அரசியல்

திமுக அரசின் நல்லாட்சி நிர்வாகத்துக்கு மக்கள் வழங்கிய நற்சான்று : உள்ளாட்சி வெற்றிக்கு திருமாவளவன் நன்றி!

“தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி; நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று” என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் நல்லாட்சி நிர்வாகத்துக்கு மக்கள் வழங்கிய நற்சான்று : உள்ளாட்சி வெற்றிக்கு திருமாவளவன் நன்றி!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மிக அதிகமான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ள தி.மு.க கூட்டணி.

தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட வி.சி.க 3 மாவட்ட கவுன்சில் இடங்களையும், 27 ஒன்றிய கவுன்சில் இடங்களையும் கைப்பற்றியது. இந்த வெற்றி சிறுத்தைகளுக்கு கிடைத்த பேரங்கீகாரம் என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணியின் சார்பில், ஒன்றியக் குழு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கான சில இடங்களில் வி.சி.க போட்டியிட்டது. அவற்றில் கணிசமான இடங்களில் அனைத்துத்தரப்பு மக்களின் நல்லாதரவோடு வெற்றி வாகை சூடியுள்ளது.

மாவட்டக்குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட 4இல் 3 தொகுதிகளிலும் ஒன்றியக் குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட 43இல் 27 தொகுதிகளிலும் வி.சி.க வெற்றி பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும் வெற்றிக்கு அரும்பாடுபட்ட தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கூட்டணியை இணக்கமாகவும் வெற்றிகரமாகவும் வழிநடத்தி சட்டமன்றத் தேர்தலில் சாதித்ததைப் போலவே இத்தேர்தலிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மகத்தான வெற்றி தி.மு.க அரசின் நல்லாட்சி நிர்வாகத்துக்கும் தி.மு.க தலைமையிலான கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும் மக்கள் வழங்கியுள்ள நற்சான்றாகும்.

அத்துடன், சாதியவாத மதவாத சனாதன பிற்போக்கு சக்திகளின் அபாண்டமான அவதூறுகளை, மக்கள் தமது வாக்குகளால் தகர்த்தெறிந்து மீண்டும் வி.சி.கவை அரவணைத்து அங்கீகரித்துள்ளனர் என்பதற்கான சிறப்புச் சான்றாகும்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் வி.சி.கவுக்கு மாபெரும் அங்கீகாரத்தை வழங்கி மைய நீரோட்ட அரசியலில் வி.சி.க ஒரு மகத்தான சக்தி என்பதை மீளுறுதி செய்துள்ள எம் தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறுப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories