அரசியல்

“பெரியார் பெயரை மாற்றி சங் பரிவாரின் வியூகத்தை நிறைவேற்றிய எடப்பாடி அரசு” : வைகோ கடும் கண்டனம்!

எஜமான் மோடி பிறப்பித்த ஆணையை, அடிமை எடப்பாடி நிறைவேற்றி இருக்கின்றார். தமிழ்நாட்டின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டார் என வைகோ கடுமையாக சாடியுள்ளார்.

“பெரியார் பெயரை மாற்றி சங் பரிவாரின் வியூகத்தை நிறைவேற்றிய எடப்பாடி அரசு” : வைகோ கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெரியார் பெயரை நீக்குவதா? என மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

“சென்னை மையத் தொடரி நிலையம், ரிப்பன் மாளிகை அருகே, நெடுஞ்சாலைத் துறையினர், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையை, புதிதாக நாட்டி இருக்கின்றார்கள். 1979 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை, ஓராண்டு தொடர் விழாவாக எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. அரசு கொண்டாடியது.

அப்போது, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று மாற்ற, மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு பெயர் மாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பித்தார்.

ஆனால், எம்.ஜி.ஆர்.பெயரைச் சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்துகின்ற எடப்பாடி பழனிசாமி அரசு, நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில், தந்தை பெரியார் பெயரை நீக்கிவிட்டு ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்து இருக்கின்றது.

ஆர்எஸ்எஸ் சங் பரிவார் வகுத்த வியூகத்தின்படி, தில்லி எஜமான் மோடி பிறப்பித்த ஆணையை, அடிமை எடப்பாடி நிறைவேற்றி இருக்கின்றார். தமிழ்நாட்டின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டார்.

ஏற்கனவே, சென்னை வான் ஊர்தி நிலையத்தில் இருந்து, காமராசர் அண்ணா பெயரை நீக்கியதையும் அடிமை எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாக, இப்போது இந்த மாற்றம் நடந்தது இருக்கின்றது.

தமிழக முதல் அமைச்சர் மட்டும் அன்றி நெடுஞ்சாலைத் துறைக்கும் பொறுப்பு வகிக்கின்ற எடப்பாடிக்கு, சூடு சொரணை இருந்தால், தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, இந்தப் பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும்; ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்ற பெயர் தொடர வேண்டும். தவறினால், மே மாதம் பொறுப்பு ஏற்கின்ற திமுக ஆட்சி தந்தை பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories