அரசியல்

“எதிர்க்கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் துணிச்சலற்ற ஒன்றிய பா.ஜ.க!” : டி.ஆர்.பாலு கண்டனம்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு தி.மு.க கண்டனம்.

“எதிர்க்கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் துணிச்சலற்ற ஒன்றிய பா.ஜ.க!” : டி.ஆர்.பாலு கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றியத்தில் ஆட்சி வகிக்கும் பா.ஜ.க அரசு, தங்களது அரசியல் எதிரிகளை கருத்தியல் ரீதியாக வெல்ல இயலாது என்பதை உணர்ந்த காரணத்தால், அவதூறுகளை பரப்புவது, அமலாக்கத்துறை போன்ற விசாரணைக் குழுக்களை எதிர்க்கட்சிகள் மீது ஏவி விடுவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாகவே, தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது பதியப்பட்டிருக்கிற, அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையும் அமைந்துள்ளது.

இது குறித்து, தி.மு.க பொருளாளரும், மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கை, பின்வருமாறு,

“ஒன்றிய பா.ஜ.க. அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக - நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குஜராத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றி நடைபெற்ற கருத்துருவாக்கமும் - காங்கிரஸ் தொண்டர்களின் எழுச்சியும் பா.ஜ.க.வை மிரள வைத்திருக்கிறது போலிருக்கிறது. கடந்த முறை சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற போது அமலாக்கத்துறை மூலம் அம்மாநில காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

“எதிர்க்கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் துணிச்சலற்ற ஒன்றிய பா.ஜ.க!” : டி.ஆர்.பாலு கண்டனம்!

இப்போது குஜராத் எழுச்சிக்குப் பிறகு, அதே பாணி அரசியலை கையிலெடுத்து - காங்கிரஸ் அகில இந்திய தலைவர்கள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. வஃக்பு திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராகக் காங்கிரஸ் உறுதியாக நின்று எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வாக்களிக்க வைத்துள்ளதும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத திட்டங்களை - தோல்விகளை - மக்களிடம் எடுத்துச் செல்கின்ற காங்கிரஸ் கட்சியைப் பார்த்து பா.ஜ.க. மிரட்சியில் இருக்கிறது. அதனால்தான் அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியைச் சுற்றிச் சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. இப்போது அதன் தலைவர்களான திருமதி. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் விட்டு வைக்கவில்லை!

காங்கிரஸ் போன்ற பிரதான எதிர்க்கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் துணிச்சலற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு, இப்படி அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளைக் காங்கிரஸ் கட்சி மீது ஏவி விடுவது - ஜனநாயகத்தில் அருவருக்கத்தக்க அரசியல் மட்டுமல்ல! யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத வெட்கி தலைகுனிய வேண்டிய அரசியல் பழிவாங்கும் செயலாகும்!

ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமலாக்கத்துறையைத் தனது கூட்டணிக் கட்சியாகச் சேர்த்துக் கொண்டு இப்படி பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒன்றிய அரசு இனிமேலாவது காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல - எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாகவே சந்திக்கும் துணிச்சலைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

banner

Related Stories

Related Stories