பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பாஜக அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது மீண்டும் மும்மொழி கொள்கை என இந்தியை திணிக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது.
புதிய கல்வி கொள்கையில் மூன்றாம் மொழியாக ஏதும் ஒரு இந்திய மொழி என்று சொல்லப்பட்டாலும, ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுக்க மட்டுமே நிதி ஒதுக்கி வருகிறது. இதனால் இதுவும் இந்தி திணிப்பு என்று விமர்சனம் எழுந்துள்ளது.
அதனை உண்மை என நிரூபிக்கும் வகையில் மகாராஷ்டிராவில் மூன்றாம் மொழியாக இந்தி கட்டாய பாடமாக கற்றுத்தரப்படும் என்று அம்மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிர பாஜக அரசு கொண்டுவந்த மூன்றாம் மொழியாக இந்தி கட்டாயம் என்ற அறிவிப்புக்கு அம்மாநில அரசு நியமித்த மொழி குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து மொழி குழு முதல்வர் பட்னாவிசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், " தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும், மேலும் மும்மொழிக் கொள்கையை உயர்நிலைப் பள்ளி நிலையிலிருந்து மட்டுமே செயல்படுத்த வேண்டும். இந்தி மொழி குறித்த கட்டாய முடிவு தேவையற்றது. தற்போது பெரும்பாலான பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் இருப்பதால் பள்ளிக் கல்வியில் மராத்தி மற்றும் ஆங்கில மொழியின் தரம் மோசமாக உள்ளது. மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது ஆசிரியர்களின் சுமையை அதிகரிக்கும், மேலும் இந்த செயல்பாட்டில் ஒரு மொழியை முறையாகக் கற்கும் வாய்ப்பு குறையும்" என்று கூறப்பட்டுள்ளது