திண்டுக்கல்லில், கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், "
இன்று காலை சென்னையிலிருந்து விமானத்தின் மூலம் திருச்சி வந்து, அங்குள்ள கழக நிர்வாகிகளைச் சந்தித்துவிட்டு, திண்டுக்கல் வந்து திண்டுக்கல்லில் அரசு ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, நானும் நம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி அவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அதன்பிறகு முதலமைச்சர் கோப்பைப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு இப்போது இங்கு வந்துள்ளேன்.
அந்த நிகழ்ச்சியில் என்ன சிறப்பு என்றால், `இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் கேம்ஸ்’ என்று சொல்லும் அளவுக்கு 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடத்தப்படுகிறது. அதன் பரிசுத்தொகை மட்டும் 38 கோடி ரூபாய். மூன்று வருடங்களுக்கு முன்பு முதலமைச்சர் கோப்பைப் போட்டியில் 3 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள், இந்த வருடத்தில் தமிழ்நாடு முழுவதும் 16 லட்சம் விளையாட்டு வீரர்கள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற உள்ளார்கள்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், நானும், அண்ணன் பெரியசாமி, அண்ணன் சக்கரபாணி அவர்களும் பி.எஸ்.என்.ஏ கல்லூரிக்குச் சென்று பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டோம். இன்று பால் மேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டிலேயே, மாநில அளவில் முதலிடத்தை, திண்டுக்கல் மாவட்டம் முதன்முறையாக வென்று இருக்கிறது. எப்படி முதலமைச்சர் கோப்பையில் வரலாற்றிலேயே முதன்முறையாக கோப்பையை வென்று இருக்கிறதோ, அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கின்ற போட்டியிலும் திண்டுக்கல் மாவட்டம் நிச்சயம் வெற்றி பெறும். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, இன்றைக்குக் கடைசிநிகழ்ச்சியாக உங்களை எல்லாம் சந்திக்க வருகை தந்துள்ளேன்.
உடன் பிறப்பே வா
ஒருபக்கம் தலைவர் அவர்கள் `உடன் பிறப்பே வா’ என்று சென்னையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும் உள்ள முக்கிய நிர்வாகிகளை அழைத்துத் தனியாக ஒவ்வொரு தொகுதிக்கும் 2 மணி நேரம் செலவிடுகிறார். அந்தத் தொகுதி நிர்வாகிகளை வரவழைத்து என்ன பிரச்சினை, நிர்வாகிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், அணிகள் எப்படிச் செயல்படுகின்றன என்று நிகழ்ச்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
தலைவர் அவர்கள் எனக்கு கட்டளையிட்டுள்ளார்கள். ``நான் சென்னையில் சந்திக்கிறேன். நீ தமிழ்நாடு முழுவதும் சென்று, ஒவ்வொரு தொகுதிக்கும் நேரம் ஒதுக்கி, அங்கு உள்ள அத்தனை நிர்வாகிகளையும் சந்தித்து வா’’ என்று என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். இன்று காலை திருச்சியில் ஒரு தொகுதி நிர்வாகிகளையும், மாலையில் உங்களையும் சந்திக்க வந்துள்ளேன். இது எனக்கு 8-வது தொகுதி. இதுவரை 7 தொகுதிகளில் மக்களைச் சந்தித்து பார்த்தவரைக்கும், நாம் வெற்றிப்பெற போவது உறுதி.
நீங்கள் அனைவரும் ஆசையாக என்னைப் பார்க்க வந்துள்ளீர்கள். நீங்கள் எப்படி என்னைப் பார்க்க ஆசையாக வந்துள்ளீர்களோ, அதைவிட ஆசையுடன், அன்புடன் உங்களைப் பார்க்க வந்துள்ளேன். நீங்கள் என்னைப் பார்க்க மட்டும் வரவில்லை. இவர் என்ன பேசுகிறார் என்பதைக் கேட்கவும் வந்திருக்கிறீர்கள். இது பார்க்க வந்துவிட்டு கலைகிற கூட்டம் கிடையாது. என்ன கொள்கையைப் பேசுகிறோம், என்ன அரசியல் பேசுகிறோம் என்பதைக் கூர்ந்து கவனிக்கும் கூட்டம் தி.மு.க உடன்பிறப்புகளின் கூட்டம்.
இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சியை குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த மாவட்டக் கழகச் செயலாளர் என் அன்பு சகோதரர் ஐ.பி.செந்தில்குமார் அவர்களுக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துகள். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேசிவிட்டு மட்டும் செல்லவில்லை. உங்கள் அத்தனை பேருடனும் தனித்தனியாகப் புகைப்படமும் எடுத்துக்கொள்ள போகிறேன்.
நெருக்கடிகள், துரோகங்கள்
இன்று நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வயது 76. பவளவிழா கண்டுள்ள இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். இந்த 76 வருடங்களில் எத்தனையோ பெரிய இயக்கங்களை எதிர்த்து வென்றுள்ளோம். பெரிய தலைவர்களை எல்லாம் எதிர்த்து, அரசியல் செய்து நாம் வெற்றிப் பெற்றுள்ளோம். எத்தனையோ நெருக்கடிகள், துரோகங்களைப் பார்த்து இருக்கிறோம். நெருப்பாற்றை கடந்து இருக்கிறோம். இத்தனை துரோகங்கள், சவால்களைச் சந்தித்த பிறகும் இன்றைக்கும் நம் திராவிட முன்னேற்றக் கழகம், அதே இளமையோடும், துடிப்போடும் வலிமையோடும் இருக்கிறது என்றால் அதற்கு இங்கு வந்துள்ள கலைஞரின் உடன்பிறப்புகள் நீங்கள்தான் காரணம்.
கழகத்தைத் தாங்கி பிடிக்கின்ற அடித்தளம் நீங்கள்தான். இன்று நாம் பெருமையாகச் சொல்கிறோம் கழகம் ஆறு முறை ஆட்சி அமைத்துள்ளது என்று. அந்த பெருமைக்குக் காரணம் இங்கு வந்துள்ள கழகத்தின் உடன்பிறப்புகள்தான். கலைஞர் அவர்கள் 5 முறை முதலமைச்சராக இருந்தார் என்று பெருமையாகச் சொல்கிறோம், நம் தலைவர் இன்றைக்கு முதலமைச்சராக அமர்ந்திருக்கிறார் என்று பெருமையாகச் சொல்கிறோம் என்றால், அதற்குக் காரணம் இங்கு வந்துள்ள நீங்கள்தான். இதில் ஒரு சின்ன குறை. சென்ற முறை திண்டுக்கல் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். இந்த முறை நிச்சயம் அந்த தவறை நீங்கள் செய்யமாட்டீர்கள். திண்டுக்கல் தொகுதியையும் வெற்றிபெற்று காட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
உங்களின் உணர்வுகளை, எழுச்சியைப் பார்க்கும்போது இந்த முறை நிச்சயம் 7 தொகுதியிலும் வெற்றிப்பெறப் போவது உறுதியாவிட்டது என்பதை நான் நம்புகிறேன். சென்ற முறை நம் தலைவர் அவர்கள் முதலமைச்சராக அமர்ந்தபிறகு, இன்றைக்கு இந்தியாவே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு சிறப்பான ஆட்சியை நம் தலைவர் அவர்கள் வழங்கிகொண்டு இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் பல திட்டங்களை நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.
ஐந்து கையெழுத்துகள்
ஆட்சிக்கு வந்தவுடன் நம் தலைவர் அவர்கள் முதல் நாள் ஐந்து கையெழுத்துகளை போட்டார் நம் தலைவர் அவர்கள். அதில் முதல் கையெழுத்து மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணத்திற்கான கையெழுத்துதான். அந்தத் திட்டத்தில் இந்த நான்கரை வருடத்தில் 800 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளார்கள். அதுதான் அந்தத் திட்டத்தின் வெற்றி. இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 22 கோடிக்கும் அதிகமான பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு மகளிரும் மாதந்தோறும் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை சேமிக்கிறார்கள்.
கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தை அறிவித்தார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் அந்த மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையை நம் முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று இருக்கிறார்கள். இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
காலை உணவுத் திட்டம்
மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும். வந்து பசியோடு படிக்கக்கூடாது என்பதற்காக நம் முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த திட்டம்தான் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம். ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம். நாம் ஆட்சி அமைத்து, கிட்டத்தட்ட 6 மாதம் காலம் நாம் கொரோன பெருந்தொற்றுடன் போராடிக்கொண்டு இருந்தோம். நாம் ஆட்சிக்கு வரும்போது கடும் நிதி நெருக்கடி இருந்தது. எதிர்கட்சிகள் எல்லாம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்று சொன்னார்கள். ஆனால், நம் தலைவர் அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் அந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கிட்டத்தட்ட ஒரு கோடியே இருபது லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நம் தலைவர் அவர்கள் கொடுத்துள்ளார்கள். 25 மாதங்கள் இந்த ஆயிரம் ரூபாயை நம் தலைவர் அவர்கள் வழங்கியுள்ளார். இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 4 லட்சம் மகளிர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்.
திண்டுக்கல் தொகுதி
இந்த திண்டுக்கல் தொகுதிக்கு மட்டும் பல்வேறு திட்டங்களை நம் அரசு செய்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 121 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதிகள், பள்ளிக்கூட கட்டட உட்கட்டமைப்புகள், பாலகிருஷ்ணாபுரத்தில் புதிய மேம்பாலம் என்று பல கட்டமைப்புப் பணிகளை நம் அரசு செய்து கொடுத்திருக்கிறது.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் 262 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணிகள், குடிநீர் வசதிகள், புதிதாக தெருவிளக்குகள், மழைநீர் வடிகால் வசதி, பாதாள சாக்கடைத் திட்டம் என்று பல திட்டங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம், 250 கோடி ரூபாய் செலவில் சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணிகள் நடந்துகொண்டுள்ளன. திண்டுக்கல்லுக்கு நம் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலே இவ்வளவு பணிகள் நடந்திருக்கிறது என்றால், நாளை நம் சட்டமன்ற உறுப்பினர் இருந்தால் இன்னும் அதிகமான பணிகள் நம் திண்டுக்கல் தொகுதிக்கு தலைவர் அவர்கள் நிச்சயம் கொடுப்பார்கள்.
இதுபோன்ற முற்போக்கு திட்டங்களால்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதல் மாநிலமாக, 11.19 சதவிகித வளர்ச்சியுடன் நம் தமிழ்நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சிகளை எல்லாம் பொறுக்க முடியாமல்தான் சங்கிகள் கூட்டம் நமக்கு எல்லா வகையான தடங்கல்களையும் அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
பாசிச பா.ஜ.க அரசு
நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை, மாநில உரிமையைப் பறிக்கின்ற வேலைகளில் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்கள். இவை அனைத்தையும் எதிர்த்து, குரல்கொடுக்கின்ற இந்தியாவிலேயே முதல் தலைவராக நம் முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஒன்றிய அரசு புதியக்கல்விக் கொள்கையை கொண்டுவந்து இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னது. புதியக் கல்விக் கொள்கையின் மூலமாக இந்தியையும், சமஸ்கிருத்ததையும் குறுக்கு வழியில், தமிழ்நாட்டுக்குள் நுழைக்கப் பார்த்தார்கள். குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவரப் பார்த்தார்கள்.
நீங்கள் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழநாட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு வரவேண்டிய 2,500 கோடி ரூபாயைத் தருவேன் என்று ஒன்றிய அமைச்சர் நேரடியாகச் சொன்னார். ஆனால், நம் முதலமைச்சர் அவர்கள் நீங்கள் 2,500 கோடி இல்லை, 10,000 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தமிழ்நாட்டுக்குள் என்றைக்கும் புதியக் கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னார்.
கடுமையான போட்டிதான்
நம் கழகத்தில் 25 அணிகள் இருக்கின்றன. இளைஞர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி என்று 25 அணிகள் இருக்கின்றன. ஆனால், அதைவிட அதிகமான அணிகள் அ.தி.மு.க-வில் இருக்கின்றன. ஈ.பி.எஸ். அணி, ஓ.பி.எஸ். அணி, டி.டி.வி அணி, சசிகலா அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி, செங்கோட்டையன் அணி என்று பல அணிகள் இருக்கின்றன. இங்கு திண்டுக்கல்லில், திண்டுக்கல் சீனிவாசன் அணி இருக்கிறது.
இன்றைக்கு அ.தி.மு.க.வில் இருக்கின்ற முன்னாள் அமைச்சர்கள் பல பக்கம் போட்டிப்போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் முக்கியமான போட்டி என்னவென்றால், அண்ணன் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களுக்கும், அண்ணன் செல்லூர் ராஜீவுக்கும்தான். யார் உண்மையான தலைசிறந்த விஞ்ஞானி, யார் உண்மையான சிந்தனை சிற்பி, நீயா? நானா? யார் மிகப்பெரிய அறிவாளி என்ற மிகப்பெரிய போட்டியில் கடுமையான போட்டிதான்.
திண்டுக்கல் சீனிவாசன் அவர்களுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது ஏன் இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை. இதுவரைக்கும் குறைந்தது மூன்று முறையாவது மீண்டும் நம் தலைவரை முதலமைச்சர் ஆக்குவோம் என்று வெளிப்படையாகப் பேசிய ஒரே முன்னாள் அமைச்சர் அவர்தான்.
நம் தி.மு.க-வின் தலைமை அலுவலகம் சென்னை அறிவாலயத்தில் இருக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அறிவாலத்திற்குச் சென்று நம் கழக நிர்வாகிகளைப் பார்ப்பீர்கள். அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகம், சென்னை இராயபேட்டையில் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள அமித் ஷா வீட்டில் இருக்கிறது.
நம் கழக அணி குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்று சொல்லி இருக்கிறார்கள். நாம் அத்தனைபேரும் அடுத்த ஐந்து மாதம் காலம் ஒன்றாகச் செயல்பட்டோம் என்றால், 200 இல்லை 200க்கும் அதிகமான தொகுதிகளில் நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழக அணி வெற்றிபெறும்" என்று கூறினார்.