அரசியல்

“சுதந்திர இந்தியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் துரோகச் செயல்!” : செல்வப்பெருந்தகை கண்டனம்!

“அஞ்சல் தலையும் நாணயமும் தேசிய ஒற்றுமையின் அடையாளமாக, சுதந்திரத் தலைவர்களின் உருவங்களைக் கொண்டே இருக்க வேண்டும். பிளவை உண்டாக்கும் அமைப்பின் சின்னங்கள் ஒருபோதும் அதில் இடம் பெறக்கூடாது.”

“சுதந்திர இந்தியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் துரோகச் செயல்!” :  செல்வப்பெருந்தகை கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை ஏற்காத, பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு, ஒன்றிய அரசு சார்பில் நூற்றாண்டு நாணயம் வெளியிடப்பட்டதையும், இந்திய மக்களின் பிரதிநிதியாக விளங்கும் பிரதமரே அதனை வெளியிட்டிருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,

“சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரக் கொடியை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அஞ்சல் தலையும் ரூ.100 நினைவு நாணயமும் வெளியிட்டிருப்பது, சுதந்திர இந்தியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் துரோகச் செயலாகும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்.எஸ்.எஸ் எந்தவொரு பங்களிப்பும் செய்யாதது மட்டுமல்லாமல், சுதந்திரத்திற்கு எதிராகவே செயல்பட்டது. காந்தியின் படுகொலைக்குக் காரணமான சிந்தனையை வளர்த்தது.

அப்படிப்பட்ட அமைப்பை அரசின் அதிகாரப்பூர்வ சின்னங்களால் போற்றுவது, சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தத்தையும் தியாகத்தையும் இழிவுபடுத்துவதற்கு சமமாகும். இத்தகைய நடவடிக்கை, நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை அழிக்கும் திட்டமிட்ட முயற்சி, ஜனநாயகத்தின் அடித்தளத்தை அசைக்கும் ஆபத்தான அரசியல் துரோகம்.

“சுதந்திர இந்தியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் துரோகச் செயல்!” :  செல்வப்பெருந்தகை கண்டனம்!

நமது தேசம் இன்று சுதந்திரமாக வாழ்வது மகாத்மா காந்தி, பண்டிதர் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், லால் பகதூர் சாஸ்திரி, பட்டாபி சீதாராமையா, டாக்டர் ராஜேந்திர பிரசாத், மௌலானா அபுல் கலாம் ஆசாத், காமராஜர், சுப்ரமணிய பாரதியார் போன்ற தலைவர்களின் தியாகங்களாலும், மக்கள் எழுச்சியாலும் தான்.

இவர்களின் சேவை, சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமல்ல, கல்வி, மதச்சார்பற்ற தன்மை, தேசிய ஒற்றுமை ஆகிய துறைகளில் செய்த சேவை இன்று வரை ஒளிமிக்க விளக்காக உள்ளது. அவர்களைப் போற்றாமல், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பை தேசிய அங்கீகாரத்துக்கு உயர்த்துவது இந்திய சுதந்திர வரலாற்றை தரம் தாழ்த்தி, சுதந்திரத்திற்கு போராடிய மக்களுக்கு, நேரடியாகச் செய்யப்படும் துரோகம்.

பிரதமர் மோடி அவர்கள் இந்த அரசியல் சதி முயற்சியை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அஞ்சல் தலையும் நாணயமும் தேசிய ஒற்றுமையின் அடையாளமாக, சுதந்திரத் தலைவர்களின் உருவங்களைக் கொண்டே இருக்க வேண்டும். பிளவை உண்டாக்கும் அமைப்பின் சின்னங்கள் ஒருபோதும் அதில் இடம் பெறக்கூடாது.

இந்திய ஜனநாயகத்தின் மாண்புபை சிதைக்க நினைக்கும் எந்த அரசையும் மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். வரலாற்றை அழிக்க முயல்பவர்களை எதிர்த்து, மக்களோடு சேர்ந்து, ஜனநாயக ரீதியிலான கடும் போராட்டத்தை நடத்துவோம். சுதந்திரத்தின் மதிப்பையும், சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் நினைவுகளையும், நாம் கடைசி மூச்சு உள்ளவரை காப்பாற்றுவோம்.”

banner

Related Stories

Related Stories