அரசியல்

“பழனிசாமியின் ஆளுமையையே உருவகப்படுத்தினேன்” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆ.ராசா!

இடபொறுத்தமற்று சித்தறிக்கப்பட்டு தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக என் அடிமனதின் ஆழத்திலிருந்து எனது வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன் என ஆ.ராசா கூறியிருக்கிறார்.

“பழனிசாமியின் ஆளுமையையே உருவகப்படுத்தினேன்” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆ.ராசா!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் பழனிசாமி குறித்து தான் பேசியது திரித்து பரப்பப்படுவது தொடர்பான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மேனாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பான அவரது விளக்கக் குறிப்பில், “இரண்டு நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி அவர்களை பற்றி நான் பேசியது குறித்து சமூக வளைதளங்களிலும், ஊடங்களிலும், பரப்பபட்டு வரும் செய்திகளுக்கு விளக்கமளித்தேன்.

தி.மு.கவின் தலைவர் வணக்கத்திற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் ஆளுமையையும், தமிழக முதல்வர் மாண்புமிகு பழனிச்சாமி அவர்களின் ஆளுமையையும் பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி உவமானமாக தேர்தல் பரப்புரையில் நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தறிக்கபடுவதை விளக்கினேன்.

என்றாலும், அது குறித்த விவாதம் தொடர்ந்ததால் நேற்று கூடலூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி குறித்தோ, அவரது அன்னையார் குறித்தோ புகழுக்கு களங்கம் விளைவிக்க நான் எண்ணியதில்லை என்றும், இரு தலைவர்கள் குறித்த அரசியல் ஆளுமை பற்றி நான் பேசினேன் என்று நானும், ஒரு தாயின் எட்டாவது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கம் அளித்தேன்.

இதற்கு பிறகும், முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தி நாளிதழ்களில் படித்து மிகுந்த வேதனை அடைந்தேன். இடபொறுத்தமற்று சித்தறிக்கப்பட்டு தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக என் அடிமனதின் ஆழத்திலிருந்து எனது வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். இன்னும் ஒருபடி மேலேபோய் முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்பட்டதாக உணர்வாரேயானால், எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவித்து கொள்வதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை.

முதல்வருக்கும், அவரது கட்சி காரர்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது, எனது பேச்சு இரண்டு தலைவர்களை பற்றிய தனி மனித விமர்சனம் இல்லை. பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமை குறித்த மதிப்பீடும் மற்றும் ஒப்பீடும் தான். முதல்வர் பழனிசாமி காயப்பட்டு கலங்கியதற்காக எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவிக்கும் அதே வேலையில் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன்.

என் மீது தொடுக்கப்பட்ட 2-ஜி வழக்கை விசாரித்த நீதிபதி சைனி.., தனது தீர்ப்பின் கடைசி பக்கத்தில் இந்த வழக்கு எப்படி புணையப்பட்டது என்பதனை நான்கு ஆங்கில வார்த்தைகளால் முடித்தார் Misreading, Selective reading, Non-reading and Out of Context reading of files என்று குறிப்பிட்டார். கோப்புகளை தவறாக படித்ததாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலகோப்புகளை படித்ததாலும், சில கோப்புகளை படிக்காமல் விட்டதாலும், சில கோப்புகளை இடப்பொருத்தமற்று படித்ததாலும், ஏற்பட்டதே இந்த வழக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சனைக்கு உட்படுத்தப்பட்ட எனது 40 நிமிட உரையை முழுமையாக நீங்கள் கேட்டால், இதே தீர்ப்பை நீங்கள் வழங்குவீர்கள் என நம்புகிறேன்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories