அரசியல்

“தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.6.2025) திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி ஆற்றிய உரை.

எழில் கொஞ்சும் ஏலகிரி - சவ்வாதுமலை - நிலம் நனைக்கும், செய்யாறு - ஆரணியாறு - ஒரு பக்கம், சந்தனம் மணக்கும் காடுகள் - இன்னொரு பக்கம் பசியைத் தூண்டக்கூடிய ஆம்பூர் பிரியாணி – இப்படி இத்தனைச் சிறப்புகளுக்கும் பெயர் பெற்ற மாவட்டம் தான், இந்த திருப்பத்தூர் மாவட்டம்!

இத்தகைய சிறப்புக்குரிய மாவட்டத்தில், உங்கள் அன்பை நான் ஏற்றுக்கொண்டு இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!

தோல் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி மூலமாக வருவாயும் ஈட்டி வேலைவாய்ப்பும் அளிக்கும் இந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் மாபெரும் விழாவாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நேற்று, காட்பாடி இரயிலில் இறங்கி வந்ததிலிருந்து மக்களுடைய அதாவது உங்களுடைய வரவேற்பில் மனம் நிறைந்திருக்கிறேன். நம்முடைய மூத்த அமைச்சர் அண்ணன் திரு. துரைமுருகன் அவர்கள் இந்த ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் தளகர்த்தர்! அவர் நெகிழ்ச்சியுடன் சொன்னார்: “இதுவரைக்கும் இந்தளவுக்கு கூட்டத்தை நான் பார்க்கவேயில்லை!” “நம்முடைய அரசு செய்திருப்பது போன்ற திட்டங்கள் இதுவரைக்கும் தமிழக வரலாற்றிலேயே நடைபெற்றது இல்லை” என்று பெருமையோடு சொன்னார்!

அந்தளவுக்கு திட்டங்களை செய்திருக்கிறோம்! செய்துகொண்டு இருக்கிறோம்! தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம்! அதனால்தான், நீங்கள் அன்பை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்!

நேற்று மாலை 5 மணிக்கு வேலூரிலிருந்து நாங்கள் திருப்பத்தூருக்கு புறப்பட்டோம். இந்த திருப்பத்தூருக்கு ஆறு மணிநேரம் ஆனது! 5 மணிக்கு எங்களுடைய பயணம் தொடங்கி 11 மணிக்கு திருப்பத்தூரில் எங்களுடைய பயணம் முடிவடைந்தது.

அந்த அளவுக்கு சாலையின் இருமறுங்கிலும் கூட்டம் – கழகத் தோழர்கள் வரவேற்பது ஒரு பக்கம் – அதையும் தாண்டி பொதுமக்கள், இளைஞர்கள் தாய்மார்கள், மாணவிகள், மாணவியர்கள், விவசாயிகள், தொழிலாளிகள் இப்படி பல்வேறு தரப்பட்ட மக்கள் தந்த வரவேற்பு. இந்த வரவேற்பை பார்க்கின்றபோது நான் கொஞ்சம் இறுமாப்போடு, பெருமையோடு தெரிவிக்க விரும்புவது என்னவென்று கேட்டால், 2026 மட்டுமல்ல, அது 2031-ஆக இருந்தாலும், 2036-ஆக இருந்தாலும் என்றைக்கும் நாம் தான் இந்த நாட்டை ஆளப்போகிறோம் என்பதற்கு அடையாளமாக மக்கள் தந்திருக்கக்கூடிய வரவேற்பு எடுத்துக்காட்டியிருக்கிறது.

குறிப்பாக இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர், நம்முடைய கலைஞர் தான் அடிக்கடி சொல்வார், ‘எதிலும் வல்லவரான’ திரு.எ.வ.வேலு அவர் சிறப்பாக ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறார்! அவர் திருவண்ணாமலைக்காரராக இருந்தாலும், எங்கும் வல்லவராக - எப்போதும் வல்லவராக இருப்பவர் தான் அவர்.

அதனால்தான், இந்த திருப்பத்தூர் மாவட்டத்திற்கு, நாங்கள் பொறுப்பாளராக தலைமைக் கழகத்தின் சார்பில் நியமித்திருக்கிறோம்! தன்னுடைய பொறுப்பில் இருக்கும் துறையை மட்டுமல்ல, பொறுப்பு மாவட்டத்தையும் சிறப்பாக வளர்த்தெடுத்திருக்கிறார் அமைச்சர் வேலு அவர்கள்! அதேபோல, அவருக்கு துணை நிற்கக்கூடிய இந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல், மாவட்ட ஆட்சியர் திருமதி. சிவசௌந்தரவல்லி அவர்கள், மிகச்சிறப்பாக செயல்பட்டு, இந்த விழா சிறப்பாக நடைபெற காரணமாக இருக்கிறார்! அவருக்கும், அவருக்கு துணை நிற்கக்கூடிய மாவட்டத்தை சார்ந்திருக்கக்கூடிய அரசு அலுவலர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

“தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!

இன்று நாம் பெருமையோடும், மகிழ்ச்சியோடும் இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறோம் என்று சொன்னால், தமிழ்நாட்டின் நலன் மேல் அக்கறை இல்லாத கடந்தகால ஆட்சியாளர்களால் சீரழிந்த தமிழ்நாட்டின் வளர்ச்சியை நம்முடைய திராவிட மாடல் அரசு, இந்த நான்காண்டுகளில் மீட்டெடுத்து, வரலாறு காணாத வளர்ச்சிக்கு நாம் கொண்டு சென்றிருக்கிறோம்!

இதை நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக சொல்கிறேன் என்று நீங்கள் கருதவேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய அரசால் கூட, நம்முடைய வளர்ச்சியை மறைக்க முடியவில்லை! அதனால்தான், ஒன்றிய அரசே, தமிழ்நாடு 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட, பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்திருப்பதாக சொல்லியிருக்கிறது! இந்தியாவின் G.D.P-யில் நம்முடைய பங்கு எவ்வளவு தெரியுமா? 9.21 விழுக்காடு! அதாவது, நாட்டின் வளர்ச்சியில் நூற்றில் பத்து விழுக்காட்டில் நாம் இருக்கிறோம்!

அதுமட்டுமல்ல, சமூக முன்னேற்றக் குறியீடுகளிலும், நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம்! உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில், முதலிடம் தமிழ்நாடு! வறுமை இல்லாத நிலையை உருவாக்குவதில் இரண்டாவது இடம் நாம் இருக்கிறோம்! நீடித்த வளர்ச்சி குறியீட்டிலும் - மருத்துவக் குறியீட்டிலும் மூன்றாவது இடம்! பணவீக்கம் குறைந்த மாநிலம்! நாட்டிலேயே அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட - நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர்ந்து வருகிறது!

வேளாண்துறை மூலமாக பாசனப் பரப்பும், வேளாண் உற்பத்தியும் அதிகமாகி இருக்கிறது! தொழிலாளர்கள் அதிகரித்து இருக்கிறார்கள்! தேசிய சராசரியைவிட, தமிழ்நாட்டில், தனிநபர் வருமான வளர்ச்சி பல ஆண்டுகளாக அதிகமாக இருக்கிறது! இந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம், தலைநகரான சென்னையைச் சுற்றி மட்டும் வளர்ச்சி என்று செயல்படாமல், தமிழ்நாட்டின் அத்தனைப் பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி சென்றடைய வேண்டும் என்று செயல்படுவதுதான் காரணம்! ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பது போல் – ‘எல்லா மாவட்டங்களுக்கும் எல்லாம்’ என்கிற வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம். இதனால்தான், நகரப் பகுதிகளைப் போலவே கிராமப் பகுதிகளும் வளருகிறது!

நான் கோட்டையிலிருந்து மட்டும் பணிகளைச் செய்யவில்லை. தொடர்ந்து மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். குறைந்தது ஒரு மாதத்திற்கு மூன்று மாவட்டங்களுக்குச் செல்கிறேன். இந்த மாதத்தில் மட்டும் சேலம் மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்து, இப்போது திருப்பத்தூருக்கு வந்திருக்கிறேன்!

நம்முடைய திருப்பத்தூருக்கு திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களை பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்றால், சுருக்கமாகச் சொல்கிறேன் – தலைப்புச் செய்திகளாக சொல்கிறேன்.

• 182 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பத்தூரில் குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது!

• 425 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுள்ளது!

• 14 பாலங்கள் கட்டப்பட்டிருக்கிறது!

• பள்ளிக்கூடங்களில் 114 அறிவியல் ஆய்வகங்கள் அமைத்திருக்கிறோம்! பள்ளிகளை மேம்படுத்த 489 பணிகள் நடைபெற்றிருக்கிறது!

• அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரத்து 536 உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்றிருக்கிறது!

• 211 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம்!

• அதுமட்டுமல்ல, தொடர்ச்சியாக, முக்கியமாக நாட்றாம்பள்ளி வட்டத்தில் 125 ஏக்கர் பரப்பளவில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது!

“தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!

• திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் அமைய இருக்கிறது!

• 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விளையாட்டு வளாகம் அமைகின்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

• ஏலகிரி மலையில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சாலை மேம்படுத்தப்பட இருக்கிறது!

• ஏலகிரி சுற்றுலா வசதிக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதோடு ஒன்றிய சாலைகள், மாவட்டச் சாலைகளாக தரம் உயர்த்தப்பட இருக்கிறது!

இப்படி ஏராளமான பணிகளும், திட்டங்களும் நம்முடைய திருப்பத்தூருக்காக செய்யப்பட இருக்கிறது! செய்து கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்கள் என்று பல இருக்கிறது. அதில் இந்த திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மட்டும் பயனடைகின்றவர்கள் விவரத்தை தலைப்பு செய்தியாக சொல்கிறேன்…

• கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், ஒரு இலட்சத்து 74 ஆயிரம் மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்! இந்த 1000 ரூபாய் பெறக்கூடிய மகளிர் உரிமைத் தொகையைப் பற்றி சொல்கின்றபோது, நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சில பகுதிகளில், அது கிடைக்காத, விடுபட்டிருக்கக்கூடிய நிலை இருந்து கொண்டிருக்கிறது.

எல்லோருக்கும் தெரியும். அதனால், விடுபட்டிருக்கக்கூடிய அந்த தாய்மார்களின், மகளிரின் கணக்கெடுத்து அதை விரைவில், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

• முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில், 42 ஆயிரம் மாணவர்கள் சத்தான உணவை சூடாக சுவையாக சாப்பிடுகிறார்கள்!

• ஏழாயிரம் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது!

• ஐந்தாயிரம் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது!

• மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரம் பேர் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்!

• இருபதாயிரம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது!

• கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின்கீழ் 94 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள்!

• 3 இலட்சத்து 45 ஆயிரம் பெண்களுக்கு சுய உதவிக் குழு கடனாக ஆயிரத்து 754 கோடி ரூபாய் தரப்பட்டிருக்கிறது!

• ஏழாயிரம் பேருக்கு வீடு தரப்பட்டுள்ளது.

• 1041 குழந்தைகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நிதி வழங்கப்பட்டிருக்கிறது!

• 30 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது!

• ஆயிரத்து 36 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டிருக்கிறது!

• 41 ஆயிரம் மாணவ- மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்பட்டிருக்கிறது!

• 2 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான கருவிகள் வழங்கப்பட்டிருக்கிறது!

• அமைப்பு சாரா தொழிலாளர்களில், 82 ஆயிரம் பேர் பல்வேறு நிதி உதவிகளை பெற்றிருக்கிறார்கள்!

• 19 திருநங்கையர்களுக்கு தொழில் தொடங்க உதவி செய்யப்பட்டிருக்கிறது!

• 18 ஆயிரம் பழங்குடியினருக்கு எஸ்.டி. சான்றிதழ் தரப்பட்டிருக்கிறது!

• அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில், 56 பேருக்கு மானியத்துடன் கடனுதவி தரப்பட்டிருக்கிறது.

• இந்த மாவட்டத்தில் மட்டும் 27 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது!

• இந்த நேரத்தில், நான் பெருமையாக ஒரு செய்தியை சொல்கிறேன்…

ஐந்து மாதங்களுக்குள் தமிழ்நாடு முழுவதும் ஐந்து இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும் என்று வருவாய்த் துறையினருக்கு ஒரு இலக்கை நாங்கள் நிர்ணயித்தோம். ஆனால், இன்று அந்த இலக்கையும் தாண்டி, டிசம்பர் 2024-இல் இருந்து, தற்போதுவரைக்கும் மொத்தம் ஆறு இலட்சத்து 91 ஆயிரத்து 728 வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கியிருக்கிறோம்!

இப்படி ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை செய்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்!

இன்றைக்கு காலையில் கூட திருப்பத்தூருக்கு என்னென்ன தேவைகள் என்று கேட்டேன், கேட்டுவிட்டு, அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியுமா? அதனால் தான் இந்த மாவட்டத்திற்கான ஐந்து அறிவிப்புகளை இப்போது வெளியிட விரும்புகிறேன்.

முதலாவது அறிவிப்பு

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய நெக்னாமலை பகுதியில் வாழும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும் – பொதுமக்கள் மருத்துவ வசதிகளை பெறவும் – வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யவும் - 30 கோடி ரூபாய் செலவில், ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கப்படும்!

“தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!

இரண்டாவது அறிவிப்பு

குமாரமங்கலம் பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகத்தை உறுதிசெய்கின்ற வகையில், அந்தப் பகுதியில் ஆறு கோடி ரூபாய் செலவில் – புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும்!

மூன்றாவது அறிவிப்பு

நல்லகுண்டா பகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்காவை ஒட்டி, 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில், 250 ஏக்கர் பரப்பளவில், 200 கோடி ரூபாய் செலவில் – புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்!

நான்காவது அறிவிப்பு

திருப்பத்தூர் நகரத்தின் மையப்பகுதியில், பழைய பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில், 18 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும்!

ஐந்தாவது அறிவிப்பு

ஆம்பூர் நகர மக்கள் பயன்பெறும் வகையில், ஒரு கோடி ரூபாய் செலவில், புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும்!

நாம் அறிவிப்புகள் மட்டும் செய்வதில்லை; அவற்றை விரைந்து செயல்படுத்தி, அதையும் தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டு இருக்கிறோம்!

நேற்று, நான் திருப்பத்தூர் வரும் வழியில், பூதூர் ஊராட்சியில் இருக்கும் கலைஞர் கனவு இல்லத்திற்கு சென்று பார்வையிட்டேன். அங்கு குடியிருந்த ஒரு தாய் – அவருடைய வீட்டிற்குச் சென்று நான் சந்தித்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்கள் மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சியும்!

முத்தமிழறிஞர் கலைஞரின் முக்கியமான கனவுகளில் ஒன்று “குடிசையில்லா தமிழ்நாடு”! அந்தக் கனவை நனவாக்கும் வகையில், கலைஞரின் பெயரிலான கனவு இல்லம் திட்டத்தில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 6 ஆண்டுகளில், எட்டு இலட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித் தரப் போகிறோம். ஒரு வீட்டுக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் தருகிறோம்.

கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் இரண்டு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தோம். அதில், 90 ஆயிரம் வீடுகள் கட்டி முடித்துவிட்டோம். மீதமுள்ள வீடுகள் பணியும் விரைந்து நடைபெற்றுகொண்டு வருகிறது! இதை நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறேன் - கேட்டுகொண்டே இருப்பேன்.

இதேபோல், ஒன்றிய அரசு வீடு கட்டும் திட்டமும் இருக்கிறது! அது ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். யாருடைய பெயரில்? பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் என்று அதற்கு பெயர்! ஒரு வீடு கட்டுவதற்கு

1 இலட்சத்து 20 ஆயிரம் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இதில், 60 விழுக்காடு நிதியை ஒன்றிய அரசும், 40 விழுக்காடு நிதியை மாநில அரசும் தர வேண்டும்.

ஒரு இலட்சத்து இருபது ஆயிரத்தில் வீடுகட்ட முடியுமா? அதிலும் 60 சதவீதம் அதாவது, 72 ஆயிரம் ரூபாய் தான் ஒன்றிய அரசு தருகிறது. மீதி கூடுதலாக, நம்முடைய மாநில அரசு, ஒரு இலட்சத்து 62 ஆயிரம் ரூபாயை வழங்கி வீடு கட்டி தருகிறோம்.

பெயர்தான் அவர்களுடையது! நிதி நம்முடையது! அதனால்தான், நான் ஏற்கெனவே ஒரு டயலாக்கை நினைவுப்படுத்தினேன்… “மாப்பிள்ளை அவர்தான் ஆனால், அவர் அணிந்து கொண்டிருக்கக்கூடிய சட்டை என்னுடையது”! இப்படிதான், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை ஒழுங்காக தருவது இல்லை! தந்தாலும் அரைகுறைதான்!

இந்த நிலையில் ஒன்றியத்தில் இருக்கின்றவர்களின் எண்ணம் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு மக்களை மதத்தால் - சாதியால் - பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களால் முடியாதபோது, இங்கு இருக்கக்கூடிய அ.தி.மு.க. கட்சியையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.

நாம் கேட்பது, நாட்டில் வளர்ச்சி சரிகிறது… மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது… வேலைவாய்ப்பு இல்லை என்று சொன்னால், பி.ஜே.பியும், அதிமுகவும் மக்களைப்பற்றி கவலைப்படாமல், மதத்திற்காக கவலைப்படுகிறார்கள்! இதுதான் அவர்களுடைய அரசியல்.

தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என்று அதிமுகவை வைத்துக்கொண்டு, பாஜக பேசுகிறார்கள்! உண்மையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணிக்கு தான் ஆபத்து! மிஸ்டு கால் கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் இலாபத்திற்கு கடவுள் பெயரை ‘மிஸ்-யூஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் போலி பக்தியை அரசியல் நாடகத்தை இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள். இது தமிழ்நாடு, தந்தை பெரியார் உருவாக்கிய மண் – அண்ணா வளர்த்த மண் – கலைஞர் அவர்கள் இதை மீட்ட மண் - தமிழ்நாடு அனைத்து மதத்தினரும் தங்கள் உரிமையோடும் – பிற மதத்தினரோடு நல்லிணக்கத்தோடும் வாழுகின்ற மண் இது.

கடந்த 4 ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டு வரலாறு காணாத அளவிற்கு 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்! அதேபோல், 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேவாலயங்களையும் – மசூதிகளையும் புனரமைக்க நிதி ஒதுக்கியிருக்கிறோம். இதுதான் நம்முடைய திராவிட மாடல். இதை எல்லாம் பார்த்துதான் மதவாத அரசியல் செய்கின்றவர்களுக்கு பற்றிக் கொண்டு எரிகிறது.

அவர்களால் தமிழ்நாட்டிற்கு செய்த வளர்ச்சியைப்பற்றி பேச முடியவில்லை - ஓட்டு கேட்க முடியவில்லை - முடியாது. செய்திருந்தால்தான், சொல்ல முடியும்! அதனால் தான், இப்போது மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால், அங்கும் தி.மு.க. ஸ்கோர் செய்துவிட்டார்களே என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த படாத பாடுபடுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது., மீண்டும் சொல்கிறேன் - இந்த மண், தந்தை பெரியார் பண்படுத்திய மண்! பேரறிஞர் அண்ணாவால் மேன்மைப்படுத்தபட்ட மண்! தலைவர் கலைஞர் அவர்களால், வளர்க்கப்பட்ட மண்! இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள்! அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம்! அண்ணா பெயரையே, அவர்கள் அடமானம் வைத்துவிட்டார்கள். இன்றைக்கு, கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள்…

நாளைக்கு, தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக் கூடாது! தமிழ்நாடும், தன்மானமுள்ள தமிழ்நாட்டு மக்களும் இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளின் நோக்கத்தை புரிந்து, தமிழினத்திற்கு எதிரானவர்களுக்கும் – எதிரிகளுக்கு துணை போகும் துரோகிகளுக்கும் – ஒருசேர பாடம் புகட்ட வேண்டும்!

உங்களுக்கு அரணாக என்றைக்கும் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எப்பொழுதும் இருப்போம்! இருப்போம்! அதேபோல, நீங்கள் என்றைக்கும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories