தமிழ்நாட்டு மக்களை திரையில் கவர்ந்தால் போதும், நாம்தான் அடுத்த முதலமைச்சர் என்று எண்ணி அரசியலுக்கு வந்த பலரில் புதுவரவாக நடிகர் விஜய் விளங்கி வருகிறார்.
இதற்கு முன்பு திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள், பெருமளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தாலும் கருத்தியல் தெளிவின்மை , கட்டமைப்பு தோல்வி ஆகிய காரணங்களால் பிற்காலத்தில் அரசியல் களத்திலிருந்து காணாமல் போக நேரிட்டது.
அந்த வரிசையில், தனது முன்னோடிகள் கடந்து வந்த பாதைகளிலிருந்து சிறிதும் விலகாமல், முந்தைய நடிகர்களையே மிஞ்சிடும் வகையில், கருத்தியல் தெளிவை கடந்து அரசியல் தெளிவே இல்லாத ஒரு தலைவராக தன்னை முன்னிறுத்தி வருகிறார் நடிகர் விஜய்.
அவர் திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகளை கடந்த நிலையில், இந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாடு மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் என்ன? என்று கேட்டால், ஒரு வரிக்கு மீறி அதில் இடம்பெற வார்த்தைகள் இல்லை.
அப்படியான சூழலில்தான், கருத்தியல் முரண்தான், அரசியல் முரண் என்பதைகூட உணராத விஜய், கருத்தியல் எதிரி, அரசியல் எதிரி என திரை வசனங்களை முன்வைத்து மக்களின் கவனத்தை ஈர்க்க முற்பட்டு வந்தார்.
அதன் தொடர்ச்சியாக, ரசிகர் பட்டாளங்களை அழைத்து அவர் கூட்டிய ஓரிரு கூட்டங்கள் நாடகக் கதைகளாகவே அமைந்து வந்தன. இந்த நாடகங்கள் என்றைக்கு தீர்ந்து, உண்மையான அரசியல் பேச்சுகள், உண்மையான ஆக்கப்பூர்வமான கருத்துகள் வெளிப்படும் என மக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 39 பேர் பிரச்சார இடத்திலேயே உயிரிழக்க நேரிட்டது.
இச்செய்தி அறிந்து, உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு முனைகளிலிருந்து அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் நிகராளிகள் பலரும் உடனடியாக சென்று மக்களின் துயரில் பங்கெடுத்தபோது, கரூரில் இருந்து அவசர அவசரமாக சென்னை ஓடி வந்தார் விஜய்.
அவர்தான், ஓடி வந்தார் என்றால் அவர் கட்சிக்காரர்கள் காணாமலேயே சென்றுவிட்டனர்.
இந்நிலையில், சொகுசாக 3 நாட்கள் கழித்து, மக்களின் இறப்பு குறித்து சிறிதும் குற்ற உணர்வில்லாமல், நடந்த விபத்திற்கு ஆளும் கட்சிதான் காரணம் என்பதுபோன்ற ஒரு பேச்சை காணொளி வழி வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் விஜய்.
அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நிகராளி என்றும் பாராமல், அவருக்கு நேரடி சவால் விடும் வகையில், தனது பேச்சை முன்வைத்திருக்கிறார் நடிகர் விஜய்.
இதற்கு பதிலடி தரும் வகையில் ஊடகவியலாளர்கள், “கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று துளியும் மனசாட்சியின்றி கேட்கிறார் விஜய்.
மதுரை மாநாட்டில் மூச்சுத் திணறி ஒரு இளைஞர் இறந்தார்.
நாமக்கல்லில் 40 பேர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 4 பேர் கவலைக்கிடமாக இருந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
விக்கிரவாண்டியில் 400 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர் நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை.
கரூரில் இவை எல்லை மீறிச் சென்று விட்டன. கொஞ்சமும் பொறுப்பின்றி பேசும் விஜய் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வை விட பன் மடங்கு ஆபத்தானவர்” என தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், “கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் தன் மீது எழுந்த குற்றச்சாட்டை, அப்படியே மாநில அரசின் மீது திருப்பும் நாடகத்தை நடத்தியுள்ளார் விஜய். கூட நெரிசல் சம்பவத்தில் A1 குற்றவாளியே விஜய்தான்” என திட்டவட்டமாக ஊடகவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஊடகவியலாளர்களை கடந்து, அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் விஜய்யின் பொறுப்பற்ற பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.