வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை ஆகிய ஆயுதங்களைப் பயன்படுத்தி, சில கட்சிகளை அடிமைப்படுத்தலாம்; ஆளுநரைக் கொண்டு அவதூறுகளைப் பரப்பலாம்; தந்தை பெரியார் கொள்கையை அஸ்திவாரமாகக் கொண்ட கொள்கைக் கோட்டையான தி.மு.க. ஆட்சியை அசைக்க முடியாது; 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதைக் காணலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சரித்திரம் படைத்து, உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ தி.மு.க. ஆட்சிக்கும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் ஒப்பற்ற முதலமைச்சரின் சாதனைகளுக்கும், அசைக்க முடியாத, எடுத்துக்காட்டான கொள்கைக் குடும்பக் கூட்டணிக்கும், மக்கள் செல்வாக்கும், பேராதரவும் பெருகிய வண்ணம் உள்ளது!
இதைக் கண்டு பொறாத பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்., ஒன்றிய ஆ்டசி தங்களிடம் உள்ள திரிசூலமான
1. வருமான வரித்துறை
2. சி.பி.ஐ
3. அமலாக்கத் துறை
ஆகியவற்றை அரசியல் ஆயுதங்களாக்கி, அதன்மூலம் விபீடண, அனுமான், சுக்ரீவ, பிரகலாதக் கூட்டங்களைத் தங்கள் அரசியல் அடிமைகளாக்கி வைத்துள்ளது.
அதே அணுகுமுறையை பா.ஜ.க.வின் எதிர்க்கட்சியினரின் வீட்டிலும், அலுவலகங்களிலும் சட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பாகக்கூட “ரெய்டு” மூலம் ‘அவப்பெயர்’ உண்டாக்கி, அவர்களுக்கு எதிராக ஓர் அவதூறு பரவும்படி செய்து, உளவியல் ரீதியாகவும் அச்சுறுத்திட இந்த அமைப்புகளை, “பழிவாங்கும் ஆயுதங்களாக்கி”, ஏவிவிடுகிறது. எப்போதோ நடந்ததாகப் போடப்பட்ட வழக்கில், நடுவில் ‘இடைச்செருகல்’ போல பலவற்றை நுழைத்து;
அமலாக்கத் துறையின் விசாரணைக்குக் கொண்டு வந்து, அடிப்படைகளைப் பறிப்பது என்பதைப் பல வழக்குகளில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சுட்டிக்காட்டியும், கண்டித்தும்கூட, இன்னமும் அவற்றின் செயல்பாடு, குறிப்பாக, அமுலாக்கத் துறையின் செயல்பாடு மாறியதாகவே தெரியவில்லை. காரணம், ‘மேலே’ இவர்களை ஏவியவர்களின் அம்பாக வந்து, முனை முறிந்து, நீதிமன்றங்களிடம் ‘குட்டு’ வாங்கியும்கூட, அதன் போக்கு மாறவில்லை என்பது வியப்புக்குரியதே!
நீதிமன்றங்களில் குட்டு வாங்கும் அமலாக்கத்துறை!
மேல் அமலாக்கத் துறை போட்ட சுமார் 102–க்கும் மேற்பட்ட வழக்குகளில் 2 வழக்குகளில்தான், அதனால் தண்டனை வாங்கிக் கொடுக்க முடிந்தது; அதேநேரத்தில், நீதிமன்றங்களில் வாய்தாவுக்குமேல் வாய்தா வாங்கியும், கடைசியில் நீதிமன்றக் கண்டனத்தையே தான் பெற முடிந்தது.
தமிழ்நாடு தி.மு.க. அரசில், மூத்த அமைச்சர்களில் ஒருவரான திரு.அய்.பெரியசாமி (திண்டுக்கல்) அவரது மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் ஆகியோரைக் குறி வைத்து நேற்று (17.8.2025) ‘ரெய்டு’ நடத்தப்பட்டு, ஊடகங்களில் வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. விசாரணை, திடீர் சோதனை என்றால்கூட, அவற்றைச் சட்ட வரம்புக்குள் நின்று செய்யவேண்டாமா?
சட்டமன்ற உறுப்பினர் அறையின் பூட்டை உடைக்க அமலாக்கத் துறைக்கு உரிமை உண்டா?
சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்குள்ளே நுழைந்து, குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர் அறையின் பூட்டை உடைத்துப் பரிசோதனை செய்தது தவறு; அப்படி செய்வதற்குச் சட்டப்பேரவைத் தலைவரின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டாமா?
இந்தச் சிறு செயல், நாளை ‘சட்டமன்றம் Vs ஆட்சிமன்றம்’ (Legislative Vs Executive) என்ற பெரும் அதிகார எல்லைப் பிரச்சினையாக மாறி, பெரு நெருப்பாக மாறிவிடாதா? யோசிக்க வேண்டாமா? (வழக்கும் பதிவாகியிருக்கிறது).
இது ஒருபுறம்.
தமிழ்நாட்டின் ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரா?
தமிழ்நாட்டில் உள்ள பச்சை ஆர்.எஸ்.எஸ். பரப்புரை செய்யும் ஆளுநர் என்ற தன்மானத்தையும், சொரணையையும் இழந்துவிட்ட ஒரு நபர் (இப்படி எழுதுவதற்கு மிகவும் வருத்தமாக இருந்தாலும்) உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் கண்டனங்களைப் பெற்றும், அதைப் பொருட்படுத்தாமல், நாளும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராக அவதூறுகளை வீசி வருகிறார்;
தனக்கு ‘எல்லாம் தெரிந்ததைப்போல’ ஒரு போட்டி அரசு நடத்திட முயன்று, தமிழ்நாட்டு மக்களின் அருவருப்பை நாளும் சம்பாதிக்கிறார்; தான் பதவிப் பிரமாணம் எடுத்த அரசியல் அமைப்புச் சட்ட வரிகளைக்கூட மறந்து, ‘தானடித்த மூப்பாகவே’ நடந்து வருகிறார்; எதிர்க்கட்சியாகக்கூட அல்ல, “எதிரிக்கட்சித்” தலைவர்போல அன்றாடம் ஏதாவது ‘விஷமதான’, ‘அங்குரார்ப்பணத்தைச் செய்கிறார், அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு!
திருக்குறளில் இல்லாத குறளையே புதிதாகப் போடுவது, தனது “பஜனைக் கூட்டம் ஒன்றை” அழைப்பது, ஊடக வெளிச்சத்தில் குளிர் காய வைப்பது போன்ற பணிகளைச் செய்து, சட்டமன்ற மரபுகள், ஆட்சியின் மாண்பிற்குரிய விழுமியங்களை மிகவும் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்வதன்மூலம் தி.மு.க. ஆட்சிக்குத் தொல்லை தர ஒவ்வொரு நாளும் திட்டமிட்டுச் செயலாற்றுகிறார்!
இது தந்தை பெரியாரின் மண்!
இவற்றால், பெரியார் மண்ணின் பெருமைக்குரிய கொள்கை அஸ்திவாரத்தில் அமைந்த கற்கோட்டையான தி.மு.க. ஆட்சியின் மக்கள் ஆதரவை அசைக்க முடியாது!
அவதூறுச் சேறுகளும், ஆதாரமில்லா அச்சுறுத்தல்களும் நாளும் ‘தி.மு.க.வின்’ வெற்றி விளைச்சலுக்கான உரங்கள், உரங்கள், உரங்கள் என்பதை அந்த ‘அரசியல் பிழைத்தோருக்கு’ 2026 இல் நடைபெறப் போகும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் உணர்த்துவர் என்பது நிச்சயம்!