டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி 5ஆம் நாள் நடைபெறும் என்றும், பிப்ரவரி 8ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் மும்முனையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அப்பகுதியில் தேர்தல் விதிமுறை மீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, கடந்த இரு வாரங்களில் சுமார் 504 வழக்குகளை தேர்தல் விதிமுறை மீறலீன் அடிப்படையில் பதிவுசெய்துள்ளது டெல்லி காவல்துறை.
இதுவரை, சுமார் 270 உரிமம் பெறாத ஆயுதங்கள், ரூ.1.3 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இரு வாரங்களில் சுமார் 17,879 நபர்கள் தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் தலைநகராக டெல்லி விளங்கும் வேளையில், இத்தகைய முறைகேடுகள் அங்கு அரங்கேறி வருவது, தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது.