ஒன்றிய அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சி தலைவர்களை புலனாய்வு அமைப்புகள் மூலம் தொடர்ச்சியாக பழிவாங்கி வருகிறது மோடி அரசு. பா.ஜ.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீது அதிகமான விமர்சனம் வைத்து வந்த ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு நூறு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், சிவசேனா எம்.பி. சஞ்சய் ரௌத் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. தற்போது நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தியை பழிவாங்க ஒன்றிய பா.ஜ.க அரசு வளம்வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ”அமலாக்கத்துறை கடந்த 9ஆம் தேதிதான் வழக்குப் பதிவு செய்துள்ளது. வெறும் 11 நாள்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்து அமலாக்கத்துறை அதிகார வரம்பை மீறியுள்ளது. புகார் என்னவென்று அறிந்தால் எனக்கு கொடுங்கள், தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
ஏ.ஜே.எல். ஆன்லைன் மூலம் 3 பத்திரிகை நிறுவனங்களை நடத்துகிறது. சில இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களையும் நடத்துகிறது. எங்கு உள்ளது குற்றம்? குற்றம் நடக்க என்ன வழி உள்ளது? பண மோசடி நடந்துள்ளதற்கான ஆதாரம் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.