அரசியல்

“அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிதான் மதுரை முருக பக்தர்கள் மாநாடு!” : இரா.முத்தரசன் கண்டனம்!

இந்து சமய அறநிலையத் துறை முன்னின்று, சர்வதேச முருக பக்தர்கள் மாநாடு நடத்தியது. இந்த நிலையில், இந்து முன்னணி, முருக பக்தர்கள் மாநாடு நடத்த வேண்டியதன் அவசியம் என்ன?

“அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிதான் மதுரை முருக பக்தர்கள் மாநாடு!” : இரா.முத்தரசன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் ஆதிக்க கொள்கைகொண்ட பா.ஜ.க, தமிழ்நாட்டில் காலூன்ற இயலாததற்கு, தமிழ் மக்களின் சமூகநீதி கொள்கை முக்கிய காரணமாக இருக்கிறது.

அதனால், வட மாநிலங்களில் பா.ஜ.க செயல்படுத்தும் உத்திகள் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது என்பதை உணர்ந்து, முருகரை வைத்து அரசியல் செய்ய திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க.

இதனைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், “நாளை மறுநாள் (22.06.2025) மதுரை மாநகர் வண்டியூரில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதன் தயாரிப்பு பணிகள் முழுவதும் அரசியல் கண்ணோட்டத்துடன் அமைந்து இருக்கிறது.

இயல்பான முருக பக்தர்கள் ஆண்டுதோறும் தை பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில், முருக வழிபாட்டுக்காக, அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆறுபடை வீடுகளுக்கு நடைபயணம் மேற்கொண்டு வருவது நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றது.

கோயில்களில் திரளும் பக்கதர்களுக்கான அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலையத் துறையும், அந்தந்த ஆலய நிர்வாகமும் செய்து தருகின்றன.

ஆன்மீக நம்பிக்கை கொண்ட பக்தர்கள், நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கு வழிநெடுக அன்னதானம் வழங்குவது, தண்ணீர் பந்தல் அமைத்து உதவுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பழனிமலையை நோக்கிச் செல்லும் சாலைகளில் உள்ளாட்சி அமைப்புகளும், நெடுஞ்சாலைத்துறையும் சாலையோரங்களில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தனி வழித்தடம் அமைத்துள்ளன.

“அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிதான் மதுரை முருக பக்தர்கள் மாநாடு!” : இரா.முத்தரசன் கண்டனம்!

சென்ற 2024 ஆகஸ்டு 24, 25 தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறை முன்னின்று, சர்வதேச முருக பக்தர்கள் மாநாடு நடத்தியது. இந்த நிலையில், இந்து முன்னணி, முருக பக்தர்கள் மாநாடு நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? கடந்த 1981 ஆம் ஆண்டில் தென் மாவட்டங்களில் தீண்டாமையும், சாதி ஆதிக்கமும் அடக்குமுறை தாக்குதல்கள் தீவிரமாகியபோது, மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நிகழ்ந்தது.

இந்த நிகழ்வில் அரசியல் ஆதாயம் தேட ஆர்எஸ்எஸ் ராமகோபாலன் இந்து முன்னணி அமைப்பை உருவாக்கினார். இது ஆரம்ப நாளில் இருந்து மதவெறி அரசியலை முன்னெடுத்து மக்களிடம் வெறுப்பு அரசியலை பரப்புரை செய்து வருவதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

ராம ஜென்மபூமி, - பாபர் மசூதி விவகாரத்தை பயன்படுத்தி, வட மாநிலங்களில் அரசியல் ஆதாயம் அடைந்தது போல, தென் மாநிலத்தில், குறிப்பாக தமிழ்நாட்டில் “முருகனை” பயன்படுத்தி அரசியல் களத்தில் ஆதாயம் தேடும் முயற்சியாகவே மதுரை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டையொட்டி, பாஜகவின் மாநிலத் தலைவர், இந்து முன்னணி தலைவர்கள் , அன்றாடம் மாநில அரசின் மீதும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுகழகம் மீதும், முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் மீதும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவது அவர்களது அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது.

முருக பக்தர்களின் ஆன்மீக உணர்வை, நம்பிக்கையை அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தும் இந்து முன்னணியின் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், அரசியல் ஆதாயம் தேடும் குறுக்கு பார்வை கொண்டவர்களின் முருக பக்தர்கள் மாநாட்டை தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக நிராகரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு, அனைத்துப் பகுதி பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறது” என தனது அறிக்கை வழி, தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories