அரசியல்

நமது ஆட்சியை கொத்தடிமைக் கூட்டத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

நமது ஆட்சியை கொத்தடிமைக் கூட்டத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கி, சமூக நீதியை நிலைநாட்டியதற்காக மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற நன்றி பாராட்டும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அதன் விவரம் :

இன்று எனக்கு உணர்ச்சிப்பூர்வமான நாள். இந்த விழாவிற்காக மட்டுமல்ல; இந்த இடத்திற்காகவும் நான் உணர்ச்சிவசப்படுகிறேன். உங்களுக்கெல்லாம், மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்த தாய் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இந்தப் பெருமைமிகு வள்ளுவர் கோட்டத்தில் இந்த விழா நடைபெறுகிறது. நீங்கள் எல்லாம் இணைந்து இந்த பாராட்டு விழா நடத்துவதில் மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன்!

தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தவரை, திருவள்ளுவர் மீதும், திருக்குறள் மீதும் தீரா காதல் கொண்டவர்; திருக்குறளைத் தூக்கிச் சுமந்து பரப்பினார்!

பொதுப்பணித் துறை அமைச்சராகவும், போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தபோது அரசுக் கட்டடங்களில் திருவள்ளுவர் படம் வைத்தவர்; திருக்குறளை எழுதச் சொன்னவர்! பேருந்துகளில் குறளை இடம்பெற செய்தவர்!

1971-ல் முதலமைச்சராக தமிழறிஞர்கள் கணித்த திருவள்ளுவர் ஆண்டை அரசாணையாக வெளியிட்டவர்! வள்ளுவரை தமிழ்ச் சமூகம் வானளாவ போற்றவேண்டும் என்ற இந்திய நாடு தொடங்கும் குமரி முனையில் சமத்துவத்தை வலியுறுத்திய வள்ளுவருக்கு வானுயர சிலை அமைத்தவர்! அந்தச் சிலையின் வெள்ளி விழாவையும் நாம் கொண்டாடினோம்!

இப்படி, வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் சூட்டிய புகழ்மாலைகளில் மிக முக்கியமானது, 1974-ல் அவர் அடிக்கல் நாட்டிய இந்த வள்ளுவர் கோட்டம்! திருவள்ளுவர் சிலையும், திருவாரூர் தேரும் அமைந்துள்ள இந்தக் கோட்டம், தலைவர் கலைஞரின் கனவுப் படைப்பு!

நமது ஆட்சியை கொத்தடிமைக் கூட்டத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

இந்தக் கலைக் கருவூலத்தைதான் நாம் இப்போது 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்திருக்கிறோம்! பொதுவாக, தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் என்று சொன்னால், அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போட்டுவிடுவார்கள். நாம் உருவாக்கிய கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை பராமரிக்காமல் விட்டுவிடுவார்கள். அப்படி கவனிப்பார் இல்லாமல் இருந்த இந்த வள்ளுவர் கோட்டத்தை, இப்படி புதுப்பொலிவோடு மீட்டெடுத்து இருக்கிறோம்! அதை செய்து காட்டிய பொதுப் பணித்துறை அமைச்சர்

திரு. எ.வ.வேலு அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

தலைநகர் சென்னையின் மைய மண்டபமாக ஆயிரத்தி 400 பேர் அமரக்கூடிய மாபெரும் கூட்ட அரங்கத்தோடு அமைந்திருக்கின்றது. இந்த தமிழ்க் கோட்டத்தை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன்! பாராட்டுக்காக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கவில்லை. உங்கள் அன்புக்காகதான் நான் பங்கெடுத்திருக்கிறேன்!

இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த நம்முடைய மாண்புமிகு திரு. மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுத் திறனாளிகளான நீங்கள் தலைவர் கலைஞர் அவர்களின் உள்ளத்தில் எப்போதும் நிறைந்தவர்கள்! நாம் எல்லோரும் சகோதர - சகோதரிகள் என்ற உணர்வுடன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தலைவர் கலைஞர் அவர்கள் “உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்று சொல்வாரே அந்த பாச உணர்வுடன் வந்திருக்கிறேன்!

இங்கே எனக்கு முன்னால் பேசியவர்கள் என்னைப் பாராட்டி பேசியபோது, அதையெல்லாம் நான் பாராட்டாக எடுத்துக்கொள்ளவில்லை; என் மேல் நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு நான் உழைப்பதற்கு ஊக்கமாக எடுத்துக்கொள்கிறேன்! அதேபோல, கோரிக்கைளையும் வேண்டுகோளாகவும் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கே தெரியும் – என்றும் நான் உங்களில் ஒருவன். உங்களுக்கான அனைத்தையும் நிச்சயம் படிப்படியாக நிறைவேற்றியே தீருவேன்.

தலைவர் கலைஞர் சொன்னதுபோல, ‘நான்’ என்பதைவிட ‘நாம்’ என்ற சொல்லுக்குதான் வலிமை அதிகம்! அதனால்தான், ஆட்சிப் பொறுப்பேற்றவுடனே இது, எனது அரசு அல்ல; நமது அரசு என்று சொன்னேன்!

“வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து நமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்வோம்” என்று சொன்னேன். அதனால்தான், எல்லாருக்கும் எல்லாம் என்ற பொருள்பட திராவிட மாடல் அரசு என்று நம்முடைய அரசுக்கு பெயர் வைத்தேன். திராவிட மாடல் என்றால், சமூகநீதி - சமத்துவம் - சமதர்மம் - சகோதரத்துவத்தை காக்கக்கூடிய அரசு!

ஏழை எளியவர்கள் - ஒடுக்கப்பட்டோர் - ஒதுக்கப்பட்டோர் - விளிம்புநிலை மக்கள் - பெண்கள் - இளைஞர்கள் - முதியோர் - மாற்றுத் திறனாளிகள் - திருநர் என்று அனைவரையும் உள்ளடக்கிய அரசு இது!

நமது ஆட்சியை கொத்தடிமைக் கூட்டத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

இது ஏதோ அரசியலுக்காக, தேர்தலுக்காக செய்வது இல்லை; உள்ளார்ந்த அன்புடன் செய்வது! என் பிறந்தநாள் அன்றைக்கு, இங்கே நம்முடைய நண்பர் குறிப்பிட்டுச் சொன்னார், காலையில் தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோருடைய நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, அண்ணா அறிவாலயத்திற்குச் சென்று அங்கே தோழர்கள், நண்பர்களிடத்தில் எல்லாம் வாழ்த்துகளைப் பெற்று, பொதுமக்களிடமும் வாழ்த்துகளைப் பெற்று, கடைசியாக என்னுடைய மனம் முழு நிறைவு எப்பொழுது அடையும் என்று சொன்னால், இங்கே அருகே இருக்கக்கூடிய மாற்றுத்திறன் கொண்ட பள்ளிக் குழந்தைகள் பயிலக்கூடிய சிறுமலர் பள்ளியில், அவர்களுடன் இருந்து, அவர்களுடைய புன்னகையை வாழ்த்தாக பெறும்போதுதான், அந்த நாளே எனக்கு முழுமை அடையும்! இன்றைக்கு நேற்று இல்லை, 1984-ல் இருந்து, தொடர்ந்து 42 ஆண்டுகளாக சிறுமலரில்தான் என்னுடைய மகிழ்ச்சி முழுமை அடைகிறது! அதனால்தான், தலைவர் கலைஞர் வழித்தடத்தில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்து செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறோம்!

இத்துடன் முத்தாய்ப்பாகதான் உங்களுக்கான கோரிக்கையை நீங்களே ஒலிக்கவேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாற்றுத் திறனாளி உறுப்பினர் இடம் பெறுவார் என்று மாபெரும் சமூகநீதி உரிமையை சட்டமாக்கியிருக்கிறோம்!

இதன் மூலம், 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2 ஆயிரத்து 984 மாற்றுத்திறனாளிகளும் நியமிக்கப்படுவார்கள்.

மாவட்ட வாரியாக, ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவில், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருக்கின்ற உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றிருப்பார். நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மன்ற கூட்டங்களில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு வழங்கப்படுவது போல மதிப்பூதியம் வழங்கப்படும். உறுப்பினர்களுக்கு உள்ள கடமைகள் மற்றும் அதிகாரங்களை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அதனால், உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!

மாற்றுத் திறனாளி தோழர்களுடைய வாழ்வு வளம்பெற எதிர்காலம் ஏற்றம்பெற நம்முடைய திராவிட மாடல் அரசில் ஏராளமான திட்டங்களையும், முன்னெடுப்புக்களையும் செய்து கொண்டிருக்கிறோம்! அதனையெல்லாம் இப்போது சொல்லவேண்டிய அவசியமில்லை. உங்களுக்கே நன்றாக தெரியும்.

நமது ஆட்சியை கொத்தடிமைக் கூட்டத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

அதுமட்டுமல்ல, இங்கே பேசிய நம்முடைய அருமை நண்பர் தீபக் அவர்கள், கோரிக்கையோடு என்னை சந்திக்க வந்தபோது மாற்றுத் திறனாளிகளுக்கு தி.மு.க ஆட்சிக்கு வந்து நாம் செய்து கொடுத்திருக்கக்கூடிய 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை புத்தகமாகவே தயாரித்து வழங்கியிருந்தார். அவர் மறந்திருக்க மாட்டார். அவரே பலமுறை என்னிடத்தில் சொல்லியிருக்கிறார். அந்த அளவுக்கு சாதனை செய்திருக்கிறோம். இனியும் செய்வோம். செய்து கொண்டே இருப்போம். நம்முடைய அரசின் சேவைகள் அனைத்தையும் நீங்கள் படிக்கவேண்டும்.

இங்கே வருகை தந்திருக்கின்ற மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகளின் சேவைகளுக்காக அயராது பணி செய்கின்ற நல்ல உள்ளங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டுகிறேன். Inclusive சமூகமாக நாம வளரவேண்டும்!

இன்றைக்கு மாற்றுத் திறனாளிகள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த இடங்களை அடைந்திருக்கிறார்கள், விருதுகளை வாங்கி இருக்கிறார்கள். சமூகத் தடைகளை உடைத்து முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சவால்களை வென்று வருகிறார்கள். பிறப்பினாலோ, உடல்நலக் குறைவாலோ அல்லது விபத்தினாலோ பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிப்பிலிருந்து மீளமுடியும், மற்றவர்களைப் போல நாங்களும் வெல்ல முடியும் என்பதை மெய்ப்பித்துக் கொண்டு வருகிறீர்கள். இத்தகைய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

“முயற்சி திருவினை ஆக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்” என்று சொன்னார் வள்ளுவர். முயற்சி செய்தால் எதுவும் முடியும் என்பதை உண்மையில் நிரூபித்து வருகிறவர்கள் மாற்றுத் திறனாளிகள்தான். உங்களுக்கு நான் சொல்வது, உங்களுக்கு நான் இருக்கிறேன்; இந்த அரசு இருக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்குவது என்னுடைய கடமை!

இது எல்லாருக்குமான ஆட்சி, எல்லாரையும் முன்னேற்றுகின்ற ஆட்சி. அதனால்தான் சில வகுப்புவாத சக்திகளால் அவர்களுக்கு துணை போகின்ற கொத்தடிமைக் கூட்டத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எல்லோரும் முன்னேறக் கூடாது; எல்லார்க்கும் சமூகநீதி கிடைக்கக்கூடாது; சமத்துவம் உருவாகக் கூடாது என்று நினைக்கின்ற வகுப்புவாதிகள்தான் திமுக அரசு மீது பாய்கிறார்கள்!

அதையெல்லாம் அரசியல் களத்தில் முறியடிக்கக்கூடிய வலிமையை தருவது, நீங்களும் – மக்களும் தருகின்ற அன்புதான்! அந்த வகையில், என் மனதுக்கு இதமாக இத்தகைய விழாவை ஏற்பாடு செய்திருக்கின்ற மாற்றுத் திறனாளி சகோதார சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி!

வள்ளுவம் வாழ்வியல் நெறியாக மாறட்டும்! சமுதாயம் குறள் சமுதாயமாக மலரட்டும்! என்று கூறி விடைபெறுகிறேன்.

Related Stories

Related Stories