அரசியல்

“மும்மொழிக்கு எதிர்ப்பு - மற்ற மோசமான அம்சங்களில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன?”: பதில் சொல்வாரா முதல்வர்!

புதிய கல்விக்கொள்கையில் உள்ள மற்ற மோசமான திட்டங்கள் குறித்து அ.தி.மு.க அரசி நிலைபாடு என்ன என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“மும்மொழிக்கு எதிர்ப்பு - மற்ற மோசமான அம்சங்களில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன?”: பதில் சொல்வாரா முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் மத்திய அமைச்சரவை கடந்த 29-ம் தேதி ‘புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு ஒப்புதல் அளித்தது. ஊரடங்குக் காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசால் மறைமுகமாகப் புகுத்தப்படும் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள், மும்மொழித்திட்டத்தைத் திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் 'தேசிய கல்விக் கொள்கை-2020'-ஐ கடுமையாக எதிர்த்து வந்தனர்.

அதன் ஒருபகுதியாக , தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை முழுமையாக எதிர்க்க வேண்டுமெனவும் - செயல்படுத்திட மறுக்க வேண்டும் எனவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினர்.

“மும்மொழிக்கு எதிர்ப்பு - மற்ற மோசமான அம்சங்களில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன?”: பதில் சொல்வாரா முதல்வர்!

இதனிடையடுத்து புதிய கல்விக்கொள்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு வெளியிட்ட அறிக்கையில், “தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், அ.தி.மு.க அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது. இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ, பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள தமிழக முதல்வருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “தேசிய கல்விக் கொள்கை-2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி!

மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்” எனக் கேட்டுகொண்டுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது போலவே தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழித்திட்டத்தை மட்டுமே தற்போது எதிர்த்துள்ளது. அதனைத் தாண்டியும் மாணவர்கள் நலன் பாதிக்கும் திட்டங்கள் பல இருக்கிறது. மேலும், இது தொடர்பான பாதக அம்சங்களை முதல்வருக்கு எழுதிய கடித்ததில் அனைத்துக் கட்சி தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக, தமிழகக் கல்விக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், கல்வியில் வேதக் கலாச்சாரத்தைத் திணிப்பது, இடஒதுக்கீடு குறித்து எதுவும் சொல்லாமல் சமூகநீதியைப் புறக்கணிப்பது, பெண் கல்வி குறித்து கவலைப்படாது - பெண்ணுரிமையைக் காவு கொடுத்திருப்பது, மூன்று வயதுக் குழந்தையை முறைசார்ந்த பள்ளியில் சேர்த்து குழந்தைகளின் உரிமையைப் பறிப்பது, தொழில் கல்வி என்ற பெயரால், தமிழகத்தில் பல்லாண்டுகளுக்கு முன்னரே தோல்வி கண்ட குலக் கல்வியை மீண்டும் அமல்படுத்துவது, மதிய உணவு வழங்கும் திட்டத்தை மாற்றியமைப்பது.

மேலும், மாநில அளவில் 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு, 10+2 என்று இருக்கின்ற வெற்றிகரமான 'பிளஸ் டூ' கல்வி முறையை 5+3+3+4 என்று மாற்றியமைப்பது, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பறிக்கும் விதத்திலும் - மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் விதத்திலும் உயர் கல்வியை வகுத்திருப்பது, தன்னாட்சியுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது போன்ற பாதக அம்சங்கள் நிறைந்துள்ளனர்.

“மும்மொழிக்கு எதிர்ப்பு - மற்ற மோசமான அம்சங்களில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன?”: பதில் சொல்வாரா முதல்வர்!

அதுமட்டுமல்லாது, தமிழைப் புறகணித்து இந்தி சம்ஸ்இருத்தை திணிக்கும் வகையில், 5ம் வகுப்பு வரை எங்கெல்லாம் முடிகிறதோ அங்கு பயிற்றுமொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். முடிந்தால் 8-ஆம் வகுப்பு வரையிலும் தொடரலாம்.

ஒரு மொழியைக் கற்பிக்கவும், கற்றுக் கொள்ளவும் அந்த மொழி பயிற்றுமொழியாக இருக்க வேண்டியதில்லை.

மூன்று மொழித்திட்டத்தை நிறைவேற்ற மற்ற மாநிலங்களில் ஆசிரியர்களை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் இலக்கியத்தைப் பாதுகாத்து வைக்கலாம்; இந்தியா முழுமையாக வளர்ச்சி பெற்ற பிறகு நாளைய தலைமுறை அந்த மொழி பற்றி பிற்காலத்தில் அறிவு பெற உதவும் போன்ற திட்டங்கள் உள்ளது.

இத்தகைய மோசமான அம்சங்கள் நிறைந்திருக்கும் நிலையில் புதிய கல்விக்கொள்கையில் உள்ள மற்றத் திட்டங்கள் குறித்து அ.தி.மு.க அரசி நிலைபாடு என்ன? அதனையும் துணிந்து அ.தி.மு.க அரசு எதிர்க்குமா? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories