அரசியல்

1980ல் இருந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க நிலைமை இது தான்... மோடியின் கபட வேஷம் கலையும் காலம் வந்துவிட்டது!

எல்லா காஸ்டியூமும் போட்டாச்சு. தோற்ற பிறகு போடும் காஸ்டியூம் என்னவாக இருக்கும்?!

1980ல் இருந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க நிலைமை இது தான்... மோடியின் கபட வேஷம் கலையும் காலம் வந்துவிட்டது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கபட வேஷம் கலையும் காலம்!

''இனிமேல் தி.மு.க. இங்கு இருக்க முடியாது. இனிமேல் திமுகவை தேடினாலும் கிடைக்காது" - என்று மாட்சிமை தாங்கிய மன்னர் பிரான் நரேந்திரமோடி அறிவித்திருக்கிறார். பராக் பராக்!

இதைக் கேட்கும் போதே 'பயமாக' (!) இருக்கிறது! சென்னைக்கு வருகை தரும் மோடியை வரவேற்று சைதாப்பேட்டையில் ஒருவர் வைத்துள்ள வரவேற்பு பலகையில், 'மந்திரவாதியே வருக!' என்று குறிப்பிட்டுள்ளார். மோடி பேசுவதைப் பார்த்தால் மந்திரவாதி பேசுவதைப் போலத் தான் இருக்கிறது. 'மந்திரத்தால் மாங்காய் பழுக்காது' என்பது கிராமத்து பழமொழி.

'புலிக்கு பயந்தவர் என் மீது படுத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வார்கள் அல்லவா? அப்படி இருக்கிறது.... தோற்கப் போகும் மோடி, தோல்வி பயத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

அதிகாரம் கண்ணை மறைத்த நிலையில் இப்படி அவர் பேசி இருப்பதற்கு, ஞானக் கண்ணை திறந்து வைக்கும் நிலையில் முதலமைச்சர் பதில் சொல்லி இருக்கிறார்கள்.'' திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. மே மாதத்துக்கு பிறகு பதவியை இழக்கப் போகும் மோடி, அதை ஓய்வுக்காலத்தில் படிக்கட்டும்.

பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவரது பாணியில் பாஜகவே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களை தலைவர் கலைஞர் அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பாஜகவுக்கு உண்டு. கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பாஜக, வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன்" என்பதாவது மோடி மனதைப் பக்குவப்படுத்துமா எனத் தெரியவில்லை.

நெல்லையில் இருந்து டெல்லி போன பிறகு நள்ளிரவு வரை நடந்த பாஜக தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், ''இந்தியா முழுவதும் இருந்து வரும் செய்திகள் நமக்குச் சாதகமாக இல்லை'' என்று வருத்தத்துடன் பேசப்பட்டதாமே! அப்படியானால், 'இருக்காது' என்ற வினைச்சொல் யாருக்குப் பொருந்தும்?!

இந்தியா முழுமைக்கும் பெரும்பாலான மாநிலங்களில் 'இந்தியா' கூட்டணி வலுவான அணிச்சேர்க்கைகளைச் செய்துள்ளது. இவர்களில் ஒரிரு மாநிலங்கள் தவிர அனைவருமே கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரிந்து இருந்து பாஜகவுக்கு நன்மை செய்தவர்கள். இப்போது ஒன்றாகச் சேர்ந்து ஆப்பு வைக்கத் தயாராகி விட்டார்கள். இது தான் டெல்லியில் நடந்த ரகசியக் கூட்டத்தில் நடந்த விவாதம் ஆகும்.

இப்படி அனைவரையும் ஒன்று சேர்த்த பெருமையும் மோடிக்குத் தான் உண்டு. விசாரணை அமைப்புகளை வேட்டைக்கு பயன்படுத்தியதன் பலன், அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். இதற்காக மோடிக்கு நன்றி சொல்லத் தான் வேண்டும்.

இப்படி ஒன்று சேர்ந்தாக வேண்டும் என்பதை முதலில் சொன்னவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 'பாஜகவை வீழ்த்துக்கும் அகில இந்தியக் கொள்கைக்கு உடன்படும் கட்சிகள், மாநில அளவில் கூட்டணியைச் செய்து கொள்ளுங்கள்' என்று முதலில் சொன்னவர் அவர் தான். அது தான் நடந்துள்ளது.

1980ல் இருந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க நிலைமை இது தான்... மோடியின் கபட வேஷம் கலையும் காலம் வந்துவிட்டது!

அவர் வரமாட்டார், இவர் வரமாட்டார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனைவரும் சேர்ந்தது தான் பிரதம மன்னருக்கு ஆத்திரம். அதற்கு காரணமானவர் என்பதால் திமுக தலைவர் மீது அதிகப்படியான கோபம் காட்டப்படுகிறது. திமுக இப்படி பலரைப் பார்த்து விட்டது. பக்குவப்பட்டு விட்டது. அதன் வலிமையை அதிகப்படுத்தியவர்களே அதன் எதிரிகள் தான்.

மோடிக்கு எட்டு வயது இருக்கும் போதே மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்று 'உதயசூரியன்' சின்னத்தை பெற்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். 1958 முதல் சின்னம் மாறாத கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம். சூரியனால் தாமரை கருகுமே தவிர, சூரியனை தாமரையால் எதுவும் செய்ய முடியாது. அழிச்சிடுவேன் பார், ஒழிச்சிடுவேன் பார் என்று கிளம்பியவர்கள் எல்லாம் ஆக வேண்டியது போல ஆனார்கள் அப்பனே!

ஐம்பதுகளில் திராவிட இயக்க ஒழிப்பு மாநாடுகளை நடத்திய ம.பொ.சி, அறுபதுகளில் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு சட்டசபைக்குள் போகும் தகுதியைப் பெற்றார். சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், காங்கிரஸ் கட்சிக்குள் சேர்ந்துவிட்டார். திராவிட இயக்கத்தை ஒழிக்க 'சக்கரவியூகம்' அமைத்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், விருகம்பாக்கம் திமுக மாநாட்டுக்கு வந்து உட்கார்ந்து கொண்டு, 'என் மீது இவ்வளவு பாசம் வைத்துள்ளீர்களா?' என்று உருகிய காட்சியைப் பார்த்தது தமிழ்நாடு. எழுபதுகளில் விலகிய எம்.ஜி.ஆர்., எண்பதுகளில் அதிமுகவை திமுகவுடன் இணைக்கும் பேச்சுவார்த்தையில் ஒரே சோபாவில் கலைஞரோடு உட்கார்ந்தவர் தான்.

கலைஞரை எதிர்ப்பதற்காகவே பத்திரிக்கை தொடங்கியவர் சோ. 1996 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயம் வாசலுக்கு வந்து நின்றதோடு அவரது கசப்புக் காய்ச்சல் முடிவுக்கு வந்தது. அதற்குப் பிறகு அவர் எழுதியவை அனைத்தும், காலநீட்டிப்புக்காக விட்ட மூச்சுப் பயிற்சிகளே!

இன்றைக்கு இணையத் தளங்களில் கொம்பு சுற்றிக் கொண்டிருக்கும் சங்கிக் குஞ்சுகளுக்குத் தெரியுமா? திமுக - அதிமுக முதுகில் ஏறித் தான் நாடாளுமன்ற சட்டமன்றங்களுக்குள் அக்கட்சி போனது என்பது?!

1980ல் இருந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க நிலைமை இது தான்... மோடியின் கபட வேஷம் கலையும் காலம் வந்துவிட்டது!

1980 இல் பாஜக உதயமானது. அதில் இருந்து தமிழ்நாட்டில் அதன் நிலைமை இது தான்...

* 1984 - நாடாளுமன்றத் தேர்தல் - ஒரு தொகுதியில் போட்டி - தோல்வி

* 1989 - நாடாளுமன்றத் தேர்தல் - 3 இடத்தில் போட்டி - தோல்வி

* 1991 - நாடாளுமன்றத் தேர்தல் - 15 இடத்தில் போட்டி - தோல்வி

* 1996 - நாடாளுமன்றத் தேர்தல் - 37 இடத்தில் போட்டி - அத்தனையிலும் தோல்வி

* 1996 - சட்டசபைத் தேர்தல் - பத்மநாபபுரம் தொகுதியில் மட்டும் வெற்றி

* 1998 - நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்தது - 5 இடத்தில் போட்டி - 3 இடத்தில் வெற்றி

* 1999 - நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்தது - 6 இடத்தில் போட்டி - 4 இடத்தில் வெற்றி

* 2001 - சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 21 இடத்தில் போட்டி - 4 இடத்தில் வெற்றி

* 2004 - நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 7 இடத்தில் போட்டி - அனைத்திலும் தோல்வி

* 2006 - சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டி - 225 தொகுதியில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி - 221 தொகுதிகளில் டெபாசிட் போனது.

* 2009 - நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணி - அனைத்திலும் படுதோல்வி

* 2011 - சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணி - அனைத்திலும் படுதோல்வி - 204 தொகுதியில் போட்டியிட்டு 198 இடங்களில் டெபாசிட் போனது.

* 2014 - மோடி பிரதமர் ஆன நாடாளுமன்றத் தேர்தல் - தேமுதிக,பாமக, மதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது - .... தொகுதியில் போட்டியிட்டு கன்னியாகுமரியில் பொன்னார் மட்டும் வென்றார்.

* 2016 சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையில் சிறு கட்சிகள் கூட்டணி - 180 தொகுதியில் போட்டியிட்ட பாஜக அனைத்திலும் டெபாசிட் இழந்தது.

* 2019 - நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி - 5 இடங்களில் போட்டியிட்ட பாஜக அனைத்திலும் தோல்வி.

* 2021 - சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டி - 4 இல் மட்டுமே வெற்றி.

- இதுதான் தமிழக பாஜகவின் தேய்மான வரலாறு. இப்படி ஒரு கட்சியை தமிழ்நாட்டில் வைத்துக் கொண்டு, 'திமுக இனி இருக்காது' என்று பேசுவதற்கு மோடிக்கு உண்மையில் தைரியம் வேண்டும்.

1980ல் இருந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க நிலைமை இது தான்... மோடியின் கபட வேஷம் கலையும் காலம் வந்துவிட்டது!

இதன் மூலம் நாம் உணர்வது, பிரதமர் யதார்த்தத்தில் இல்லை என்பதுதான். ஏதோ ஒரு கற்பனை லோகத்தில் அவரை வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. தமிழக பாஜகவுக்கு 18 சதவிகிதம் வாக்கு வந்துவிட்டது, 23 சதவிகிதமாகக் கூட அது ஆகலாம் என்று சொல்லும் கப்சாக்களை சங்கிக் குட்டிகள் நம்பலாம். பிரதமருமா நம்புவது? இவை அனைத்தும் 'பீம்சிங் கப்சாக்கள்' என்பார் பழைய எடிட்டர் ஒருவர். ' என்ன எழுதுவது என்று தெரியாத போது பில்டிங்கின் பீம் பார்த்தால் யோசனை வருமாம். அந்த கற்பனைகளை சிலர் எழுதுவார்கள்' என்பார் அவர். அத்தகைய 'பீம்சிங்' சர்வேக்களை வைத்துக் கொண்டு வாயாடக் கூடாது.

தமிழ்நாட்டில் பாஜக எப்போதுமே ஓட்டை தான். இங்கு ஓட்டு எடுக்க முடியாது. ஆனால் பாஜகவின் கோட்டை என்று சொல்லப்படும் வட மாநிலங்களிலேயே ஓட்டை விழுந்து விட்டது. அதைத் தான் நடக்கப் போகும் தேர்தலில் பார்க்கப் போகிறோம். 'இருக்காது பாஜக' என்று அங்கே சொல்ல ஆரம்பித்திருக்கின்றன 'இந்தியா' கூட்டணி கட்சிகள்.

எல்லா காஸ்டியூமும் போட்டாச்சு. தோற்ற பிறகு போடும் காஸ்டியூம் என்னவாக இருக்கும்?!

- ஊடகவியலாளர் ப.திருமாவேலன்.

banner

Related Stories

Related Stories