மக்களவையில் நேற்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில், “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது.
அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அமைச்சர் அம்திஷாவின் இப்பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும் இவரது பேச்சை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,”அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு பா.ஜ.கவினர் எதிரானவர்கள். அரசியலமைப்பு சாசனத்தையும், அதனை உருவாக்கிய அம்பேத்கரையும் முடிவுக்கு கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க அரசு பணியாற்றுகிறது. இதை மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.
அதேபோல், அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.