அரசியல்

"ஆளுநர் முழு அரசியல்வாதியாக மாறியுள்ளார்" -புள்ளிவிவரத்தோடு ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி !

"ஆளுநர் முழு அரசியல்வாதியாக மாறியுள்ளார்" -புள்ளிவிவரத்தோடு ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டின் ஆளுநர் அவர்கள் அண்மைக் காலமாக ஒரு முழு அரசியல்வாதியாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடைய அண்மைக் காலத்தில் இருக்கக்கூடிய பேச்சுக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஏற்கனவே, ஆளுநர் அவர்கள் நம்முடைய அன்னை தமிழ்நாட்டை “தமிழ்நாடு” அல்ல “தமிழகம்” என்று சொல்லி, அந்த சொல்லாடலை நிறுவுவதற்கு அவர் ஒரு முயற்சியினை மேற்கொண்டு, நாடு தழுவிய அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

அதேபோல, எழுவர் விடுதலையில் அவர் எடுத்த நிலைப்பாடு உச்சநீதிமன்றத்தினுடைய விமர்சனத்திற்கும், ஒருமுறை அல்ல, இருமுறைக்கு உள்ளானதை நாம் அனைவரும் அறிவோம். திராவிடம் என்ற சொல்லைகூட தனக்கு ஒவ்வாமை உடைய சொல் என்பதாக ஆளுநருடைய கடந்த கால நடவடிக்கை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த தொடர் நடவடிக்கையினுடைய ஒரு பகுதியாக, நேற்றைய தினம் ஆளுநர் அவர்கள் உதகையிலே, துணைவேந்தர்களுடைய மாநாட்டை கூட்டி துணைவேந்தர்கள் எல்லாம் அழைத்து வைத்துக்கொண்டு, அங்கே தன்னுடைய அரசியலை அவர்கள் பேசத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் கல்விச் சூழ்நிலை சரியில்லை என்பதைப் போலவும், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதைப் போலவும், அதைப்போல, தொழில் முதலீடுகளை ஒரு நாட்டிற்கு வருவது என்பது ஏதோ தொழில் முதலீட்டு ஈர்ப்பு பயணங்கள் வாயிலாகவோ அல்லது தொழில் முதலீட்டாளர்கள் பேசுவதனால் மட்டுமே வந்து விடாது என்று அண்மையில், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டிருக்கக்கூடிய அந்தப் பயணத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி ஆளுநர் அவர்கள் அதிலே கருத்துக்களை தெரிவித்து முழுக்க முழுக்க அந்த துணைவேந்தர்கள் மாநாட்டை தன்னுடைய அரசியலுக்காக அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

"ஆளுநர் முழு அரசியல்வாதியாக மாறியுள்ளார்" -புள்ளிவிவரத்தோடு ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி !

குறிப்பாக, இத்தகைய நடவடிக்கைகளை ஆளுநர் அவர்கள் செய்வதற்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில பிரச்சனைகளில் ஆளுநர் அவர்கள் தெரிவித்திருக்கக்கூடிய கருத்துக்கள் மாறான வகையில் வந்திருக்கிறது, அவருக்கு எதிராகவே வந்திருக்கிறது என்பதை திசை திருப்புவதற்காகவே ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார் என்று நான் ஐயமுறுகிறேன்

குறிப்பாக, சிதம்பரத்திலே தீட்சிதர்கள் அவர்களுடைய நடவடிக்கைகளை பால்ய விவாகம் கிடையாது, இளவயது திருமணம் கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்து ஏதோ தமிழ்நாட்டினுடைய அரசின் சமூக நலத்துறை அங்கே தேவையில்லாமல் அல்லது உண்மைக்கு விரோதமாக அங்கே FIR-களை போட்டு அவர்களையெல்லாம் கொடுமைப்படுத்தியதாக ஆளுநர் அவர்கள் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். இன்றைக்கு ஊடகங்களில் எல்லாம் நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால், என்ன செய்திகள் வந்திருக்கிறது. இத்தகைய திருமணங்கள் நடந்திருக்கிறது என்பதை வீடியோக்கள் வாயிலாக இன்றைக்கு காட்சி ஊடகங்களில் வெளியிட்டு இருக்கிறது. எனவேதான் ஏற்கனவே இருந்திருக்கக்கூடிய கருத்துக்கள் உண்மைக்கு மாறாக உலகத்திற்கு படம் காட்டப்படக்கூடிய நிலையில் எடுத்துச் சொல்லக்கூடிய நிலையில், அவற்றில் இருந்தவற்றையெல்லாம் திசை திருப்புவதற்காக, ஆளுநர் இத்தகைய அரசியல் கருத்துகளை சொல்லுகிறாரோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது.

குறிப்பாக ஆளுநர் அவர்கள் தெரிவித்திருக்கக்கூடிய ஒரு கருத்து தமிழ்நாட்டினுடைய கல்வி சூழ்நிலையில் சரியில்லை என்பது போல சொல்கிறார். “கல்வியில் சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்று போற்றப்பட கூடிய தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை ஆளுநர் முற்றிலும் அறியவில்லையோ அல்லது அறிந்தும் அறியாமல் அறிவியல் கொண்டிருப்பதைப் போல் அவர் தன்னை காட்டிக் கொள்கிறாரா? என்பது தெரியவில்லை. அதுவும் குறிப்பாக, நேற்றைக்குக்கூட வந்திருக்கக்கூடிய நம்முடைய இந்திய அரசினால் கொடுக்கக்கூடிய list தர வரிசை அடிப்படையில் நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால், இந்தியாவில் இருக்கக்கூடிய 100 பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் எடுத்துக்கொண்டால் அதில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள். Top 100 கல்லூரிகள் என்று எடுத்துக்கொண்டால் 30 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்து வரக்கூடிய கல்லூரிகள். ஆக இத்தகையதொரு சிறப்பு வாய்ந்திருக்கக்கூடிய தர வரிசைப் பட்டியலில் வெளியிட்டிருக்கக்கூடிய அதே நேரத்தில் ஏற்கனவே நிதி ஆயோக் மூலமாக தர வரிசை வருகிறது. தமிழ்நாட்டினுடைய கல்வி வரிசை மிக சிறப்பான வகையில் வெளிவந்து இருப்பதை நாம் அனைவரும் மிக நன்றாக அறிவோம்.

இன்னொன்றையும் நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அவரே சொல்லியிருப்பது போல Gross Enrolment Ratio-வை பொறுத்தமட்டில் மற்ற 46.9 சதவீதம் நம்முடைய தமிழ்நாட்டில் இன்றைக்கு No. of students enrol என்று பார்த்தால் ஏறத்தாழ 33 லட்சத்து 36 ஆயிரத்து 419 பேர் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்கு தமிழ்நாட்டினுடைய கல்வி கட்டமைப்பும், கல்வி சூழ்நிலைகள் மிகச் சிறப்பான அளவில் அமைந்திருக்கக் கூடிய காரணத்தினால் தான் அது வந்திருக்கிறது என்பதை நீங்கள் மிக நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். சிறந்த கல்வி நிறுவனங்களிலேயே பார்த்தீர்கள் என்று சொன்னால், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல தமிழ்நாடு 18வது இடத்தில் இருக்கிறது. பொறியியல் கல்விக்காக மாநில அரசின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்ற அண்ணா பல்கலைக்கழகம் சிறந்த 100 பல்கலைக் கழகங்களில் அது 18வது இடத்தில் இருக்கிறது. பாரதியார் பல்கலைக்கழகம் 36-வது இடம், சென்னைப் பல்கலைக்கழகம் 65-வது இடம். பாரதிதாசன் பல்கலைகக்கழகம் 70-வது இடம் என்று வரிசையாக தரவரிசையினுடைய பல்வேறு கூறுகளை எல்லாம் நீங்கள் எடுத்து பார்த்தீர்கள் என்று சொன்னால் மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால், அந்த இடத்தில் முழு தரவுகளும் இருக்கிறது தமிழ்நாடு மிகச் சிறந்த அளவில் கல்வி கட்டமைப்பில் இன்றைக்கு வந்திருக்கிறது.

"ஆளுநர் முழு அரசியல்வாதியாக மாறியுள்ளார்" -புள்ளிவிவரத்தோடு ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி !

அதேபோல, பொறியியல் கல்லூரி என்று பார்த்தீர்கள் என்று சொன்னால், 100 கல்லூரிகளில் 15 கல்லூரி நம்முடைய தமிழ்நாடு. Management 100 கல்லூரிகளில் Top 10 காலேஜ் எடுத்தால் அதில் பத்து நம்முடைய தமிழ்நாடு. பார்மசியில் Top 100 என்று எடுத்துக் கொண்டால் 10 நம்முடைய தமிழ்நாடு. ரிசர்ச் இன்ஸ்ட்யூட்ஸ் Top 50-ல் 9 தமிழ்நாடு. மெடிக்கல் காலேஜ் Top 50-ல் 8 தமிழ்நாடு. Dental-ல் Top 40-ல் 7 தமிழ்நாடு என்று நான் வரிசையாக Architecture, Agriculture, Law என்று ஒவ்வொன்றிக்கும் சொல்லிக்கொண்டே போகமுடியும். ஆகவே, எல்லா வகைகளிலும், தரவுகளின் அடிப்படையில் மிகச்சிறந்த ஒரு கல்வியில் உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கக்கூடிய காரணத்தினால், ஆளுநர் அவர்கள், அவர்களே பல்கலைக்கழகங்களினுடைய வேந்தராகவும் இருக்கக்கூடிய ஒருவர் எப்படி இந்த உண்மைகளை எல்லாம் இன்றைக்கு மறைத்துவிட்டு இப்படி பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. எனவே, தமிழ்நாடு என்பது பொருளாதார ரீதியில் இந்தியாவிலேயே மிக முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பதை நிதி ஆயோக் ஒத்துக்கொண்டு சொல்லியிருக்கிறார். இப்போதுகூட ஆளுநர் அவர்கள் அந்த கூற்றுக்கு என்று மாறுதலாக சொல்கிறார்.

அதேபோல, வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு வந்தால், முதலீடுகள் வந்துவிடுமா? என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார். நான் கடந்த ஜனவரி 2022-லிருந்து இப்போது ஏப்ரல் 2023 வரை 108 நிறுவனங்கள் 1,81,000 கோடி அளவுக்கு முதலீடு செய்து அதில் 1,94,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை நாம் இங்கே உருவாக்கி இருக்கிறோம் என்பதை நான் ஆளுநர் அவர்களுக்கு கவனப்படுத்த விரும்புகிறேன்.

குறிப்பாக, 2021-22-ஆம் நிதி ஆண்டில், தமிழ்நாட்டில் 4 இலட்சத்து 79 ஆயிரத்து 613 நிறுவனங்கள். 36 இலட்சத்து 63 ஆயிரத்து 938 பணியாளர்களோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் Registered Companies என்ன அங்கு ஏற்கனவே வேலை பார்க்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரத்தை எடுத்துக் கொண்டால், 2021-22 நான் சொன்ன கணக்கு. அதேபோல 2022-23 எடுத்துக்கொண்டால், ஏற்கனவே இருக்கக்கூடிய இந்த கணக்கு 4 இலட்சத்து 79 ஆயிரம் நிறுவனங்கள் என்பது 7 இலட்சத்து 39 ஆயிரத்து 296-ஆக உயர்ந்திருக்கிறது. வேலைவாய்ப்பு 36 இலட்சத்து 63 ஆயிரத்திலிருந்து 47 இலட்சத்து 16 ஆயிரமாக கூடியிருக்கிறது. இதற்காக மொத்த தரவுகளும் அரசின் கையில் Registered Companies என்ற அளவில் இருக்கிறது.

இது தவிர, நான் முதல்வன் திட்டம், இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால், 4 இலட்சத்து 94 ஆயிரத்து 758 பொறியியல் மாணவர்கள். அதைப்போல 10 இலட்சத்து 34 ஆயிரத்து 97 கலைக்கல்லூரி மாணவர்கள் முழுமையாக திறன் மேம்பாடுகளை பெற்றிருக்கிறார்கள். இது என்னென்ன field-ல் வந்திருக்கிறது என்று சொன்னால் Robotics. Artificial Intelegence, Machine Learning, Cloud Computing, Smart Energy guide, Virtual Reality போன்ற புதிய துறைகளில் எல்லாம் அந்த திறன்களையெல்லாம் அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

"ஆளுநர் முழு அரசியல்வாதியாக மாறியுள்ளார்" -புள்ளிவிவரத்தோடு ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி !

இந்தப் பாடப்பிரிவுகளில் எல்லாம் பார்த்தீர்கள் என்று சொன்னால், அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய syllabus-ல் இதெல்லாம் ஒருங்கிணைந்து ஒவ்வொரு கம்பெனிகளும் அவர்கள் இந்த பாடத்தை நடத்தி syllabus-ல் வரக்கூடிய காரணத்தினாலே அவர்களுக்கு மதிப்பெண் வழங்கி அதற்கான உரிய சான்றிதழ்கள் அந்தந்த கம்பெனியின் மூலமாக நம்முடைய அரசின் சார்பாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. சீமென்ஸ், டசால், ஆட்டோ டெஸ்க் சிஸ்கோ, ஐபிஎம், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் வழங்கி இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட தரவு என்னவென்றால், நான்காம் ஆண்டு படிக்கக்கூடிய பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 688 பேர். கடைசி வருடம், நான்காம் வருடம் படித்தவர்களில் 66 ஆயிரத்து 900 பேர் தலைசிறந்த நிறுவனங்களில் இன்றைக்கு அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஏதோ தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பே கிடைக்கவில்லை, தமிழ்நாட்டில் கல்வி சூழ்நிலைகள் இப்படி வந்திருக்கிறது என்பதும், முதலீடுகளை உருவாக்குவதற்கு இப்படி முதலமைச்சராக இருந்தாலும் சரி அல்லது அமைச்சர் பெருமக்கள் அத்தகைய பயணங்களை மேற்கொள்வதை கொச்சைப்படுத்தி ஆளுநர் பேசுவது என்பது ஏற்க முடியாது.

நான் கேட்க விரும்புவதெல்லாம், இந்தப் பயணங்களை ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமா மேற்கொண்டிருக்கிறார்? இன்றைய ஒன்றிய அரசின் பிரதமராக இருக்கக்கூடியவர் நரேந்திர மோடி அவர்கள் கூட குஜராத் முதலமைச்சராக இருக்கின்றபோது, எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்தார். 2011ம் ஆண்டு, அவர் சீனாவுக்கு பயணம் செய்திருக்கின்றார். சீனாவில் Global Investors Meet, அங்கே ஒரு Summit என்று அவர் நடத்தி அங்கு இருக்கக்கூடிய சீன தொழிலதிபர்களோடு அவர் உரையாடினார். சீனாவில் மட்டுமல்ல, ஸ்விட்சர்லாந்து சென்றிருக்கிறார், சிங்கப்பூர் சென்றிருக்கிறார், ஜப்பான் சென்றிருக்கிறார், கொரியா சென்றிருக்கிறார், தைவான் சென்றிருக்கிறார், மலேசியா சென்றிருக்கிறார், தாய்லாந்து சென்றிருக்கிறார் இப்படி பல்வேறு நாடுகளுக்கு அவர் பயணங்களை மேற்கொண்டு அங்கிருக்கக்கூடிய தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து இங்கே வாருங்கள் என்று அவர்கள் அழைத்திருக்கிறார். அப்படி அழைத்திருக்கிறார் என்று சொன்னால், அவர் போய் பார்க்கக்கூடிய இடத்தில் இங்கே உகந்த சூழ்நிலை இல்லை என்று அர்த்தமா? அல்லது அவர் போய்ப் பார்ப்பதெல்லாம் என்று அவர் சொல்லுகிறாரா என்று கேட்டால், நான் கேட்க விரும்புவது, இதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதை விட உள்ளபடியே சொல்ல வேண்டுமென்றால், பாரதிய ஜனதா கட்சி இப்போது இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். எங்களை நோக்கி எய்திருக்கக்கூடிய இந்த அஸ்திரம் என்பது நம்முடைய பாரதப் பிரதமரை நோக்கி கவர்னர் அவர்கள் எய்தியிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

எனவே, முந்தைய காலங்களில் குஜராத்தின் முதலமைச்சராக இருக்கும்போது, அவர் இப்படிப்பட்ட பயணங்களையெல்லாம் மேற்கொண்டார் என்பதைத்தான் நம்முடைய ஆளுநர் இப்போது எங்களை முன்னிறுத்திக் கொண்டு அதைச் சுட்டிக் காட்டுகிறாரோ என்ற ஐயம் எனக்கு வருகிறது. எனவே, இதுகுறித்து, பாரதிய ஜனதா கட்சி தான் கவர்னரை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டும் என்றும் நான் இந்த செய்தியாளர் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

எங்களைப் பொறுத்தமட்டில் யாராக இருந்தாலும் சரி, அந்தந்த காலகட்டத்தில் ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு தொழில் முதலீடுகளுக்காக இத்தகைய பயணங்களை நாங்கள் மேற்கொள்கிறோம். அப்படி பயணங்களை மேற்கொள்வதின் விளைவுகள் என்ன என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும்.

இப்போது நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஜப்பான், சிங்கப்பூர் பயணத்திற்கு போய்விட்டு வந்து உங்களிடத்தில் பேசியிருக்கிறார்கள். இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளை இங்கே கொண்டு வந்திருக்கிறோம். 3000 கோடி ரூபாய்க்கு மேலாக அவர் இன்றைக்கு முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறார். முக்கியமான பல்வேறு உலகலாவிய நிறுவனங்கள் வந்திருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில், தமிழ்நாட்டிலே தொழில் முதலீடுகளுக்கு ஒரு உகந்த மாநிலமாக ஒரு உகந்த சூழ்நிலை இருக்கக்கூடிய காரணத்தால்தான் தொழில் முதலீட்டாளர்கள் நம்மை நோக்கி வருகிறார்கள்.

"ஆளுநர் முழு அரசியல்வாதியாக மாறியுள்ளார்" -புள்ளிவிவரத்தோடு ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி !

தன்னுடைய Most preferred destination for Investments கிழக்காசியாவிலேயே நாம் தான் வர வரவேண்டும் என்கின்ற முதலமைச்சருடைய அந்த எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய வகையில்தான் இன்றைக்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் வருகிறார்கள். நான் குறிப்பிட்டு ஒன்றை சொல்ல வேண்டுமென்றால். கோவிட் காலம், நாடு முழுவதும் முடங்கியிருந்த அந்தக் காலகட்டத்திலேயே, தமிழ்நாட்டில் முதலீடுகள் நமக்கு அன்றைக்கு வருகிறது என்று சொன்னால், அதற்கு மிக முக்கியமான காரணம் ஒரு உகந்த சூழ்நிலை, தொழில் உகந்த சூழலை உருவாக்கிய முதலமைச்சருடைய நேரடி ஈடுபாடு, முதலமைச்சர் அவர்கள் மீது நம்முடைய தொழில் முதலீட்டாளர்கள் வைத்திருந்த பெரிய நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் அந்த சூழ்நிலையிலே தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகள் வந்தது.

இன்றைக்கு நான் குறிப்பிட்டுச் சொன்னதுபோல, தொடர்ச்சியாக ஏறத்தாழ இந்த இரண்டு வருட காலத்தில் எடுத்துப் பார்த்தால், 2 லட்சம் கோடிக்கும் மேலாக தொழில் முதலீடுகள் வந்திருக்கும் என்று சொன்னால் அது, தமிழ்நாடு தொழில் முதலீடுகளுக்கான ஒரு சிறந்த மாநிலமாக எல்லா தரவுகளின் அடிப்படையிலும் சிறக்கிறது. கல்வி நிலைகளில் உயர்ந்த ஒரு மாநிலமாக இருக்கிறது. நம்முடைய தமிழ்நாட்டில்தான் Ph.D Registration செய்தவர்கள், M.Phil செய்தவர்களெல்லாம் மிகவும் அதிகமாக அளவில் இருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய Manufacturing industries-ல் வேலைக்கு அமர்த்திருக்கக்கூடிய women forces-ஐ எடுத்துக் கொண்டால் 50 சதவீதத்திற்கு மேலாக தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இப்படி நான் பல தரவுகளை சொல்ல முடியும்.

எனவே, ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டின் கல்வி சூழ்நிலை, வேலைவாய்ப்பு சூழ்நிலை மிகச்சிறப்பாக இருக்கக்கூடிய நிலையில், ஆளுநர் இத்தகைய அரசியல் ரீதியான கருத்துக்களைச் சொல்வது அரசியலுக்கு அவர் ஈடுபடுவதற்கான ஒரு சூழ்நிலை இருந்தால், அவர் ஆளுநர் மாளிகையை அதற்கு பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதை நான் இந்த நேரத்திலே வலியுறுத்திச் சொல்லி, இதை அவர் ஏற்கனவே சொல்லியிருக்கக்கூடிய பல காரணங்களிலிருந்து திசை திருப்புவதற்காகவும் ஆளுநர் இத்தகைய உண்மைக்கு மாறான செய்திகளை தொடர்ந்து சொல்கிறார் என்பதை நான் இங்கே பதிவு செய்கிறேன்.

கேள்வி : கவர்னர் சொல்கிறார், நிறைய பேர் படித்துவிட்டு கல்லூரியில் பேராசியராக 10000, 15000 ரூபாயில் தினக்கூலி அடிப்படையில் போகிறார்கள் அது பற்றி……..

அமைச்சரின் பதில்: நான் முதல்வன் திட்டத்தில் 61000 பேருக்கு வந்திருக்கிறது. இறுதியாண்டு படித்தவர்களில் எத்தனை பேருக்கு இன்றைக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறது. அவர்களுக்கு ட்ரெயினிங் கொடுத்தவர்கள் எத்தனை உலகப் புகழ்வாய்ந்த நிறுவனங்கள் அந்த ட்ரெயினிங் இன்றைக்கு கொடுத்திருக்கிறார்கள். எனவே வேலைவாய்ப்புகளை போகக் கூடியவர்கள் எத்தனை பேர் மிகச் சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். இன்னும்கூட குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய தொழில் முதலீடுகள் குறிப்பாக IT Industries-யில் இருந்து வரக்கூடியவர்கள் ஏன் இங்கே வருவது நான் தொழில்துறையினுடைய அமைச்சராக இருக்கும்போது பலவித தொழில் நிறுவனங்களோடு, வெளிநாடுகளிலும் பேசியிருக்கிறேன். அப்போது அவர்கள் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு நாங்கள் வருவதில் மிக முக்கியமான காரணம் Technical Skills, நம்மிடம் இருக்கக்கூடிய Skill workforce, Human Resources இது தமிழ்நாட்டினுடைய மிக முக்கியமான அடையாளமாக நாங்கள் பார்க்கிறோம். தமிழ்நாட்டிற்கு நாங்கள் வருகிறபோது எங்களுக்கு எளிதாக அது கிடைக்கிறது. எனவே இங்கு இருக்கக்கூடிய அந்த வேலைவாய்ப்புகளுக்கான பெரிய நிறுவனங்கள் நமது வேலைக்காக வருகிறார்கள்.

கேள்வி : ஆளுநர் அவர்கள் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு எதிர்மறையாக ….. ஏன் வழக்குத் தொடுக்கக்கூடாது. ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?

அமைச்சரின் பதில்: ஆளுநர் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கங்களை நாங்கள் தெரிவித்திருக்கிறோம். ஆளுநர் மீது வழக்கு தொடர வேண்டும் என்பதற்காக அல்ல. ஆளுநர் அரசியல் செய்ய வேண்டாம் என்பதுதான் எங்களுடைய தொடர்ச்சியான காரியம். ஏனென்றால், ஆளுநர் உண்மைக்கு மாறான செய்திகளை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார். இது மட்டும் கிடையாது. ஆளுநர் வேண்டும் என்றே ஒரு விஷயத்தை சொல்கிறார். அதற்கான எதிர்வினைகள் கடுமையாக வருகிறபோது, அந்த விஷயத்தை விட்டு வேறு விஷயத்தைச் சொல்லுகிறார்

கேள்வி : குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று சொல்லமுடியாது. இது பற்றி.

அமைச்சரின் பதில்: ஆளுநர் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை நாங்கள் துவக்கவில்லை.

"ஆளுநர் முழு அரசியல்வாதியாக மாறியுள்ளார்" -புள்ளிவிவரத்தோடு ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி !

கேள்வி : புதிய கொள்கைக்காக கூட்டம் போட்டிருக்கிறார். நம்முடைய அரசு நேர் எதிர் கொள்கையிலிருந்து நம் மாநிலத்திற்காக தனி கல்விக் கொள்கைக்காக குழு ஒன்று போட்டிருக்கிறீர்கள். அது பற்றி….

அமைச்சரின் பதில்: துணைவேந்தர்கள் அழைத்து ஆளுநர் வேந்தர் என்கின்ற முறையில் இப்படி கூட்டங்களை நடத்துவது குறித்து ஏற்கனவே நம்முடைய உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அதற்கான உரிய விளக்கங்களை ஏற்கனவே கொடுத்திருக்கிறார். இப்படி கூட்டங்களை போடுவது. அந்த கூட்டங்களில் இத்தகைய அரசியல் கருத்துக்களை செய்வதை அரசு ஏற்கவில்லை. எனவேதான் நான் அரசினுடைய கருத்தை இங்கே பதிவு செய்கிறேன். ஆளுநர் செய்வது என்பது அந்த துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டி ஒரு துணைவேந்தரிடத்தில் ஆளுநர் கல்வி சூழ்நிலை பற்றி பேசலாம், Academic-காக அவர் உரையாற்றலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு வேறு மறைமுகமான சில அரசியல் கருத்துக்களை பேசுவதை நிச்சயமாக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தான் அரசின் சார்பாக நான் இந்த எதிர்வினையை சொல்கிறேன்.

கேள்வி: அந்தக் கூட்டத்தில் செயலாளர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கெடுத்திருக்கிறார்களா? அங்கேயே நம்முடைய மறுப்பை தெரிவித்திருக்க முடியுமா?

அமைச்சரின் பதில்: ஆளுநர், துணைவேந்தர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த அழைப்பை விடுத்து துணைவேந்தர்களுடைய அந்தக் கூட்டத்தில் அவர் பேச வேண்டிய கருத்துக்களை கல்வி சம்பந்தமாக கூட பேசாமல் மற்ற கருத்துக்களையெல்லாம் அவர் அதிலே பேசுகிறார். நீங்கள் சொல்வதைப்போல National Educational Policy புதிய கல்விக் கொள்கையில் எங்களுக்கு உடன்படிக்கை முற்றிலுமாக கிடையாது என்பதை நாங்கள் பலமுறை தெரிவித்து இருக்கிறோம். மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை நாங்கள் உருவாக்குவதற்கான குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. எனவே அரசியல் உள்நோக்கங்களுக்காக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதுதான் எங்களுடைய கருத்து.

கேள்வி: அரசியல் கட்சிகள் எல்லாமே அவரை திரும்பப் பெற வேண்டும் என்று இந்த சம்பவத்திற்கு பிறகு வலியுறுத்தியிருக்கிறார்கள், திமுக கட்சியின் …

அமைச்சரின் பதில்: அரசியல் கட்சிகளுடைய எல்லா வலியுறுத்தலும் இருக்கிறது. ஏற்கனவே நம்முடைய மாநில முதலமைச்சர் அவர்கள் அதுகுறித்து தன்னுடைய கருத்துக்களை ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

கேள்வி: அதிமுக ஆட்சியில், பன்வாரிலால் புரோஹித் இருக்கும்போது அவர் பல இடங்களில் ஆய்வுகளுக்குச் சென்றார், திமுக பல இடங்களில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்தது. இப்போது ஏறக்குறைய அதேபோன்ற விஷயம்தான். தமிழக அரசின் கொள்கைக்கு நேர் எதிரான விஷயங்களில் செயல்படுகிறார், அப்போது நாம் எந்தப் போராட்டமும், எதிர்ப்பும் ….

அமைச்சரின் பதில்: இல்லை, இல்லை. ஏற்கனவே ஆளுநர் மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக நாங்கள் அறிவித்திருந்தோம். பின்னர் அதற்குப் பிறகு ஆளுநர் தன்னுடைய பரிந்துரையை அனுப்பினார். எனவே தேவைப்பட்டால் அத்தகைய சூழ்நிலை வரும்போது திராவிட முன்னேற்றக் கழகம் அந்த நடவடிக்கையில், ஏற்கனவே நடத்துவதற்கான அறிவிப்புகளை கடந்த காலங்களில் நாம் வெளியிட்டிருக்கிறோம்.

கேள்வி: ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும் என்று சொல்கிறார், ஒரு ஆரோக்கியமான சூழல் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறாரா?

அமைச்சரின் பதில்: உங்கள் கேள்வியிலிருந்தே நான் சொல்கிறேன். அப்படியென்றால், குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி அவர்களும் மற்ற இன்றைக்கு இருக்கக்கூடிய பாஜக முதல்வர்களும் பல இடங்களுக்கு அவர் சென்றதும் சரி, இப்போது இருக்கக்கூடிய அவர், பாஜக-வினுடைய முதலமைச்சர்கள் அவர்கள் பல இடங்களுக்கு, பல நாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்களை சந்திக்கிறார்கள் என்றால், அந்தக் காலத்தில் ஆரோக்கியமான சூழல் குஜராத்தில் இல்லையா? அல்லது இப்போது பாஜக ஆளும் மாநிலங்களில் அப்படிப்பட்ட ஆரோக்கியமான சூழல் இல்லாத காரணத்தினால் தான் அப்படி இருக்கிறதா என்பதை அவர்களுடைய முடிவிற்கே நான் விடுகிறேன். ஏற்கனவே இது குறித்து நான் சொன்னது போல, இது குறித்து நாங்கள் சொல்வதைவிட பாரதிய ஜனதா கட்சி சொல்ல வேண்டும்.

கேள்வி: ஹரியானா போன்ற மாநிலத்தில் FDI அதிகமாக வந்திருக்கிறதா?

அமைச்சரின் பதில்: FDI என்பது வேறு. ஒட்டுமொத்தமான தொழில் மாநிலங்களில் நமது தமிழ்நாட்டினுடைய FDI நமக்கு மிகப்பெரிய அளவிலே வந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் பார்த்தீர்கள் என்றால், நாம் தான் அதிகமாக வாங்கி இருக்கிறோம். ஒரு மாநிலங்களில் வரக்கூடிய FDI வருகிறது என்றால் நம்முடைய மாநிலங்களில் இருக்கக் கூடிய வசதிகள் மிகப்பெரிய அளவில் வந்திருக்கிறது. ஒட்டுமொத்தமான இந்த விகிதங்களை பார்க்க வேண்டுமென்று சொன்னால், ஹரியானா போன்ற பெரிய மாநிலங்களைவிட நமக்கு அதிகமாக வந்திருக்கிறது. பொதுவாக இத்தகைய ஒப்பீடுகள் என்பது பெரிய அளவில் இருக்கக்கூடிய மாநிலங்களுக்கிடையேயான ஒப்பீடுதான் எப்போதும் இருக்கும். நாம் பாண்டிச்சேரி உடன் ஒப்பீடு செய்ய முடியுமா? கேரளா போன்ற சிறிய மாநிலங்கள் தங்களுடைய வளர்ச்சி விகிதங்களை ஒப்பீடு செய்யும்போது வளர்ந்திருக்கக்கூடிய பெரிய மாநிலங்களோடு ஒப்பிடுவதுதான் இயற்கை நியதி.

Related Stories

Related Stories