அரசியல்

“ஆளுநரை எடப்பாடி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன்; தி.மு.க கேட்கும்” : மு.க.ஸ்டாலின் கண்டன உரை!

காலிலோ விழுந்து பதவியைப் பெற்றீர்களே, மசோதாவை நிறைவேற்ற ஆளுநரிடம் மன்றாட முடியாதா? என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

“ஆளுநரை எடப்பாடி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன்;  தி.மு.க கேட்கும்” : மு.க.ஸ்டாலின் கண்டன உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“சமூகநீதியை நிலைநாட்ட, மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு கிடைக்க தி.மு.க. மேற்கொள்ளும் முயற்சிகளை அரசியல் என்று சொன்னால் அதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்; அரசியல்தான் செய்கிறோம்!” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரையும் - அதற்கு அழுத்தம் தரத் தவறி, மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.க. அரசையும் கண்டித்து, இன்று (24-10-2020), ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க. சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“அன்புள்ள, கழகத்தினுடைய பொருளாளர் அருமை நண்பர் டி.ஆர்.பாலு அவர்களே, கழகத்தினுடைய துணைப் பொதுச் செயலாளர் அன்புக்குரிய டாக்டர்.பொன்முடி அவர்களே, மாநிலங்களவை உறுப்பினர்களே, மக்களவை உறுப்பினர்களே, நாடாளுமன்றக்குழு துணைத்தலைவர் கனிமொழி அவர்களே, கழகத்தினுடைய முதன்மைச் செயலாளர் அன்புக்குரிய கே.என்.நேரு அவர்களே, மாவட்டக் கழகத்தின் செயலாளர் அன்புக்குரிய மா.சுப்பிரமணியன் அவர்களே மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்திருக்கும் மாவட்டக்கழகத்தின் நிர்வாகிகளே, தலைமைக் கழகத்தின் நிர்வாகிகளே, இளைஞரணியின் செயலாளர் தம்பி உதயநிதி அவர்களே, மகளிரணி, மாணவரணி, தொழிலாளர் அணி, தொண்டர் அணி, வழக்கறிஞரணி போன்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளே, பகுதிக் கழக, வட்டக் கழக, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த செயல்வீரர்களே, பெருந்திரளாகத் திரண்டிருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.

“ஆளுநரை எடப்பாடி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன்;  தி.மு.க கேட்கும்” : மு.க.ஸ்டாலின் கண்டன உரை!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் முன்னுரிமை வழங்கிட, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 40 நாட்களாகியும் தமிழக ஆளுநர் அவர்கள் இன்னும் அனுமதி தரவில்லை. அதனைக் கண்டித்தும் அந்த அனுமதியைப் பெற்றுத்தர வக்கற்ற முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான ஆட்சியைக் கண்டித்தும் நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டம்தான் இந்த ஆர்ப்பாட்டம்.

நீட் தேர்வு என்பது பல்வேறு கொடுமைகளை, அநீதிகளை இழைக்கக்கூடியது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் ‘பலிபீடமாக’ அமைந்திருக்கிறது. அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டிய நிலையைச் சிதைத்து கோச்சிங் சென்டர்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்திப் படிக்கவேண்டிய, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான திட்டம்தான் இந்த நீட் என்பது! நடைபெற்றிருக்கக்கூடிய நீட் தேர்வில் ஆள் மாறாட்டங்கள் நடந்திருக்கின்றன. நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றிருக்கின்றன. அதை எதிர்த்துப் பல்வேறு வழக்குகள் நடைபெறுகின்றன. இன்னும் குழப்பமான சூழல்தான் நிலவுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் நீட் தேர்வே கூடாது என்பதுதான் நம் கொள்கை. தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தவரை, தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை. நான் இன்னும் வெளிப்படையாகச் சொல்கிறேன். அரசியலில் நமக்கு எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், அம்மையார் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது - முதலமைச்சராக இருந்தபோது கூட நீட் தமிழ்நாட்டிற்குள் வரவில்லை. ஆனால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் ஆட்சியில், ஓர் அடிமையாக அவர் இருக்கும் காரணத்தால், இந்த நீட் தமிழகத்தில் நுழைந்திருக்கிறது.

“ஆளுநரை எடப்பாடி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன்;  தி.மு.க கேட்கும்” : மு.க.ஸ்டாலின் கண்டன உரை!

எடப்பாடி அவர்களைப் பொறுத்தவரையில் அஞ்சி நடுங்கி, கூனிக்குறுகி, எப்படி முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்காக காலில் விழுந்தாரோ, அதேபோல் தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள நீட் தேர்வை அனுமதித்திருக்கிறார். இதுதான் உண்மை. நான் இன்னும் கேட்கிறேன். 2017, பிப்ரவரி 1-ம் தேதி சட்டமன்றத்தில் ‘நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று, தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆதரித்து ஏகமனதாக இரண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அப்படி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் டெல்லியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டன. எப்போது, ஏழு மாதங்கள் கழித்து. அப்படித் திருப்பி அனுப்பப்பட்ட செய்தியை இந்த எடப்பாடி அரசு வெளியிட்டதா? சட்டமன்றத்தில் சொன்னார்களா, அறிக்கையாக வெளியிட்டார்களா, செய்திக்குறிப்பில் இடம்பெற்றதா, கிடையாது. ஆனால் நீதிமன்றத்துக்கு அந்தச் செய்தி வருகிறது. நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்சினை வருகிறது. அப்போதுதான் 23 மாதங்கள் கழித்து டெல்லியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட செய்தி நமக்கெல்லாம் தெரியவருகிறது.

இதை நான் சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் எடுத்துவைத்தேன். எடுத்துவைத்த நேரத்தில்கூட அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார் சட்டத்துறை அமைச்சர். ஒப்புக்கொண்டது மட்டுமல்ல, எங்கள் ஆட்சியில் நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம், இதைச் சட்டப்படி சந்திப்போம் என்று உறுதி சொல்லப்பட்டது. இதுதான் நடந்தது. நான் இன்னும் கேட்கிறேன். என் கையிலே இருப்பது அ.தி.மு.க.வின் செயற்குழுத் தீர்மானங்கள். பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அதில் ஒரு தீர்மானம், ‘நீட் என்னும் அகில இந்திய நுழைவு மற்றும் தகுதித்தேர்வை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்துவருகிறது’. - மகிழ்ச்சிதான்! தொடர்ந்து சொல்கிறார்கள், ‘மாநிலங்களின் கல்வி உரிமையில் மத்திய அரசு தலையிடுவதாலும் கிராமப்புற ஏழை, எளிய தலைமுறை மாணாக்கர்கள் மருத்துவக்கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையில் இருப்பதாலும், கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாலும், நீட் தேர்வைக் கைவிடும்படி மத்திய அரசை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது’ என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். ஆனால் இன்று என்ன நடந்துகொண்டிருக்கிறது?

“ஆளுநரை எடப்பாடி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன்;  தி.மு.க கேட்கும்” : மு.க.ஸ்டாலின் கண்டன உரை!

அ.தி.மு.க நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும் அவர்கள் ‘நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம். ஒருக்காலும் இதை அனுமதிக்க மாட்டோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் கேட்கிறேன். இவ்வளவும் சொல்லிவிட்டு, தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றிவிட்டு, இப்போது நீட் தேர்வைத் தடுக்கும் முயற்சி நடக்கிறதா என்றால் இல்லை. என்ன நடந்திருக்கிறது? ஒன்று இரண்டல்ல, 13 மாணவ, மாணவிகள் நீட் தேர்வின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போயிருக்கிறார்கள்.

நான் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் சொல்லிக்கொள்கிறேன். ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் நான் மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி உதயமான உடனே, இந்த நீட் தேர்வை சட்டப்படி ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம், அதில் முழுமையாக வெற்றிபெறுவோம்.

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோமே, மசோதாவை நிறைவேற்றினோமே, மசோதாவை வரவேற்று கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருக்கிறாரே, இப்போதாவது அலட்சியம் காட்டாமல் இதை நிறைவேற்ற முயற்சியெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசியிருக்கிறோமே; அதற்குப்பிறகு ஆளுநருக்கு அந்த மசோதா அனுப்பப்பட்டது. 40 நாட்களாகிவிட்டன. இதுவரையிலும் அந்த மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி தரவில்லை.

“ஆளுநரை எடப்பாடி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன்;  தி.மு.க கேட்கும்” : மு.க.ஸ்டாலின் கண்டன உரை!

ஆளுநரைப் பொறுத்தவரை மிகவும் சுறுசுறுப்பானவர். ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவர். வரைமுறைகளை மீறி, ‘தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியா, கவர்னரா?’ என்று சந்தேகம் வரக்கூடிய அளவுக்குச் சுற்றுப்பயணம் செய்தவர். அவ்வளவு சுறுசுறுப்பானவர் இதில் முடிவெடுக்கத் தாமதம் செய்ய வேண்டிய அவசியம் என்ன, அலட்சியம் என்ன? ‘எடப்பாடி அரசு எப்படி நம்மிடம் கேள்வி கேட்கலாம்? எடப்பாடி கேட்க மாட்டார்’ என்பதுதான் அவர் அலட்சியத்துக்குக் காரணம்.

எடப்பாடி கேட்காவிட்டாலும் இந்த ஸ்டாலின் கேட்பான்; திராவிட முன்னேற்றக் கழகம் கேட்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதற்கான அடையாளம்தான் இந்தப் போராட்டம். நீட் தேர்வின் முடிவுகள் வந்துவிட்டன. சில நாட்களில் கவுன்சிலிங் தொடங்கியாக வேண்டும். ஆளுநர் ஒப்புதல் அளித்தால்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். நான் கேட்கிறேன். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலைக்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினீர்களே, இதுவரை அதற்கு விடிவுகாலம் வந்திருக்கிறதா? என்ன நடவடிக்கை ஆளுநர் எடுத்திருக்கிறார்?

அதுபோல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் கடந்த 21-ஆம் தேதி, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினேன். கடிதம் அனுப்பியது மட்டுமல்லாமல், அ.தி.மு.க. இதற்காகப் போராடும்போது நாங்களும் இணைந்து போராடத் தயார் என்று அறிவித்திருந்தேன். நேற்று முன் தினம் ஆளுநர் அவர்கள் எனக்குப் பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். என்னை மதித்து பதில் கடிதம் அனுப்பியதற்காக ஆளுநர் அவர்களுக்கு முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

“ஆளுநரை எடப்பாடி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன்;  தி.மு.க கேட்கும்” : மு.க.ஸ்டாலின் கண்டன உரை!

ஆளுநரின் பதில் கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருக்கிறது? மாணவர்களின் கண்ணீரைத் துடைக்கிறேன் என்றிருக்கிறதா, அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றிருக்கிறதா, இல்லை. ‘நான் இதைப் பரிசீலித்து சட்டரீதியாக முடிவெடுக்க மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஆகும்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஏற்கெனவே 40 நாட்கள். அதுவே நீண்டகாலம். இதற்கென்று சட்டப்படி நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில்தான் இந்த இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பிறகு எதற்கு ஆளுநர் சட்டப்படி பரிசீலனை செய்ய வேண்டும்? அதற்கு எதற்கு நான்குவார கால அவகாசம்? இந்த மசோதா நிறைவேறி நடைமுறைக்கு வந்தால்தான் 300 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்கும். இல்லையென்றால் எட்டு பேர்கள்தான் மருத்துவர்களாக முடியும். இது எவ்வளவு பெரிய அநீதி! நம் முன்னால் நடக்கும் இந்த அநியாயத்தைக் கண்டு நம்மால் சும்மா இருக்க முடியுமா?

‘தாமதம் செய்தால் எடப்பாடி அரசு இதைக் கைவிட்டுவிடும்’ என்று ஆளுநர் நினைத்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் அலட்சியத்துடன் இருக்கிறார். அ.தி.மு.க. அப்படி இருக்கலாம். ஆனால் தி.மு.க. அப்படி இருக்காது. நாங்கள் விட மாட்டோம். ஆளுநரை ஒப்புதல் கொடுக்கவைக்க என்னென்ன வழிவகை உண்டோ அத்தனையையும் திமுக மேற்கொள்ளும் என்று உறுதியளிக்கிறேன். இந்த லட்சணத்தில் முதல்வர் எடப்பாடி அறிக்கை விட்டிருக்கிறார். ‘ஸ்டாலின் அரசியல் செய்கிறார், திமுக அரசியல் செய்கிறது’ என்று. எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் பின்னே என்ன அவியலா செய்துகொண்டிருக்கும்?

“ஆளுநரை எடப்பாடி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன்;  தி.மு.க கேட்கும்” : மு.க.ஸ்டாலின் கண்டன உரை!

இன்றைக்கு நீங்கள் எல்லாம் அரசியல்வாதிகளாக இருக்கலாம்; பின்னாளில் அனாதையாகப்போகிறவர்கள் நீங்கள். நாங்கள் அரசியல் செய்வது உண்மைதான். சமூகநீதியை நிலைநாட்ட, மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு கிடைக்க தி.மு.க. மேற்கொள்ளும் முயற்சிகளை அரசியல் என்று சொன்னால் அதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். இதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வக்கற்ற வகையற்ற, போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி வேண்டுமானால் அவதூறு பேசிக்கொண்டிருக்கலாம்.

நான் சொல்ல விரும்புகிறேன். இது முதற்கட்ட போராட்டம். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரையில் தி.மு.க. தொடர்ந்து போராட்டத்தை நடத்திடும் - நடத்திடும் என்று உறுதியளிக்கிறேன். நான் கேட்கிறேன்; இதே பதவியைப் பெறுவதற்காகத் தவழ்ந்து போய், ஊர்ந்துபோய் யாருடைய காலிலோ விழுந்து பதவியைப் பெற்றீர்களே, மசோதாவை நிறைவேற்ற ஆளுநரிடம் மன்றாட முடியாதா? அவரிடம் தவழ்ந்து போகச் சொல்லவில்லை. போய்க் கேட்க முடியாதா? இந்த நிலையில் நீங்கள் முதலமைச்சர் பதவியில் உட்கார்ந்திருப்பது நியாயமா? இது அநியாயம் என்பதை வரவிருக்கும் தேர்தலில் மக்கள் நிரூபிப்பார்கள். தி.மு.க தன் போராட்டத்தைத் தொடரும், தொடரும் என்று கூறிக்கொண்டு இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என கழகத் தலைவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories