இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஒன்றிய அரசின் ஐஐடி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பெரும்பாலும் உயர்சாதியினரே கல்வி கற்று வரும் நிலையில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது.
அதிலும், சமீப காலமாக அங்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களின் தற்கொலை என்பது தொடர் கதையாக வருகிறது. ஐஐடி கல்வி நிறுவனங்ளில் ஆசிரியர் பணியிடங்களில் பெரும்பாலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படாத நிலையில், அங்கு உயர்சாதி என சொல்லிக்கொள்ளும் சமூகத்தை சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர்.
இதன் காரணமாக அவர்களின் பழக்கவழக்கத்துக்கே அங்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பிற மாணவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. அந்த வகையில் மும்பை ஐஐடியில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டும் தனி மேஜைகள் அமைக்கப்பட்டதை கண்டித்த மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் , மும்பை ஐஐடியில் செயல்படும் 3 விடுதிகளுக்கு பொதுவாக உள்ள உணவகத்தில் 6 மேஜைகள் சைவ மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதாக உணவக கவுன்சில் கடந்த வாரம் அறிவித்து மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது.
அந்த மின்னஞ்சலில், "இந்த சைவ உணவு கொள்கையை மாணவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும்" என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சில போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் இடதுசாரி மாணவர் அமைப்பான அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் வெளியிட்ட சமூகவலைத்தள பதிவில், " கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, நவீன காலத்தில் தீண்டாமையை நிலைநாட்டும் சாதி பஞ்சாயத்து போன்றது" என கூறப்பட்டுள்ளது.