அரசியல்

தனி மனித உரிமைகளில் மூக்கை விடும் பா.ஜ.க : அதிகரிக்கும் கண்டனங்கள்!

பா.ஜ.க இயற்றுகிற சட்டங்களிலும், ஒன்றிய அரசின் விசாரணை குழுக்களின் நடவடிக்கைகளிலும், மீறப்படும் தனி மனித உரிமை மீறல்கள்!

தனி மனித உரிமைகளில் மூக்கை விடும் பா.ஜ.க : அதிகரிக்கும் கண்டனங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள, அடிப்படை உரிமைகளில் ஒன்றான, தனிமனித உரிமையை பறிப்பதில், பா.ஜ.க.வின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கிறது.

எதிர்கட்சிகளின் தலைவர்கள் சமுதாய வளர்ச்சிக்கு வித்திட, அதனை ஒட்டுக்கேட்டு வளர்ச்சிக்கு தடை விதிக்கும் விதமாக பெகாசஸ் உளவு (Pegasus Spyware) பார்த்தது அம்பலமாகி உலக அளவில் எதிர்ப்புகளை சந்தித்த நிலையில், உளவு பார்ப்பதையே சட்டமாக்கியுள்ளனர் பா.ஜ.க.வினர்.

அவ்வாறு கடந்த ஆண்டு, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை, அவைக்குள் நுழைய விடாமல், பெரும்பான்மை கொண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் தான், தொலைத்தொடர்புச் சட்டம், 2023.

இச்சட்டத்தின் வழி, ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு, அரசியல் தலைவர்களை மட்டுமல்லாது, பொதுமக்களையும் உளவு பார்க்கும் அதிகாரம் பெற்றது.

இவ்வதிகாரத்தின் வழி, அவசர நடவடிக்கை என்ற நாடகத் தலைப்புடன், பொது மக்களாக இருந்தாலும் சரி, தலைவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் தொலைபேசி உரையாடல்கள், குறுஞ்செய்திகள் அனைத்தையும், ஒன்றிய பா.ஜ.க பார்க்கவும், முடக்கவும் இயலும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நடவடிக்கை, மக்களாட்சிக்கும், இந்திய அரசியலமைப்பிற்கும் முற்றிலும் எதிரானது என்றாலும், அது சட்டப்படி சரியே என்ற நிலை, சர்வாதிகாரத்தின் அடிப்படையை உணரவைத்தது.

இதற்கு இந்திய அளவிலும், உலக அளவிலும் பலர் விமர்சித்த நிலையிலும், அதனை வழக்கம் போல கேட்டும் கேட்காதது போல், மழுப்பி சென்று வருகிறது பா.ஜ.க.

இவை தவிர்த்து, இந்திய மக்கள் எவற்றை பார்க்க வேண்டும், வேண்டாம் என்று தீர்மானிக்கும் இடத்திலும் ஒன்றிய பா.ஜ.க அரசே இருக்கிறது.

எடுத்துக்காட்டாக, அண்மையில் BBC ஊடகம் வெளியிட்ட, 2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியின் பங்கு இன்றியமையாத இடத்தை பெற்றுள்ளது என்ற தொடரை, இந்திய மக்கள் காணாதவாறு தடையிட்டது.

விவசாயிகளின் போராட்டங்கள் வலுத்தபோது, சமூக வலைதளங்களில் ஒன்றிய பா.ஜ.க.விற்கு எதிரான பதிவுகளை, இந்திய மக்கள் காணாதவாறு தடையிட்டது.

இதற்கு, உலகளாவிய மக்கள் பயன்படுத்தும், X (twitter) சமூக வலைதள நிறுவனமும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், பா.ஜ.க.வின் பல உளவு வேலைகள் அம்பலப்பட்டு போகிறதே என்று அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை குழுக்களை ஏவ விட்டு, விசாரணைக்காக தகவல் வேண்டும் என புதிய முறையில் ஊடுருவ கங்கணம் கட்டி திரிந்து வருகிறது பா.ஜ.க.

அவ்வாறு, அமலாக்கத்துறை கொண்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, தகுந்த ஆதாரமற்ற நிலையிலும் கைது செய்து, ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசிற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் என்னென்ன உத்திகளை வைத்துள்ளார் என கண்டறிய, அவரது கைபேசி தகவல்களை களவாட, அமலாக்கத்துறை மூலம் ஆப்பிள் நிறுவனத்தை நாடியது ஒன்றிய பா.ஜ.க.

எனினும், ஆப்பிள் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் தரும் நிறுவனம் என்பதால், தகுந்த கடவுசொல் இல்லாமல், கைபேசியை திறக்க இயலாது என கைவிரித்துள்ளது.

இதனால், தனி மனித உரிமைகளில் நுழைக்கப்படும் பா.ஜ.க.வின் மூக்கு உடைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஒரு தனியார் அமைப்பு நடத்திய கருத்தரங்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், “ED, IT போன்ற ஒன்றிய அமைப்புகள் விசாரணை மேற்கொள்ளும் போது, அவர்களின் கைபேசி போன்ற உடைமைகளை கையகப்படுத்தும் செயல்களில் ஈடுபடாமல், தனிமனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிலிருந்து, ஐ.நா வரை அனைவரும் கண்டனம் தெரிவித்தும், தனது கோட்பாடுகளை மாற்றிகொள்ளாத, பா.ஜ.க.வின் எண்ணம் வெகு விரைவில் நொறுங்கி போகும் என்பது மக்களின் நடவடிக்கைகள் வழி வெளிப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories