இந்தியா என்கிற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், இறையாண்மை மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இத்தாக்குதலை ஒன்றிய அரசே முன்னின்று நடத்தும் அளவிற்கு, ஒரு பிரிவினைவாத அரசியலை மேற்கொண்டு வருகிற பாசிச கட்டமைப்பு கொண்ட கட்சியாக பா.ஜ.க அமைந்துள்ளது.
அதற்கு எடுத்துக்காட்டுகளாக இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும் நடவடிக்கைகளை மேற்கோண்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய பா.ஜ.க அரசின் உள்துறை அமைச்சகம், நேற்று (செப். 2) வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 31, 2024ஆம் நாளுக்குள் இந்தியா வந்த வெளிநாட்டு சிறுபான்மையினர்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இல்லாமல் இந்தியாவில் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த அறிவிப்பின் படி, ஆஃப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் சிறுபான்மையினர்களாக இருந்த இந்து, சீக்கியம், புத்தம், ஜெயின், பார்சிஸ் மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் இந்தியாவில் சுதந்திரமாக குடியமர்த்தப்பட இருக்கின்றனர்.
தங்களது நாட்டிலிருந்து வாழ்வாதாரத்தை காக்க இந்தியா வந்த மக்களுக்கு இந்த அறிவிப்பு உதவியாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், இது அனைத்து மக்களுக்குமான அறிவிப்பாக இல்லாதது, மதச்சார்பின்மை கொண்ட இந்திய மக்களை முகம் சுழிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதற்கு முன்னதாக, ஒன்றிய பா.ஜ.க அரசால் கடந்த ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி, இதே போல வெளிநாட்டு சிறுபான்மையினர்கள் டிசம்பர் 31, 2014ஆம் நாளுக்குள் இந்தியா வந்திருந்தால், அவர்கள் இந்திய குடியுரிமைக்கு தகுதிப்பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதிலும் சரி, இதிலும் சரி இஸ்லாமியர்கள் மட்டும் சட்டத் திருத்தத்தில் விடுப்பட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இவை தவிர, இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி புரியும் மாநிலங்களில் பொது இடத்தில் கட்டப்பட்டுள்ளது என காரணம் தெரிவித்து ஆயிரக்கணக்கான சிறுபான்மையின மத ஆலையங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து நீதி கேட்க சென்ற சிறுபான்மையின மக்கள் மீது அடியடி தாக்குதல் மற்றும் கைதுகள் போன்ற நடவடிக்கைகள் அரங்கேறியுள்ளன.
இவை, இந்திய அரசமைப்பின் அடிப்படையை சிதைக்கும் வகையிலும், பா.ஜ.க.வின் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளன.