அரசியல்

”வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் தேவை”.. பிரதமர் மோடிக்கு கலாநிதி வீராசாமி கடிதம்!

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு என்று தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என கோரிபிரதமர் மோடிக்கு கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.

”வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் தேவை”.. பிரதமர் மோடிக்கு கலாநிதி வீராசாமி கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் குடும்ப நலத்துறை என தனி அமைச்சகத்தை உருவாக்க கோரி வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தின் விவரம் வருமாறு:-

வெளிநாடுகளில் வாழும் இந்திய குடிமக்கள் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ( என். ஆர். ஐ ) என்றும் இந்திய வம்சாவளி அயல்நாட்டு குடிமக்கள் என்றும் பொதுவாக அறியப்படுகின்றனர். இதில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ( என். ஆர். ஐ ) இந்திய குடியுரிமை பெற்று வெளிநாடுகளில் தங்கி உள்ள இந்திய குடிமக்கள் என்றும் இந்திய வம்சாவளி அயல் நாட்டு குடிமக்கள் என்போர், இந்தியாவில் பிறந்தவர்களாகவோ அல்லது அவர்களது மூதாதையர் இந்தியாவில் பிறந்தவர்களாகவோ இருக்கும் நிலையில் அயல்நாட்டு குடியுரிமை பெற்றவர்களாக இருப்பர். நமது அயல்நாட்டுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி சுமார் 3.2 கோடி இந்திய குடிமக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதில் பல லட்சக்கணக்கான தமிழர்களும் அடங்குவர். ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். உலகிலேயே நம் நாட்டில் இருந்து தான் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் குடிபெயர்க்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இந்த 3.2 கோடி என்பது 150 நாடுகளில் மக்கள் தொகையை விட பெரிதாகும்.

ஐக்கிய அரபு எமிரேட், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சவுதி அரேபிய ஆகிய இந்த மூன்று நாடுகளுக்கு மட்டும் கடந்த 20 ஆண்டுகளாக மிகப்பெரிய எண்ணிக்கையில் இந்திய மக்கள் குடி பெயர்ந்துள்ளனர் என்றும் மொத்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கையில் 48.6 சதவீதம் இந்த மூன்று நாடுகளில் வசிப்பதாக 2020 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தெரிகிறது.

”வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் தேவை”.. பிரதமர் மோடிக்கு கலாநிதி வீராசாமி கடிதம்!

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர்கள் ஒவ்வொருமுறை நம் நாட்டுக்கு பணம் அனுப்பும்போதும் நமது அந்நிய செலவாணி கணக்கு உயர்கிறது. இவ்வாறு அவர்கள் அனுப்பும் பணம் நம் அன்னிய செலவாணி உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த வகையில் நம் நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க செய்கிறது. சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் அதிக அளவில் வாங்கப்படுவதால் பொருள்களின் தேவை அதிகரித்து உற்பத்தியும் அதிகரிக்க செய்கிறது. பல லட்சக்கணக்கான மக்களுக்கு குறிப்பாக மத்திய மற்றும் குறைந்த வருவாய் பெறும் மக்களுக்கு இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் ஒரு பெரிய வருமானமாக அமைந்து விடுகிறது. வெளிநாடுகளில் இருந்து பணம் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பதையும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள சைனாவை விடவும் அதிக அளவில் முன்னிலையில் உள்ளது என்பதும் உலக வங்கி அளிக்கும் கணக்கீடு உறுதிப்படுத்துகிறது.

உலக வங்கியின் கணக்கீட்டின்படி 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு இந்த வகையில் 8,700 கோடி டாலர் அதாவது ரூபாய் 7,15,300 கோடி அளவில் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 20% அமெரிக்காவிலிருந்து பெறப்பட்டது என்றும் இந்தியாவை அடுத்து சைனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து முதலான நாடுகள் இந்த வரிசையில் பணம் பெற்றுள்ளன என்று தெரிவிக்கின்றது.

”வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் தேவை”.. பிரதமர் மோடிக்கு கலாநிதி வீராசாமி கடிதம்!

கோவிட் 19 என்னும் பெருந்தொற்றில் உலகப் பொருளாதாரமே கடுமையான பாதிப்புக்குள்ளான போதும் அப்போது செய்யப்பட்ட கணிப்புகளையும் பொய்யாக்கும் படி நம் நாட்டுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களால் அனுப்பப்படும் பணம் பாதிப்புக்கு உள்ளாகாமல் தரப்பட்டது. முதலில் வெளியிடப்பட்ட கணிப்புகளுக்கு இந்தியா இந்த வகையில் பணம் பெரும் நாடுகளில் தனது முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. உலக அளவில் அனுப்பப்படும் பணத்தில் பன்னிரண்டு சதவீதம் அளவிற்கு இந்தியாவுக்கு வந்துள்ளது. இதில் 2020இல் 0.2 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

இவ்வாறு அதிக அளவில் நம் நாட்டிற்கு அனுப்பப்படும் பணம் இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவிலும் மக்களின் வாழ்வாதார நிலையிலும் வலு சேர்க்கின்றது. பெரிய அளவில் என சொல்லும் போது இவ்வாறு அனுப்பப்படும் பணம் அந்நிய செலாவணி கணக்கை நிலை நிறுத்த உதவுகிறது. அந்நிய கரன்சிகளின் மதிப்புக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பையும் உறுதிப்படுத்துவதுடன் இந்தியாவின் மொத்த வருவாயில் கணிசமான பங்கீட்டை வழங்குகிறது. மேலும் வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்தை பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டு மருத்துவ வசதிகளை பெறுவதால் தொழில் முதலீடுகள் கல்வி வளர்ச்சி போன்றவற்றில் முதலீடுகள் செய்யப்பட்டு ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இதுகுறித்து எழுதுகையில் இன்னொரு தகவலையும் குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நல வாரியம் என்னும் அமைப்பை ஏற்கனவே அமைத்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் நம் நாட்டின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் நலன்களை உறுதி செய்யும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

மேலே குறிப்பிட்டுள்ளவாறு நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டும் அவர்களால் அனுப்பப்படும் பெருந்தொகையிலான பணம் இந்திய அரசுக்கு வலு சேர்ப்பதையும் கருத்தில் கொண்டும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் குடும்ப நலத்தை பாதுகாப்பதற்கு என்று ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து தங்களின் சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories