உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா திருவிழா நடப்பாண்டில், கோடிக்கணக்கான மக்கள் திரளுடன் நடந்து வருகிறது.
இந்நிலையில், கோடிக்கணக்கான மக்களின் வருகையை அறிந்தும் பா.ஜ.க அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கிய பிரமுகர்களை காட்சிப்படுத்துவதையே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது, கும்பமேளாவில் நடந்த கூட்டநெரிசல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் வழி அம்பலமாகியுள்ளது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை மற்றும் இதர அரசியல் தலைவர்கள் வருகை என அவர்களுக்கு வசதி செய்யும் நோக்கில், கோடிக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கையை கண்டுகொள்ளாமல் விட்டதும், பா.ஜ.க.வின் பாதுகாப்பு மேலாண்மை தோல்வியை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசின் மீது பொது நல வழக்கு தொடுத்துள்ளார்.
அவர் தொடுத்துள்ள வழக்கில், “மகா கும்பமேளா நிகழ்வுக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகை இருக்கும் என அறிந்து அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்க வேண்டும். இனியாவது முன்னெடுக்க வேண்டும்.
முக்கிய பிரமுகர்களின் வருகை பொதுமக்களின் மக்களின் வருகைக்கு எவ்விதத்திலும் இடையூறாக இருக்க கூடாது. 1954 கும்பமேளாவில் இருந்து கூட்டநெரிசலில் சிக்கி நேரிடும் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது.
இதற்கு உத்தரப் பிரதேச அரசின் நிர்வாக தோல்வியே காரணமாக அமைந்துள்ளது. ஒன்றிய அரசும், மாநில அரசும் இதற்கு தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.