ஒன்றிய பா.ஜ.க அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து, மதுரையில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள்!
ஏழை - எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு நெருக்கமான கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கடன் வழங்குவதில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், உழவர்கள் - மாணவர்கள் உள்ளிட்டோரின் கடன் தொடர்பாகக் கெடுபிடியான நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஏழை-எளிய மக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்காக வங்கியில் கடன் பெறுவதற்குத் தங்களிடமுள்ள தங்க நகைகளையே நம்பியுள்ள நிலையில், கடனில் உள்ள நகைகளை மறு அடகு வைப்பதற்கு முழுத் தொகையையும் கட்ட வேண்டும் என்றும், அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளின் உரிமை குறித்த ஆவணம் கட்டாயம் என்றும், தங்க நகையின் மதிப்பில் 75% மட்டுமே கடனாக வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ள கட்டுப்பாடுகள் இந்தியாவில் வாழும் ஏழை-எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கக்கூடியதாகும்.
குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகளுக்குப் பதில், அதிக வட்டி வசூலிக்கும் தனியார் முதலாளிகளுக்கு லாபம் தரக்கூடிய இந்தக் கெடுபிடிகளை, ஒன்றிய அரசு வலியுறுத்தி, ரிசர்வ் வங்கியைத் திரும்பப் பெறச் செய்து, பழைய முறையிலேயே தங்க நகைக் கடன் பெற ஆவன செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்! மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் கல்வி நிதி ரூபாய் 2,152 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பா.ஜ.க. அரசின் நிலைப்பாட்டை, இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் அவர்கள் பிரகடனப்படுத்தி எச்சரிக்கை செய்துள்ளார்.
ஒத்திசைவுப் பட்டியலிலுள்ள கல்வித்துறையை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்ய நினைக்கும் ஒன்றிய அரசுக்கும் அது வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கும் எதிரான சட்டப்போராட்டத்தையும் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் அவர்கள் தொடங்கியிருக்கிறார்.
பாரபட்சமாகச் செயல்படும் ஒன்றிய அரசை இந்தப் பொதுக்குழு கண்டிக்கிறது. அதோடு, 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக்கூடிய வரிவருவாய்ப் பங்கினை 41% -ஆக வழங்காமல், 33.16% மட்டுமே வழங்கும் ஒன்றிய அரசைக் கண்டிப்பதோடு, முதலமைச்சர் அவர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தியபடி, வரிப் பகிர்வின் பங்கை 50%-ஆக உயர்த்திட வேண்டும் எனவும் இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது!
தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக!
பள்ளிகளில் மும்மொழித் திட்டம், ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தி ஆதிக்கம், ஒன்றிய அரசு நிறுவனங்களில் மாநில மொழிகளுக்கு இடமின்றி இந்தி பேசுவோரையே நியமிப்பது, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு இந்தி - சமஸ்கிருதப் பெயர்கள் என எல்லா வகையிலும் இந்தித் திணிப்பை பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருவது இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட மொழி - பண்பாட்டிற்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியதாகும்.
இந்தி மொழித் திணிப்பால் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவில் 52 மொழிகள் அழிந்து விளிம்பு நிலையில் உள்ளன என்றும், இந்தி பெல்ட்டு பகுதியில் 25 மொழிகள் அழிந்து போயின என்றும், வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூபாய் 1488 கோடியும், எட்டு கோடி மக்கள் பேசும் தமிழுக்கு ரூபாய் 74 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது என்றும் ஒன்றிய அரசை எதிர்த்துக் கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து கண்டித்து வருகிறார்.
ஒன்றிய அரசின் 97 துறைகளில் வெறும் 16 துறைகளில் மட்டும்தான் இந்தியும், ஆங்கிலமும் உள்ளன. மற்ற துறைகளில் இந்தி மட்டும் ஆட்சி செய்கிறது. இந்தச் சூழலில் மேலும் இந்தித்திணிப்பை மேற்கொண்டு, மொழிச் சமத்துவத்தை அழித்து, மீண்டும் ஒரு மொழிப் போரை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இதனை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் உறுதியுடன் எதிர்த்து நின்று, தமிழை மட்டுமின்றி அந்தந்த மாநில மொழிகளின் உரிமையையும் நிலைநாட்டும் செயல்பாடுகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும்.
இந்தியையும் அதன் அடுத்த கட்டமாக சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சி செய்யும் ஒன்றிய அரசினைக் கண்டிக்கிறது.
கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
தமிழ்மொழி - தமிழ்ப் பண்பாடு ஆகியவை காலத்தால் முந்தையவை என்பதை அகழாய்வுகளும் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன. 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தாதிலிருந்து இரும்புப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைத் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்கிற வரலாற்று உண்மை இன்றைய நவீன அறிவியல் ஆய்வுகள் மூலமாக நிறுவப்பட்டிருப்பதைத் தமிழ்நாடு அரசு ஆதாரப்பூர்வமாக வெளியிட்டும்கூட, அதற்கு இந்தியப் பிரதமரோ, இந்திய தொல்லியல்துறையோ வாழ்த்துகூட தெரிவிக்கவில்லை.
இந்தப் பொதுக்குழு நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வுகளின் அடிப்படையில் தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதற்கான தரவுகள் கிடைக்கப்பெற்று அவை உலகளாவிய ஆய்வு நிலையங்கள் மூலமாகவும் நிறுவப்பட்டிருப்பதைத் தொல்லியல் துறை சார்பில் அதன் அதிகாரியாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்து ஆண்டுகளாகியும் அதனை ஏற்காமல், திருத்தங்கள் தேவை என ஒன்றிய அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருப்பது, தமிழ் மீதும் தமிழர்களின் பண்பாட்டின் மீதும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குள்ள வன்மத்தையே காட்டுகிறது.
தங்களின் பொய்யான - கற்பனையான சமஸ்கிருத - சரஸ்வதி ஆற்று நாகரிகத்தை, தமிழர்களின் வைகை ஆற்று - கீழடி ஆய்வுகள் உண்மைத்தரவுகளுடன் மிஞ்சிவிட்டன என்ற காழ்ப்புணர்விலிருந்து ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிவந்து, கீழடி ஆய்வறிக்கையை ஏற்று, இந்தியாவின் பெருமைமிகு நாகரிகமாகத் தமிழரின் நாகரிகத்தை அறிவிக்க வேண்டும் என இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
கீழடி தமிழரின் தாய்மடி! பரந்துபட்ட பார்வையோடு - அறிவியல் பூர்வமாக எங்களது தொன்மையை நிறுவுகிறோம். இதில் ஆணவ - ஆதிக்க அரசியல் செய்ய நினைத்தால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒன்றிய பா.ஜ.க. அரசை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது!
இரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்!
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்பு இரயில்வேக்கு என இருந்த தனி பட்ஜெட்டை ஒழித்துக் கட்டியதுடன், பல்வேறு வகையிலும் தமிழ்நாட்டிற்குரிய இரயில்வே திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதையும், பல இரயில்வே திட்டங்களுக்குக் குறிப்பாக, புதிய பாதை மற்றும் இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருந்ததையும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டி இருந்தன.
தெற்கு இரயில்வேக்குத் தனித்தனியாக எவ்வளவு ஒதுக்கீடு என்கிற விவரம் மறைக்கப்பட்டதுடன், மறுக்கப்பட்டும் உள்ளது என்பது கண்டனத்துக்கு உரியது.
ஏற்கெனவே, சர்வே முடிந்து பட்ஜெட்டில் சேர்க்கப்பட்ட ஆவடி, திருப்பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை புதிய பாதைத் திட்டம் பட்ஜெட்டில் இருந்து எடுக்கப்பட்டு சர்வே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் வெறும் ரூ. 1.5 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
காட்பாடி-விழுப்புரம், கரூர்-திண்டுக்கல், ஈரோடு-கரூர்- சேலம் ஆகிய மூன்று திட்டங்களுக்கும் குறைந்த நிதி ஒதுக்கீடு, திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, திண்டிவனம்-நகரி, அத்திப்பட்டு-புத்தூர், மொரப்பூர்-தருமபுரி, ஈரோடு-பழனி ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடே இல்லாத நிலை என்று தமிழ்நாட்டிற்கான இரயில்வே திட்டங்களைப் புறக்கணித்து வரும் ஒன்றிய அரசுக்கு வன்மையான கண்டனத்தை இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!
அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்வதையும், சிறுபான்மைச் சமூகங்களை அவதூறு செய்வதையும், இந்திய சமூகத்தை மதரீதியாகப் பிரிப்பதையும் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிப்பதையும் நோக்கமாக கொண்ட பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசின் வக்பு சட்டதிருத்த மசோதா நிறைவேற்றத்தை, தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
வக்பு திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டபோது, அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன் சட்ட விரோதப் பகுதிகளை எடுத்துரைத்து, வக்பு சட்டத் திருத்தத்தின் உள்நோக்கத்தைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதநல்லிணக்க குரல்களின் எதிர்ப்பை மீறி வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்ப்பதாகும் என்பதால், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் மேலும் சில அமைப்புகள் மூலம் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. நள்ளிரவிற்குப்பின் நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மறுநாள் காலையிலேயே அதனைக் கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றினார் முதலமைச்சர் அவர்கள்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மண்ணில், ஒரு மதத்தை மட்டும் குறி வைத்துக் கொண்டு வரப்பட்ட இச்சட்டமானது, அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-ஐ மீறும் சட்ட வடிவம் என்பதாலும், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இருப்பதாலும், மதச் சுதந்திரத்தை நிராகரிக்கும் தன்மை கொண்ட, மத நல்லிணக்கத்திற்கு எதிரான இச்சட்டத்தை (The Waqf (Amendment) Act, 2025) முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, தி.மு.க. ஆட்சியின் ஊழல் முறைகேடுகள் போல அரசியல் களத்தில் சித்தரிப்பதற்கான உள்நோக்கத்தோடு டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய அத்துமீறிய சோதனைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அமலாக்கத்துறை தன் வரம்பை மீறிச் செயல்பட்டிருப்பதைக் கண்டித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு சுட்டிக்காட்டி உத்தரவிட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை விதித்திருப்பதே ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியல் உள்நோக்கத்துடன் தன்னிடமுள்ள விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்பதை நிரூபித்துள்ளது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஒன்றிய பா.ஜ.க. அரசு அந்த ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டினாலும், அதற்கு அடிபணியாமல், “அமித்ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது” எனக் கூறி, “தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு out of control” என்று துணிச்சலுடன் கழகத் தலைவர் அவர்கள் முழங்கியுள்ளார்.
தி.மு.க.வை ஏற்கெனவே, பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை புறக்கணித்து விட்டு, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத - ஆட்சிக்கு வர முடியாத மாநிலங்களில், பழிவாங்கல் எண்ணத்துடன் சிறப்புப் புலனாய்வு அமைப்புகளான சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை பா.ஜ.க. அரசு தனது சொந்த ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் சர்வாதிகாரப் போக்கை இப்பொதுக்குழு கடுமையாகக் கண்டிக்கிறது.
மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகள்!
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில் மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம் அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்க புனலாய்வு அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கான கைப்பாவைகளாக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டம், மன்னார் வளைகுடா ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறுகள் அமைத்தல், தமிழ்நாட்டின் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு எனத் திட்டமிட்ட வஞ்சகங்களும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்துதல், அரசியல் எதிரிகள் மீது வெறுப்பு பரப்புரைப் பேச்சுகளை உமிழ்தல், பொய் வழக்குகள் பாய்ச்சுதல், அரசு எந்திரங்களைச் சட்ட மீறலாகப் பயன்படுத்தி மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுத்தல், ஒன்றிய அரசின் இலஞ்ச - ஊழல்களை ஆதாரத்துடன் எதிர்த்து எழுதும், பேசும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்குகள், சிறை போன்ற அநீதிகளுமே தொடர்வதால், இத்தகைய சர்வாதிகாரப் போக்கை நடத்தி வரும் பா.ஜ.க. அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக!
ஒன்றியத்தில் 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு பொற்றுப்பேற்றதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அடிக்கடி இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதும், அவர்களுடைய படகுகள், தொழிற்கருவிகள் உள்ளிட்ட உடைமைகள் பறிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன.
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டின் கடலோர மீனவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு குறித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, மீனவர்கள் நலன் காக்கும் திட்டங்களைச் செயல்படுத்தாததால், அண்மைக் காலத்தில் 40-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளை இலங்கைக் கடற்படையினர் உடைத்துக் கடலில் மூழ்கடித்துள்ளனர்.
மீனவர் பிரச்சினைகளில் தக்க கவனம் செலுத்தித் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுத்துத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக, இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ஒன்றிய அரசு ஏற்று, கச்சத்தீவை மீட்டிட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!
சாதிவாரிக் கணக்கெடுப்பே, கல்வி, பொருளாதாரம் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைத்துச் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டிற்கான புள்ளிவிவரங்களாக இருப்பதால், நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதங்கள் வாயிலாகவும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் மூலமாகவும், பொதுக் கூட்டங்கள், மடல்கள், அறிக்கைகள் வாயிலாகவும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தத் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
தற்போது பீகார் மாநிலத் தேர்தல் உள்ளிட்டவற்றை மனதிற்கொண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தக் கணக்கெடுப்பை முறையாகவும் விரைவாகவும் முழுமையாகவும் நடத்தி மக்களுக்கு அதன் அடிப்படையில் சமூகநீதி வழங்கிடவும் - கிரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை 25 இலட்ச ரூபாயாக உயர்த்திடவும், ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது!
தமிழ்நாட்டில் தற்போது 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, தமிழ்நாட்டில் 8 தொகுதிகளைக் குறைப்பதற்கான அபாயம் உள்ளது. அதே நேரத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் தொகுதிகளை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதனைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட ஒருமித்த உணர்வை வெளிப்படச் செய்ததுடன், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தைச் சென்னையில் சிறப்பாக நடத்தினார்.
தொகுதி மறுவரையறை செய்வதை மேலும் 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் என்பதையும், எந்தவொரு மாநிலத்திற்கும் நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள பிரதிநிதித்துவ விகிதத்தில் மாற்றம் ஏற்படுத்தாதவாறு தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்.
ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான கழகத் தலைவருக்குப் பாராட்டு!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கும், ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் ஆர்.என். ரவி காலம் தாழ்த்தியும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தும், தன் அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மாண்பமை உச்சநீதிமன்ற அமர்வு, 10 மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்பதை உறுதிசெய்தது.
ஆளுநரிடம் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த இந்த மகத்தான தீர்ப்புக்கான வழக்கைத் தொடுத்து வெற்றி கண்டு, மாநில உரிமைகளை நிலைநாட்டிய இந்தியாவின் ஜனநாயகக் காவலராம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.
குடியரசுத் துணைத் தலைவரின் விமர்சனத்திற்குக் கண்டனம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கிடப்பில் போட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் அவர்கள் முடிவெடுக்க வேண்டும்.
அப்படி முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் பேராணை (Writ) மனு தாக்கல் செய்ய முடியும் எனத் தீர்ப்பு வழங்கியது. ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பே பெரியது என்பதையும், நியமனப் பதவியான ஆளுநர் பதவிக்குச் சட்டமன்ற முடிவுகளை நிறுத்தி வைக்கும் அதிகாரமில்லை என்பதையும் வலியுறுத்தி, அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காத்துள்ள இந்த மகத்தான தீர்ப்பு குறித்து, உள்நோக்கம் கொண்ட விமர்சனப் பார்வையுடன், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்பிற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு இப்பொதுக்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
ஆளுநர் அதிகாரம் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கான காலக்கெடு ஆகியவை தொடர்பாக உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினைத் தொடர்ந்து, 14 கேள்விகளை முன் வைத்து மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதியதன் மூலம், உச்ச நீதிமன்றத்துடனான மோதல் போக்கிற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு வழிவகுக்கிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஜனநாயக அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஒன்றிய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்திய அரசமைப்பின் இறுதி விளக்க உரையாளரான உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை நோக்கி சவால் விடும் போக்கை ஒன்றிய அரசு கடைப்பிடிப்பதாக இப்பொதுக் குழு கருதுகிறது.
அரசியல் சட்டத்துக்கு உரிய மதிப்பளித்து அதன்வழி தரப்பட்ட தீர்ப்பை மதித்து நடக்காமல், மாநிலங்களுக்குப் பிரச்சினை தரக் குடியரசுத் தலைவர் மூலம் முயற்சிக்கும் ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக!
மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனித்துவமான பண்பாடு, மொழி, வரலாறு இருக்கிறது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்க மறுப்பது, யு.ஜி.சி. விதிமுறைகள்படி துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் பங்களிப்பை நிராகரிப்பது உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் போக்கு கல்வியைச் சீரழிக்கும் தன்மை கொண்டவையாகும்.
அரசியல் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமைகளுக்கு மாறாக, ஒன்றிய பா.ஜ.க. அரசு கல்வியில் பிற்போக்குத்தனம் மற்றும் சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிக்கிறது. இந்நிலையில், கல்விக் கொள்கை என்பது அந்தந்த மாநிலங்களைச் சார்ந்த விஷயமாகும் என்றும், அதில் நீதிமன்றம் நேரடியாகக் கட்டாயப்படுத்தி தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தக் கட்டாயப்படுத்தி மாநில அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும்; அரசியலமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவு மீறப்பட்டாலொழிய நாங்கள் இதில் தலையிட முடியாது என்றும் கூறி பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பை வரவேற்பதுடன், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வர வேண்டும் என இப்பொதுக்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
மலரட்டும் மாநில சுயாட்சி!
கூட்டாட்சித் தன்மை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வழியே மாநிலங்களுக்கான சுயாட்சித் தன்மை முழுமையாகக் கிடைக்கும்போதுதான் இந்திய ஒன்றியம் வலிமையானதாக இருக்கும் என்பதை அரசியல் சட்ட வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தி.மு.க.வின் உயிர் மூச்சான - அரசியல் கொள்கையான மாநில சுயாட்சி பற்றி ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, அதன் பரிந்துரைகள் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1974-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர்.
‘மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி’ என்கிற கழகத்தின் முழக்கம் அரை நூற்றாண்டு கடந்த நிலையில், 1983-ஆம் ஆண்டு சர்க்காரியா தலைமையிலான ஆணையம், 2004-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி புஞ்சி தலைமையிலான குழு ஆகியவற்றின் அறிக்கைகளைப் பெற்றும் மாநில உரிமைகள் மீட்கப்படாத நிலையில், இந்தியாவைத் தற்போது ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களின் மிச்சமிருக்கும் உரிமைகளைப் பறிப்பதுடன், இந்தியாவில் மாநிலங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். கருத்தியலின் அடிப்படையில் செயல்பட்டு வருவதால், நம் அரசியல் சட்டத்தின் கூற்றுப்படி, மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவில் மாநிலங்களைப் பாதுகாத்து, தன்னாட்சி உரிமை பெற்றிடவும், உரிய நடவடிக்கைகளுக்குப் பரிந்துரை செய்யவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அசோக்வர்தன் ஷெட்டி, ஐ.ஏ.எஸ் (ஓய்வு)., பேராசிரியர் மு.நாகநாதன் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக்குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் தன்னாட்சி உரிமை பெற்றிடச், சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் மூலம் மாநில சுயாட்சி கருத்தியலுக்குச் செயல் வடிவம் கொடுத்திட உயர்நிலைக் குழுவை நியமித்த தமிழ்நாடு அரசுக்கு இப்பொதுக்குழு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.