அரசியல்

“அமைச்சர் விஜயபாஸ்கரும், எம்.எல்.ஏ ஆறுமுகமும் மன்னிப்புக் கேட்கவேண்டும்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!

அரசு விழாவில், அதிகாரியை மிரட்டி, இழிவுபடுத்திய அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ., ஆறுமுகம், அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கர் உள்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சருடன் மேடையில் இருந்த ஆறுமுகம் எம்.எல்.ஏ., திடீரென தனக்கு அருகில் நின்ற மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலியை இழிவுசெய்யும் விதமாக ஒருமையில் பேசியதுடன், அவரை மேடையை விட்டு இறங்கும்படி கூறினார். எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கரும், அவரை ஒருமையில் திட்டினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்பர் அலி விழா மேடையை விட்டு இறங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் தன் கண்முன்னாலேயே நிகழ்ந்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டுகொள்ளாமல் இருந்தார்.

“அமைச்சர் விஜயபாஸ்கரும், எம்.எல்.ஏ ஆறுமுகமும் மன்னிப்புக் கேட்கவேண்டும்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!

அ.தி.மு.க-வினர் அதிகாரியை இழிவு செய்யக் காரணம், அவர் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியின் சொல் கேட்டு, அவர்களுக்குச் சாதகமாக முடிவை அறிவிக்காததே எனத் தெரிய வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட வார்டில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முத்துசுப்பிரமணியன் என்பவரும், தி.மு.க சார்பில் செல்வம் என்பவரும் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கையில் முத்து சுப்பிரமணியத்தை விட செல்வம் 1,780 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

தி.மு.கவின் செல்வம் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கூடாது என்று கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ., ஆறுமுகம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்று தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த மாவட்ட வழங்கல் அலுவலரான அக்பர் அலி, தி.மு.க. வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கினார். இதில் ஏற்பட்ட விரக்தியில்தான் அரசு விழாவில் எம்.எல்.ஏ., ஆறுமுகம் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் அதிகாரியிடம் இழிவாகப் பேசியுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தங்களுடைய ஆசைப்படி, தி.மு.க வெற்றியை மறைக்க இந்த அதிகாரி உடந்தையாக இருந்து ஒத்துழைக்கவில்லை என்பதால், பொதுமக்கள் முன்னிலையில், பொறுப்புள்ள அரசு அதிகாரி அவமானப்படுத்தப்பட்டு, மிரட்டப்பட்டுள்ளார்.

அரசு விழாவில், அதிகாரியை அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் மிரட்டியது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. அவர்கள் இருவரும் அதிகாரி அக்பர் அலியிடம் உடனே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியினர் எத்தகைய மிரட்டல் தாண்டவம் ஆடியுள்ளார்கள் என்பதற்கு உதாரணம் இது.

சேலத்தில் அரசு அதிகாரி ஒருவரை எம்.எல்.ஏ ஒருவர் மிரட்டினார். புதுக்கோட்டையில் அமைச்சரே மிரட்டுகிறார். அதிகாரிகளையே அவமானப்படுத்தி அச்சுறுத்தும் அராஜகத்தையும், அநாகரிகத்தையும் அ.தி.மு.க தொடங்கிவிட்டது. தேர்தல் தோல்வி அவர்களை நிலைகுலைய வைத்துள்ளது. கட்சி ஆட்சி இன்று இருக்கும், நாளை போய்விடும்; ஆனால் அரசு என்பது என்றும் இருக்கும். அதன் அங்கமான அரசு அதிகாரிகளுக்கு உரிய மரியாதையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்திட வேண்டியது முதலமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோர்தம் பொறுப்பு என்பதை அவர்கள் இருவரும் உணர வேண்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories