அரசியல்

“EPS வருகைக்காக ராட்சத கட் அவுட் வைத்த அதிமுகவினர்” இன்னும் எத்தனை விபத்துகள் நடக்கவேண்டும்? - திமுக MLA

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவினர், பேனர்கள், கட் அவுட் அமைக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் , இன்று வரை கொஞ்சம் கூட திருந்தவில்லை என திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் சாடியுள்ளார்.

“EPS வருகைக்காக ராட்சத கட் அவுட் வைத்த அதிமுகவினர்”  இன்னும் எத்தனை விபத்துகள் நடக்கவேண்டும்? - திமுக MLA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உங்களின் ஆடம்பரத்திற்கும் , வீண் விளம்பரத்திற்கும் இன்னும் எவ்வளவு விபத்துகள் நடக்க வேண்டும்? முதலமைச்சர் பழனிசாமி அவர்களே! பதில் சொல்லுங்கள் எனக் குறிப்பிட்டு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில், “இன்று, முதல் அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கிறோம் என்ற பெயரில் , முதல் அமைச்சர் வருகின்ற வழிகளில் அதிமுகவினரால் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் , சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் நடக்கின்ற நடைபாதையில் பொதுமக்கள் நடக்க முடியாத அளவிற்கு போக்குவரத்திற்கு இடையூறாக கட் அவுட்கள் வைத்து கட்டி உள்ளார்கள். 10X10 அளவு ,16X10 அளவு ,20X10 அளவு கொண்ட 500 க்கும் மேற்பட்ட பிரமாண்டமான ராட்சத கட் அவுட்கள், ஆர்ச்சுகள் , பேனர்கள் கட்டப்பட்டுள்ளன . மேலும் பல இடங்களில் கட் அவுட்கள் மற்றும் பேனர்கள் வைக்க தார் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது.

“EPS வருகைக்காக ராட்சத கட் அவுட் வைத்த அதிமுகவினர்”  இன்னும் எத்தனை விபத்துகள் நடக்கவேண்டும்? - திமுக MLA

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மீறி இதுபோன்ற செயல்களில் கோவையில் , அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முதல் அமைச்சர் வருகின்ற வழிகளில் சிங்காநல்லூர், சவுரிபாளையம் , உப்பிலிபாளையம் போன்ற பகுதிகளில் சாதாரண ஏழை – எளிய மக்கள் சாலையோரங்களில் வைத்திருக்கும் கடைகளை இரண்டு நாள்களுக்கு மூட சொல்லி கோவை மாநகர் காவல் துறை உத்தரவிட்டுருப்பதாக தெரிய வருகிறது. இது அன்றாடம் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்தும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயல் ஆகும்

ஏற்கனவே மேட்டுப்பாளையம் அருகே ராமம்பாளையம் பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் , அதிமுக இரும்பு பைப் கொடிக்கம்பம் நட்ட ராகுல் என்கின்ற பூவரசன் ( 25 வயது ) என்ற இளைஞர் இரும்பு பைப்பில் கட்டப்பட்ட அதிமுக கொடியை நட்ட பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும் கோவை ,கோல்ட்வின்ஸ் பகுதியில் அதிமுகவினரின் கொடிக்கம்பம் விழுந்து தடுமாறிய ராஜேஸ்வரி என்ற இளம்பெண் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் அந்த பெண்ணின் இரண்டு கால்களிலும் பலத்த காயமடைந்தார்.

கடந்த 2017ம் ஆண்டு, கோவை மருத்துவக் கல்லூரி அருகே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக விதிமீறி வைக்கப்பட்ட அதிமுகவினரின் ராட்சத கட்-அவுட்டால் ரகு என்ற இளைஞர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட பொதுநல மனு ( எண் W.P. NO- 31084 OF 2017 ) மீது 30.11.2017 தேதி அன்று பிறப்பித்த உத்தரவுப்படி கட்டடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் தேவையில்லாமல் கட் அவுட்களையும், பேனர்களையும் வைப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதா என்பதைக் அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர் .

ஆனாலும் கோவையில் , எல்லாவற்றிலும் அருவருக்கத்தக்க அரசியல் விளம்பரம் தேடும் , எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவினர், இத்தனை விபத்துகள் நடந்திருந்தும் , நீதிமன்றம் உத்தரவிட்டும் , இன்று வரை கொஞ்சம் கூட திருந்தவில்லை. 'பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' போல , உங்களின் ஆடம்பரத்திற்கும் , வீண் விளம்பரத்திற்கும் இன்னும் எவ்வளவு விபத்துகள் நடக்க வேண்டும்? முதல் அமைச்சர் பழனிசாமி அவர்களே! பதில் சொல்லுங்கள்

நீதிமன்றம் தொடர்ந்து எச்சரித்தும் கூட, கோவையில் அவைகள் மதிக்கப்படாத நிலை தொடர்கின்றது. அதிகாரிகள் - காவல்துறையினரின் பாரபட்சமான நடவடிக்கைகள் தான் இதற்கு காரணமாகும். அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துபவர்களைக் கண்டு அதிகாரிகளும், காவல்துறையினரும் அஞ்சி நடுங்கி, தங்களின் கடமைகளை செய்ய தவறுகின்றனர். நீதிமன்ற அறிவுரைக்குப் பின்னரும் இது போன்ற மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து அதிமுக வினர் ஈடுபடுவதற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

ஆகவே கோவையில் , சட்ட விரோதமான முறையில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ராட்சத கட் அவுட்கள், ஆர்ச்சுகள் , பேனர்களையும் உடனே அகற்றுவது மட்டுமின்றி, சட்டத்தை மீறி இவற்றை அமைத்த அதிமுக வினர் மீது கோவை மாநகர் காவல் துறை பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories