அரசியல்

“டெல்லி பிக்-பாஸூக்கு பழனிசாமி ஆமாம் சாமி போட்டு வருகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திருவரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மொ. பழனியாண்டி அவர்களின் மகன் விஜயபாரதி – மனிஷா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.

“டெல்லி பிக்-பாஸூக்கு பழனிசாமி ஆமாம் சாமி போட்டு வருகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.11.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசன்பேட்டை, டாக்டர் கலைஞர் திடலில், திருவரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மொ. பழனியாண்டி அவர்களின் மகன் விஜயபாரதி – மனிஷா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரை.

திருவரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், நம்முடைய தலைமைக் கழகத்தின் செயற்குழு உறுப்பினருமான பழனியாண்டி அவர்களின் இளைய மகன் விஜயபாரதி அவர்களுக்கும், மனிஷா அவர்களுக்கும் உங்களுடைய அன்பான வாழ்த்துகளோடு, இந்த மணவிழா நிகழ்ச்சியை நிறைவேற்றி வைத்து, அதைத் தொடர்ந்து மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அந்த வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமைப்படுகிறேன்!

பழனியாண்டி அவர்களுக்கும், கழகத்திற்குமான உறவு என்பது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல! 1986-லிருந்த அவர் இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு முதன்முதலாக கிளைக் கழகத்தின் செயலாளராகவும், இயக்கத்தின் ஆணிவேராக இருக்க கூடிய கிளைக் கழகத்தின் செயலாளராக பொறுப்பேற்று, பணியாற்றி;

அதைத் தொடர்ந்து என்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டு, பசி – தூக்கம் இவைகளை எல்லாம் மறந்து, உழைத்து வளர்த்தெடுத்த இளைஞரணியில் ஒன்றிய அமைப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டு, 1999-ல் இருந்து 2003 வரை அவர் அந்தக் கடமையை நிறைவேற்றி தந்திருக்கிறார். அதன் பயனாகதான், ஒன்றியச் செயலாளராக ப்ரமோஷன் பெற்று, பொறுப்பேற்று பணியாற்றிருக்கிறார்.

அதற்குப் பிறகு, 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த திருவரங்கம் தொகுதியில் வேட்பாளராக நின்று போட்டியிட்டு, 20 ஆண்டுகள் கழித்து நம்முடைய கழகத்தின் கோட்டையாக்கி, இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக அந்தப் பொறுப்பையும் ஏற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

அவரே நன்றியுரை ஆற்றியபோது குறிப்பிட்டுச் சொன்னார், பழனியாண்டி அவர்களின் திருமணத்தை 1993-ஆம் ஆண்டு, நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான் நடத்தி வைத்திருக்கிறார்கள்.

அதேபோல, 2010-ஆம் ஆண்டு நான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றிய நேரத்தில், பழனியாண்டி சகோதரருக்கு என்னுடைய தலைமையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பிறகு, 2021-ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, திரு. பழனியாண்டி அவர்களின் மூத்த மகன் திருமணத்தையும் நான் தான் நடத்தி வைத்திருக்கிறேன்.

இப்போது அவருடைய இளைய மகனுக்கும் நான் தான் நடத்தி வைத்திருக்கிறேன். இந்த வரலாற்றை எல்லாம் பார்க்கின்றபோது, அவருடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய இன்னும் நடைபெற இருக்கக்கூடிய திருமணங்கள் ஏராளமாக இருக்கிறது. அந்தத் திருமணத்திற்கும் நான் தான் வருவேன் என்ற அந்த நம்பிக்கை நிறைய இருக்கிறது. அவருடைய பேரன், பேத்திகளுக்கும் நான் தான் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.

இப்படி, இந்த குடும்பத்தில் ஒருவராக தொடர்ந்து பங்கெடுத்து அவருடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சிகளுக்கு உரிமையோடும், உணர்வோடும், நான் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வந்திருக்கிறேன்.

இப்படியான சகோதரப்பாச உணர்வுடன்தான் 75 ஆண்டுகாலமாக இந்த இயக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்களும், தொடர்ந்து தலைவர் கலைஞர் அவங்களும், அதற்குப் பின்னால் அவர்களுடைய வழியில் இப்போது நானும் நடத்திக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒன்றை கூர்ந்து கவனிக்கலாம்! எப்பொழுதும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் முன்னோடிகளாக இருந்தாலும், தளபதிகளாக இருந்தாலும், செயல்வீரர்களாக இருந்தாலும், அவர்கள் கழகம் என்று மட்டும் சொல்வது கிடையாது - இயக்கம் என்று அடிக்கடி கூறுவதுண்டு. இயக்கம் என்று சொன்னால், நமக்கு ஓய்வே இல்லை என்பது தான் இயக்கம்.

இந்த 75 ஆண்டுகாலமும் ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும், அது தேர்தல் சமயமாக இருந்தாலும் இல்லையென்றாலும், எப்போதும் நம்முடைய இயக்கம் நின்றது கிடையாது. சிறிய, சிறிய தடைகளைப் பார்த்து கூட தேங்கி நின்றுவிட்டால் அது தேக்கம். ஆனால், இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது இயக்கம்.

“டெல்லி பிக்-பாஸூக்கு பழனிசாமி ஆமாம் சாமி போட்டு வருகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இப்படி சுறுசுறுப்பாக இருக்கின்ற காரணத்தால் தான் நம்முடைய கட்சி இன்றைக்கும் சீரிளமையுடன் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. நாம் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறோம் என்று உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால், சில மாதங்களாக நான் அறிவாலயத்தில் இருந்து கொண்டு “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் ஒன் டூ ஒன் என்று சொல்வார்களே, தனித்தனியாக, தொகுவாரியாக அந்த நிர்வாகிகளை எல்லாம் அழைத்து நேர்காணல் நடத்திக் கொண்டிருக்கிறேன். ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். அவர்கள் வெளிப்படுத்துகின்ற மகிழ்ச்சியிலும், நம்பிக்கையிலும்தான் நான் தெம்பாக என்னுடைய பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.

இதுவரையில் ஏறக்குறைய 80 தொகுதிளை முடித்திருக்கிறேன். விரைவில் 234 தொகுதிகளையும் நான் முடிப்பேன் என்ற அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதை முடித்தே தீருவேன்.

2021-ல் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு பக்கம் ஆட்சிப்பணி, அரசு விழாக்கள், சுற்றுப்பயணங்கள், நாள்தோறும் புதிய, புதய திட்டங்கள் என்ற அறிவிப்பு இது ஒரு பக்கம்.

அதேபோல, கட்சிப் பணிகள் என்று எடுத்துக் கொண்டால், உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால், நேற்று - ஞாயிறு அன்றைக்கு காலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை காணொலி மூலமாக நடத்தினேன். அதன் பிறகு, வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிகளைப் பற்றி நடைபெற இருக்கக்கூடிய SIR-க்கு எதிரான அந்தப் பிரச்சனை - நாளைய தினம் நாம் நடத்த இருக்கின்ற நடைபெற உள்ள S.I.R.-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம். இதைப்பற்றி எடுத்துச் சொல்வதற்காக நேற்றைக்கு மாவட்டச் செயலாளர்களிடம் கலந்து பேசினேன். நம்முடைய கூட்டணிக் கட்சி சார்பில், அந்த ஆர்ப்பாட்டத்தை எப்படி சிறப்பாக நடத்திட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறேன்.

அதுமட்டுமல்ல, நேற்றைக்கு நீங்கள் வீடியோ பார்த்திருப்பீர்கள். SIR என்றால் என்ன? S.I.R. என்பது எந்த அளவிற்கு மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதை எப்படி நாம் முறையாக பயன்படுத்திட வேண்டும். அவர்கள் என்ன காரணத்திற்காக கொண்டு வந்திருக்கிறார்கள். அதுகுறித்து நம்முடைய பொதுமக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறேன்.

அதையெல்லாம் முடித்துக் கொண்டு மாலையில் விமானத்தில் திருச்சிக்கு வந்து, அதற்குப் பிறகு இந்த திருமண நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். இதை முடித்துவிட்டு, புதுக்கோட்டைக்கும் நான் செல்ல இருக்கிறேன்.

இப்படி இயங்கிக் கொண்டிருப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் தான் இதை இயக்கம் என்று சொல்கிறோம். தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கவேண்டும். அதற்காகதான் நாம் இயக்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படித்தான் நிற்க நேரம் இல்லாமல் நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். நான் மட்டுமல்ல, இயக்கத்தில் இருக்கக்கூடிய முன்னோடிகள், இங்கே இருக்கின்ற செயல்வீரர்கள் இன்றைக்கு பம்பரமாக பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய காட்சிகளை எல்லாம் நான் தொடர்ந்து பார்க்கிறேன்.

அதற்கு என்ன காரணம்? எதிரிகளாக இருக்கக்கூடியவர்கள் புதுப்புது உத்திகளோடு நம்மை தாக்குவதற்கு, நம்மை அழிப்பதற்கு, ஒழிப்பதற்கு புதுப்புது முயற்சிகளை எல்லாம் எடுத்திருக்கிறார்கள். வருமான வரித்துறையை ஏவிவிட்டார்கள். அதற்குப்பிறகு சிபிஐ என்று சொல்லக்கூடிய குற்றப் புலானாய்வுத் துறையின் மூலமாக நம்மை மிரட்டிப் பார்த்தார்கள்.

இப்போது, SIR என்று சொல்லக்கூடிய ஒரு ஆயுதத்தை எடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை இதன் மூலமாக தான் அழிக்க முடியும், ஒழிக்க முடியும் என்று முடிவு செய்து எடுத்திருக்கிறார்கள். இது வேண்டும் என்றால், வேறு மாநிலங்களில் எடுபடலாமே தவிர உறுதியாக சொல்கிறேன் – திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒருபோதும் அது எடுபாடாது – முடியாது என்று அழுத்தந்திருத்தமாக நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்றைக்கு ஒரு செய்தியை நான் சொல்லியாக வேண்டும். நான் திருச்சிக்கு வந்தவுடனே ஒரு செய்தி கிடைத்தது – என்ன செய்தி என்றால், இந்த SIR குறித்து நாம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம். விரைவில் வரவிருக்கிறது. 11-ஆம் தேதி நாளைய தினம் நாம் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

நேற்று திடீரென்று அதிமுக-வின் சார்பில், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கு தொடுத்திருக்கிறது, அதில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீடீரென்று ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன். உங்களுக்கு உள்ளபடியே அதில் அக்கறை இருக்கிறது என்று சொன்னால், அதில் உங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று சொன்னால், முன்கூட்டியே வழக்கை தொடுத்திருக்கவேண்டும். ஆனால், திடீரென்று வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வதற்கு என்ன காரணம்? இதனை யோசித்துப் பார்க்க வேண்டும். அந்த SIR-யை அவர்கள் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு பிஜேபி-யோ அல்லது தேர்தல் ஆணையமோ எதைச் சொன்னாலும் ஆதரிக்கின்ற நிலையில் இன்றைக்கு அடிமையாக நின்று கொண்டிருக்கிறார்களே தவிர அவர்கள் அதனை எதிர்ப்பதற்கு துணிச்சல் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு நாம் தொடுத்திருக்கக்கூடிய வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், ஒரு கபட நாடகத்தை நடத்துவதற்காக திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, BLO என்பது அங்கு இருக்கக்கூடிய அரசு ஊழியர்களை வைத்து அந்தப் பணிகளை செய்வது. BLA2 என்பது கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகளை நாம் நியமிக்கிறோம். அவர்கள் அந்தப் பணிகளுக்கு துணை நிற்பார்கள், உதவி செய்வார்கள். அந்த அதிகாரிகளுக்கு துணை நின்று பணியாற்றுவார்கள். இதுதான் BLA2-வின் வேலை. அதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நாம் முறையாக BLA2 மூலமாக பயிற்சி அளித்து, என்னென்ன பணிகளை எல்லாம் செய்யவேண்டும் என்று முறையாக பயிற்சி அளித்து அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படி நியமிக்கப்பட்டிருப்பவர்கள் தவறு என்று சொல்லி, அதை நீக்க வேண்டும், அதை தடுக்கவேண்டும் என்று சொல்லி, அதை அடிப்படையாக வைத்து அதிமுக-வின் சார்பில் இன்றைக்கு நீதிமன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை.

ஆனால் அது எடுபடாது என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் நான் எடுத்துச் சொல்லி, டில்லியில் இருக்கக்கூடிய பிக்-பாஸூக்கு நம்முடைய பழனிசாமி ஆமாம் சாமி போட்டுதான் ஆக வேண்டும். ஆனால், அதையும் தாண்டி மற்றொரு காமெடியும் இன்றைக்கு செய்திருக்கிறார் அது தான் உண்மை. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில், வர இருக்கக்கூடிய தேர்தலையொட்டி, நம்முடைய பழனியாண்டி அவர்கள் இங்கே நன்றியுரையாற்றி, அதற்குப்பிறகு நான் பேசுவதற்கு முன்னால், தேர்தல் நிதியாக ஏறக்குறைய 50 இலட்சம் ரூபாயை இங்கே வழங்கியிருக்கிறார். உள்ளபடியே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதை தேர்தல் நிதியாக முதல் அறிவிப்பாக இன்றைக்கு இந்த திருவரங்கம் தொகுதியிலிருந்து நம்முடைய பழனியாண்டி அவர்கள் வழங்கியிருக்கிறார். நிச்சயமாக, உறுதியாக இது ஒரு பெரிய வெற்றியை தருவதற்கு அறிகுறியாக இது அமைந்திருக்கிறது.

50 இலட்சம் ரூபாயுடன் நிச்சயம் நிற்கமாட்டார். தொடர்ந்து இன்னும் நாம் எதிர்பார்க்கக்கூடிய நிதியை அதிகமாக பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு.

அதே நேரத்தில், சமூக அமைப்பின் தலைவராக இருக்கக்கூடிய கே.கே.செல்வகுமார் அவர்கள் இங்கே பேசுகின்றபோது, தம்முடைய சமுதாயத்தை குறிப்பிட்டு, கடைகண் பார்வையை எங்கள் பக்கம் திருப்பவேண்டும் என்று சொன்னார் – கடைகண்பார்வை மட்டுமல்ல, அனைத்துப் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். அதில் எந்த சந்தேகம் வரவேண்டிய அவசியமில்லை.

இந்த திராவிட மாடல் ஆட்சியைப் பொறுத்தவரைக்கும், உறுதியாக, தொடக்கத்தில் இருந்து சொல்கிறோம் – இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் – எல்லார்க்கும் எல்லாம் - எல்லார்க்கும் எல்லாம் என்ற தலைப்பில் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே தவிர யாரையும் விட்டுவிட மாட்டோம். இது திராவிட மாடல் ஆட்சி.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் வழி நின்று நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த ஆட்சி. இந்த ஆட்சிக்கு என்றைக்கும் நீங்கள் துணை நிற்க வேண்டும். துணை நிற்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டு,

இங்கே மகிழ்ச்சிக் கடலில் மணவிழா கண்டிருக்கக்கூடிய மணமக்களிடம் நான் அன்போடு நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்று அந்த கோரிக்கையை உரிமையோடு இங்கே எடுத்து வைத்து, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எடுத்துச் சொல்லியபடி “வீட்டிற்கு விளக்காய் - நாட்டிற்குத் தொண்டர்களாய்” மணமக்கள் வாழுங்கள்! வாழுங்கள்! என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories