அரசியல்

புரூடா நாடகம் : அரைமணி நேரத்தில் அம்பலப்பட்ட ஆளுநர் ஆர்.என். ரவியின் அப்பட்டமான பொய்கள் !

புரூடா நாடகம் : அரைமணி நேரத்தில் அம்பலப்பட்ட ஆளுநர் ஆர்.என். ரவியின் அப்பட்டமான பொய்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில், எட்டரை கோடி மக்கள் தங்களுக்கான தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேர்ந்தெடுத்துள்ளனர். ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி நாட்டிற்கே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழக அரசு. நாடே பார்த்து வியக்கும் இப்படிப்பட்ட ஆட்சியையும், படித்து பகுத்தறிவோடு முன்னேறி வரும் மக்களையும் கண்டு இங்கிருக்கும் ஆளுநருக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவுதான் அவரது தொடர் அடாவடித்தனம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவியேற்றதில் இருந்து இதுநாள் வரை மக்களுக்காக ஏதாவது நல்லது செய்தது உண்டா என்றால் இல்லை. ஆனால், தமிழ்நாட்டு மக்களையும், நமது உயரிய பண்பாட்டையும் இழிவுபடுத்தி, அரசுக்கு இடையூறு செய்யும் கீழ்த்தரமான அரசியலை ஏராளம் செய்கிறார். அரசுக்கு எதிராக அரசியல் செய்யும் போதெல்லாம் மூக்குடைபட்டு அசிங்கப்படுவதுதான் அவரது வரலாறு. இருப்பினும் அசிங்கப்படுவதை அவர் நிறுத்தியபாடில்லை.

முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை டி.என்.பி.எஸ்.சி தலைவராக்க தமிழ்நாடு அரசு எடுத்த முடிவிற்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கிறார். வள்ளலாரை சனாதனி என்று வரித்துக்கொண்டு பேசுகிறார். கால்டுவேல் போன்றவர்கள் பற்றி ஏதேதோ தவறான தகவல்களை பரப்புகிறார். தமிழகத்தில் ஆரியம், திராவிடம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை; அது, வெளிநாட்டவர் செய்த பிரித்தாளும் சூழ்ச்சி என்று உளறுகிறார்.

புரூடா நாடகம் : அரைமணி நேரத்தில் அம்பலப்பட்ட ஆளுநர் ஆர்.என். ரவியின் அப்பட்டமான பொய்கள் !

விடுதலைப் போராட்ட வீரர்களை திராவிட இயக்கம் கொண்டாடவில்லை என்பது போன்ற பொய்யான பரப்புரையை மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மறக்கடிக்கப்பட வேண்டும் என்றே இங்கு ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டு செய்தார்கள் என்று வரலாறு தெரியாமல் பேசுகிறார். அதுமட்டுமல்லாமல் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் பட்டியலில் மருது சகோதரர்கள் பெயர் இல்லை என்றெல்லாம் பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார். இப்படி போலியான தேச பக்தியைப் பற்றி பேசும் ஆளுநர், தேசத்தின் விடுதலைக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த சங்கரய்யாவிற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் அரசின் முடிவிற்கு ஒப்புதல் தர மறுக்கிறார். அவருக்கு உயிரோடு இருக்கும் சங்கரய்யாவின் தியாகத்தைப் பற்றியும் தெரியாது. மறைந்த தியாகிகளை மக்கள் போற்றும் வகையில் கழக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையும் தெரியாது. ஆனால், வாய்க்கு வந்த பொய்களை அவிழ்த்துவிடுவதை மட்டும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இதன் உட்சபட்சமாக ஆளுநர் மாளிகையின் வாயில் அருகே பெட்ரோல் பாட்டில் வீசப்பட்டது குறித்து தனக்கே உரித்தான பாணியில் கதை எழுதுகிறார். வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் ஆளுநர் மாளிகையின் வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றதாக கூறுகிறார். பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியதாக கப்சா விடுகிறார். அதன் பிறகு அவசர கதியில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதால் விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டிருப்பதாக பேசுகிறார். ஒரு உயரிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் இதுபோன்று பேசுவது நாகரிகமாது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அமைச்சர் ரகுபதி, அவருக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தார்.

அதுமட்டுமல்ல, அவர் ஆளுநர் மாளிகையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக பாதுகாப்பு அளித்து வரும் சென்னை மாநகர காவல் ஆணையரும் நேரில் சென்று விவரிக்கிறார். அப்படியிருந்தும் ஆளுநர் மாளிகையின் புளுகுமூட்டை ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகிறது. வேறுவழியில்லாமல் தமிழ்நாட்டின் உயர் அதிகாரிகளான காவல் தலைமை இயக்குநரும், சென்னை காவல் ஆணையரும் செய்தியாளர்கள் முன்னிலையில் ஆளுநரின் கீழ்த்தரமான பொய் புரட்டுகளை வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்த வேண்டியதாகி விட்டது. தற்போது ஆளுநர் தனது முகத்தை எங்கே வைத்துக்கொள்வார். இப்படி அம்பலப்பட்டிருப்பது ஆளுநருக்கு அசிங்கமாக தெரியவில்லையா?

புரூடா நாடகம் : அரைமணி நேரத்தில் அம்பலப்பட்ட ஆளுநர் ஆர்.என். ரவியின் அப்பட்டமான பொய்கள் !

புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு மிரட்டிப்பார்த்தும் பணியவில்லை என்று ஆளுநர் மூலமாக மட்டமான அரசியல் செய்யும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதை அவமானமாக உணருவார்களா? திமுகவை எதிர்ப்பதை முழு வேலையாக வைத்திருந்தாலும் உங்களால் வெல்ல முடியாது. உங்களைப் போன்றவர்கள் குடைச்சல் குடுத்துக்கொண்டிந்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வழியனுப்பி வைக்கும் அந்த 2 நிமிட நிகழ்ச்சியில் கூட நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பாக கோரிக்கை வைக்கிறார் முதலமைச்சர். இதுதான் மக்கள் பணி. இதுபோன்று ஆளுநர் எதையும் செய்ததில்லை. ஆனால் இடையூறாவது செய்யாமல் இருக்கலாம் அல்லவா?

தமிழும் தெரியாது.. தமிழ்நாட்டு மக்களின் பண்பாடும் புரியாது.. சமூக நீதி மண்ணை ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பற்றியாவது உங்களுக்கு தெரியுமா ஆளுநர் அவர்களே.. எதையும் தெரியாமல் இங்கு அரசியல் செய்தால் இப்படித்தான் ஒவ்வொருமுறையும் அசிங்கப்பட வேண்டிய நிலை வரும். நீங்கள் அசிங்கப்படுவதையும், உங்களை இயக்கும் பாஜகவின் லட்சணமும் நாடே அறியும் வகையில் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்.

-சீனி

banner

Related Stories

Related Stories