதிபதிகள், இப்போது எல்லாம் அது சிதைந்துவிட்டது. எந்த அரசு நிறுவனங்களும் எதுவும் சுதந்திரமாக செயல்படவில்லை என்பது மிகவும் வருந்த தக்கது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் குற்றவாளி கைது செய்யப்பட்டாலோ, சரணந்தாலோ அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.






